‘சைக்கோ’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Psycho Poster

 

Psycho Poster

தொள்ளாயிரத்து தொண்ணூற்றியொன்பது பேரைக் கொலை செய்து தலைகளை சேகரித்து வைத்துக் கொண்டு ஆயிரமாவது தலையை அங்குலிமால் தேடிக்கொண்டிருந்த போது ஆயிரமாவது மனிதனாக புத்தர் அவனிடம் போனார், அப்புறம் அங்குலி மால் மாறிவிட்டான் என்ற அந்தக்கால சில வரிக் கதையை அப்படியே கொஞ்சம் இந்த நவீன யுகத்திற்கு மாற்றினால், அதை அழகான துப்பறியும் கதையாக மாற்றி விறுவிறுப்பாக தந்தால் எப்படி இருக்கும். சிறப்பாக தரமுடியும் என்று காட்டியிருக்கிறார் மிஸ்கின்.

கொங்கு மண்டலத்தில் இளம்பெண்கள் காணாமல் போவதும் சில நாட்களில் தலையில்லா முண்டங்களாக உடல்கள் கண்டெடுக்கப் படுவதும் வாடிக்கையாக இருக்கிறது. அதே வரிசையில் பண்பலை வானொலியின் நட்சத்திரம் தாகினி காணாமல் போக, அவரை ஒருதலையாக காதலிக்கும் கண்தெரியாக் காதலன் தேடுகிறான். கண், ஆள், அம்பு, சேனை என எல்லாமும் இருக்கும் காவல்துறையே தடுமாறும் போது, கண்கள் இல்லாக் காதலன் பிடித்துவிடுவானா, யார் இந்தக் கொலைகளை செய்வது, ஏன் – என்ற திரை முடிச்சுகளை அழகாக போட்டு முழு நீள படமாகத் தந்திருக்கிறார் மிஷ்கின்.

உதயநிதிக்கு சொல்லிக்கொள்ளும் படி நல்ல பாத்திரம் நல்ல திரைப்படம். கண்பார்வை இல்லாத ஸ்டைலான இளைஞன் பாத்திரம். மிக நன்றாகச் செய்திருக்கிறார்.

‘அட… மணிரத்னத்தின் நாயகி இவ்வளோ அழகா இருக்காரே இந்தப் படத்துல!’ என்று சொல்லிக்கொண்டே ஒளிப்பதிவு யாரென்று பார்த்தால், பி சி ஸ்ரீராம் என்று இருக்கிறது. ‘அதான்!’.

அழகுப் பதுமையாக ஆனால் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்தும் முக்கிய பாத்திரத்தின் கனமறிந்து வேண்டிய நடிப்பை தந்து சிறப்பாக செய்திருக்கிறார் அதிதி ராவ்.

சக்கர நாற்காலியில் முடங்கி, மண்டை பலத்தால் வேலைகள் செய்யும் பாத்திரத்தில் நன்றாகச் செய்திருக்கிறார்  நித்யா மேனன்.

படத்தின் நாயகனே இவன்தான் என்று சொல்லும் அளவிற்கு அங்குலிமாலாக, குழந்தையைப் போல ஆனால் கொடூரமான மனம் கொண்ட அந்தப் பாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார் ராஜ்குமார்.

இசை என்பது காட்சிகளுக்குத் தேவையான சத்தத்தை கூட்டித் தருவது மட்டுமல்ல, தேவையிருப்பின் சத்தங்களை நீக்குவதும்தான் என்று அட்டகாசமாக நிரூபிக்கிறார் இசைஞானி இளையராஜா. ‘உன்ன நெனச்சி’ பாடல் நன்று.

குழந்தைகளின் தவறுகளை மன்னித்து களைய முயலாமல், அவர்களுக்கு பெருந்தண்டனைகளை கொடுப்பது எப்படி அவர்கள் மனதையே பாதித்து வாழ்க்கையை பாதிக்கிறது, அதன் வழியே உலகத்தை பாதிக்கிறது என்பதை ரேய்ச்சல் டீச்சரின் வழியே உணர்த்துகிறது படம்.

ஓர் ஊரறிந்த பிரபலம் தாகினி, பொதுவெளியில் அத்தனை பேர் முன்னிலையில் போது நிகழ்வில் இப்படியா நடந்துகொள்வார், இப்படியா நடத்துவார் நாயகனை போன்றவை சறுக்கல்கள்.

இளம்பெண்ணை படுக்க வைத்து அப்படியே தலையை வெட்டுவார்கள், நித்யாமேனன் பாத்திரம் கெட்ட வார்த்தைகளை திரையில் அப்படியே கொட்டித் தெறிக்க விடும் – போன்ற சங்கதிகளால் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கலாம்.

வி டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘சைக்கோ’ : விறுவிறு வயது வந்தோர் படம்.

: திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *