கொரோனா காலத்தில் நடந்த எளிமையான திருமணம்

🌸

நாதஸ்வரத்தில் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ இசைக்க கூடவே தவிலும் கலக்க,
‘அடேயப்பா! ரொம்ப நாள் கழிச்சி ஒரு கல்யாணத்துக்கு வர்றோம்!’ என்ற எண்ணம் வந்தது.

40 பேருக்கு அரசு அனுமதியளிக்கிறது என்ற போதிலும், அதில் பாதியளவே கூடியிருந்தனர் வீட்டிலேயே நடைபெறும் திருமணத்திற்கு. மலர்ச்சி மாணவர் ஜெகதீசனின் மகள் திருமணம், அவரும் மலர்ச்சி மாணவி.

ஊரடங்கு நேரமென்பதால் திருமணப் பத்திரிக்கையடித்து வாட்ஸ்ஆப்பிலும், முடிந்த வரை நேரிலும் தந்து ஊரார் உலகத்திற்குச் சொல்லி நடைபெறும் இந்தத் திருமணத்தின் பத்திரிக்கை மிக மிக வித்தியாசமானது. முறைப்படி எழுதி அச்சிடப்பட்ட பத்திரிக்கையின் கடைசி பத்தியில் இருக்கும் ‘இப்போதிருக்கும் நிலையை கருத்தில் கொண்டு, தாங்கள் தங்கள் வீட்டிலிருந்தே மணமக்களை ஆசீர்வதிக்கும்படி வேண்டுகிறோம்’ என்பதே வியக்க வைக்கும் ஹைலைட்.

ஒரு காருக்கு இ பாஸ் ஏற்பாடு செய்து டிரைவரோடு அனுப்பி வைத்து, தாலி எடுத்துக் கொடுக்கும் பொறுப்பையும் தந்து விட்டார் ஜெகதீசன்.

மாப்பிள்ளை வீடு, பெண் வீடு, முக்கிய உறவினர்கள் என இருபது பேர், புரோகிதர்கள் இருவர், ஃபோட்டோ – வீடியோவிற்கே ஐவர் என எல்லாமும் சேர்த்து 30 – 35 பேர் இருந்திருக்கலாம்.

கிட்டத்தட்ட எல்லோருமே மூன்றடுக்கு முகக்கவசத்தோடு இருந்தோம்.

அலங்கரிக்கப்பட்ட கலசங்கள் வரிசையாக வைத்து ‘சித்ரா நக்‌ஷசத்திரே துலா ராஸ்ஸி..’ ‘குல தேவதா பிரதிதேவதா…’ என நிறைய மந்திரங்கள் சொன்னாலும் 20 நிமிடத்தில் எல்லாவற்றையும் முடித்து விட்டார் புரோகிதர். இவர்களது சமூக மரபுப்படி கழுத்தில் மாட்டிவிடப்படும் பூட்டப்பட்ட பொற்தாலியை நான் எடுத்துக் கொடுக்க, மணமகன் மணப்பெண் அபர்ணா கழுத்தில் அதை அணிவிக்க, மலர்கள் அட்சதை பொழிந்து மக்கள் வாழ்த்த திருமணம் நடந்தேறியது.

(முகக்கவசம் அணியாமல் இருந்த புரோகிதர், ‘சார் தாலி எடுத்து குடுக்கறேள், ஃபோட்டோல வரும். அந்த மாஸ்க்க கொஞ்சம் எறக்கிடுங்களேன்!’ என்று சொல்லி என் மாஸ்க்கை நெக்கலாஸாக மாற்ற வைத்தார்!)

திருமணம் என்றால் ஆயிரம் பேர் வரவேண்டும், சாப்பிட வேண்டும் அப்போதுதான் எல்லோருக்கும் பொருளாதாரம் உயரும் என்பதெல்லாம் ஒரு புறம். இப்போது அது முடியாது. மிக அழகாக அரசிடம் அனுமதி பெற்று எளிமையான முறையில் உறவினர்களை வைத்துக் கொண்டு சிறப்பாக நடத்தினார் ஜெகதீசன் தன் மகள் திருமணத்தை.

திருமணத்திற்கு வந்திருந்தோருக்கு கொடுக்கப்படும் அன்புப் பரிசாக காலத்திற்கேற்ப சானிடைஸர் போத்தலும், நெற்றிக்கு முன் வைத்து வெப்பநிலை அளக்கும் கருவியும் தந்து அசத்தினார்கள்.

அரும்பாக்கத்திலிருந்து நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை வழியாக ராஜா அண்ணாமலைப் புரம் வருவதற்குள் இரண்டு இடங்களில் நிறுத்தி சோதித்தனர் பெருநகர காவலர்கள். இ பாஸைப் பார்த்ததும் அனுமதித்தனர்.

சொற்ப நபர்கள் மட்டுமே கூடி வீட்டிலேயே எளிமையான திருமணம் என்ற போதிலும், ஒரு நல்ல நாதஸ்வரமும் தவிலும் நிகழ்வையே பிரமாண்டப்படுத்தி கல்யாணக்களையை தந்து விடுகின்றன. அவர்கள் வாசித்த ‘மணமகளே மணமகளே வா வா’வும், ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா!’வும் இன்னும் ஓடுகிறது என் காதில் வீட்டிற்குத் திரும்பிய பின்னும்.

தம்பதியரை நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே வாழ்த்துங்களேன்.

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    24.06.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *