‘மூல விதைகள்’ வெளியீடு

🌸🌸

🌸

🌸

ஒவ்வொரு முதியவன் இறக்கும் போதும், அவனோடே ஓர் உறவு வட்டமும், குலக் கதைகளும் குடும்பம் உயர்ந்த கதைகளும் மறைந்து போகின்றன. இருப்பவர்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாவிட்டால் அவை அப்படியே புதையுண்டு போகின்றன.

உங்கள் தந்தையைப் பற்றி எவ்வளவு தெரியும்? ‘அவரப் பத்தி எனக்குத்தான் தெரியும், இத்தனை வருஷம் ஒண்ணாவே வாழ்ந்துருக்கேன், நான் அவருடைய ரத்தம்’ என்று எவ்வளவு நீங்கள் பேசினாலும், நீங்கள் பிறப்பெடுப்பதற்கு முந்தைய கட்டத்தில் ஒரு வாழ்க்கையைக் கொண்டிருந்தார் உங்கள் தந்தை, அது உங்கள் அன்னைக்கும் குடும்பத்திற்கும் தெரிந்த அவரது வாழ்க்கை. திருமணத்திற்கு முன்பு ஒரு கட்டத்து வாழ்க்கை இருந்தது அவருக்கு, அது அவரோடு உடன்பிறந்தோருக்கும் குடும்பத்தாருக்கும் உறவினருக்கும் நண்பர்கட்கும் தெரிந்த அவரது வாழ்க்கை. என் தந்தையைப் பற்றி நானறிந்தது, உங்கள் தந்தையைப் பற்றி நீங்கள் அறிந்தது சொற்பமே என்பதே நிதர்சன உண்மை.

என் தந்தை வில்லிசை வேந்தர் மு. பச்சைமுத்து அவர்கள் சிவனடி சேர்ந்ததும், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய சடங்குகள் காரியங்களுக்காக 2020ன் ஜனவரி மாதம் முழுக்க மணக்குடியில் குடும்பத்தோடு இருந்த அந்நாட்களில்… என் தந்தையின் நண்பர்கள், எங்கள் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், மலர்ச்சி மாணவர்கள் என தினமும் யாராவது வந்து கொண்டேயிருந்தனர் எங்களைப் பார்ப்பதற்கு. அவர்களோடு வீட்டின் முகப்பறையில் தந்தையின் ஆளுயரப் படத்தின் அருகில் அமர்ந்து தந்தையை நினைவு கூர்ந்து பேசுவது கிட்டத்தட்ட தினமுமே நடைபெற்றது.

தந்தையின் இளவளான முத்தையன் சித்தப்பா ஏற்பாட்டில் முனைவர் அன்பழகன் ஐயா, புலவர் ஜெயராமன் ஐயா, முனைவர் பொன்னம்பலம் ஐயா என என் தந்தையின் தமிழ்சான்றோர் நண்பர்கள் வந்து மணக்குடியில் தந்தையின் உருவப்படம் திறந்து அஞ்சலி செலுத்திய அந்த மதிய வேளையில், எங்கள் குடும்பமும் உறவினர்களும் வீற்றிருக்க என் தந்தையைப் பற்றி அவர்கள் ஒவ்வொருவரும் பேசியது நிறைய சிந்திக்க வைத்தது.

ஒவ்வொரு பிள்ளையும் ‘என் தந்தையைப் பற்றி எனக்குத் தெரியும்!’ என்று நினைக்கலாம். ஆனால், அந்தப் பிள்ளை வருவதற்கு முன்பிருந்த அந்த மனிதரின் வாழ்க்கையை அவரது மனைவி அதிகம் அறிவார்கள். ஆனால், அவரது திருமணத்திற்கு முன்பிருந்த அவரது வாழ்வை அவரது உடன்பிறந்தோரும் உற்றாரும் உறவுகளும் ஊருமே அறியும். பிள்ளைகள் தங்கள் தந்தையைப் பற்றி அறிந்திருந்தாலும் அறியாததே அதிகம் என்ற ஒளி விழுந்தது அந்த மாலை.

அன்றிரவு நடந்த மோட்ச தீப ஆராதனையில் அமர்ந்திருந்த போது எங்கிருந்தெல்லாமோ வந்திருந்த சுற்றத்தையும் நட்பையும் காண்கையில், ‘நமக்குத் தெரிந்த சில விவரங்களையாவது கோடிட்டுட்டுக் காட்டி அடுத்த தலைமுறைக்குக் கடத்தி விட வேண்டும்!’ என்ற எண்ணம் வலுப்பட்டது.

2020ன் ஃபிப்ரவரியில் சென்னைக்கு வந்திருந்த என் அம்மா, ஓர் அறுவை சிகிச்சைக்காகவும் கொரோனா தீ நுண்மி ஊரடங்காலும் சில மாதங்கள் என்னுடனே இருக்கும்படியாயிற்று. அம்மாவின் வழியே அப்பாவை, கடந்த தலைமுறைகளை அறிய முயற்சிக்க வாழ்க்கையே களம் அமைத்துத் தர என் அகழ்வாராய்ச்சி தொடங்கியது.

அம்மாவிடம், ராஜவேலு சித்தப்பாவிடம், திருவண்ணாமலை மாதவன் கலியபெருமாள் வழியே குல பெரியோர்களிடம் என கிடைத்த விவரங்களை உள்வாங்கி, என் தந்தையின் வழியே ஏற்கனவே கேட்டறிந்ததைக் கொண்டு, சிறு வயதில் பார்த்ததைக் கொண்டு அவற்றைப் பார்க்க ஒரு வடிவம் கிடைத்தது. இறையருளாலே தொடங்கப் பெற்று தொடராக வந்தது அது.

ஒவ்வொரு அத்தியாத்திற்கும் பலரைத் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அந்தந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்டத் தகவல்களை உறுதி செய்ய அதற்குரிய அந்நாளைய விவரங்கள் தெரிந்த உறவுகளை (ஆவடியில் இருக்கும் ஆயிபுரம் பாவாடை மாமா, சிறுமதுரை முத்து என பலரிடமும்) அழைத்து விவரங்களை உறுதி செய்யப்பட்ட பிறகே எழுத்தில் கொண்டு வரப்பட்டது.

‘வேலையத்த வேலை இது!’ என்று சொன்ன பெரியோர்களும் உண்டு, ‘அதான் கருமாரப்பட்டி உறவுக் கதையா!’ ‘நல்லம்மை யாரு’ ‘அண்ணா, கடைக்குட்டி அண்ணாமலை கடைசி வரை அந்த ஊர்லதான் இருந்தாங்களா, இத வளர்ச்சியில தொடரா எழுதுவீங்களா?’ என்று உற்சாகப்பட்டுக் கேட்ட கதிர்வேல்களும் குகவேலன்களும் சிவகுருக்களும் உண்டு.

நமது வாட்ஸ்ஆப் குழுவில் 13 அத்தியாயங்கள் கொண்டு தொடராக வந்த ‘முதல் பாகம்’ தொகுக்கப்பட்டு, இதோ ஒரே நூலாக – “மூல விதைகள்”

சிவபுரம் சேர்ந்த என் தந்தையின் மாத குருபூசை நாளான ஆடி மாத மிருகசீரிஷம் நாளன்று (18.07.2020) ‘மு. பச்சைமுத்து அறக்கட்டளை’யிலிருந்து இணையப் பயன்பாட்டு வடிவத்தில் இதை வெளியடுகிறோம்.

இது முழுமையானதன்று. பிழை திருத்தம் செய்யப்படாத ‘முதல் தொகுப்பு’ இது. சில விவரங்கள் தகவல்கள் சேர்க்கப்பட வேண்டியிருக்கலாம், பிழைகள் இருக்கலாம், இருப்பினும் வெளியிடுகிறோம், நூல் வடிவில் வரும்போது அவற்றை செய்து கொள்ளலாமென்ற முடிவில்.

என் தந்தையின் நிழலும் இளவலுமான என் சித்தப்பா முத்தையன், ‘மு. பச்சைமுத்து அறக்கட்டளை’ சார்பாக இதை வெளியடுகிறார்.

அடுத்த தலைமுறைக்கான ஆவனப்படுத்தலாக இருந்தாலும் சரி, வேலையத்த வேலையாக இருந்தாலும் சரி, இது நிகழ்கிறது.

இதைப் படித்த அடுத்த தலைமுறையின் இளவல்கள் கருமாரப்பட்டியையும், ஆயிபுரத்தையும் வேறு ஆழத்தில் பார்க்க முடிந்தால், தங்கள் முப்பாட்டனின் மூலம் இதுதான் என்பதைத் தெரிந்து கொண்டால், இந்த எழுத்தும் முயற்சியும் அவற்றின் பலனை அடைந்தன என்று பொருள்.

உங்கள் செல்லிடப் பேசியில் மட்டுமல்லாது, கூகுள் டிரைவ்வில், மைக்ரோசாஃப்ட் ஒன் ட்ரைவ்வில், ஐ க்ளவுடில், உங்கள் மின்னஞ்சலின் இன்பாக்ஸில் சேமிக்கப்படட்டும் இதன் பிரதி. நாளை தேவைப்படலாம் இந்த விவரங்கள் நம் பேரப்பிள்ளைகளுக்கு. சுகிதாவின் பேரனுக்கும், துருவனின் பேரனுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும் நம் முன்னோர்களின் தொடக்கம்.

என் தந்தையின் ஆசியும்
குல முன்னோர்களின் ஆசியும்
என் சிவனின் திருவருளும் துணை செய்யட்டும். திருவருள் இருப்பின் அடுத்த பாகங்கள் நிகழட்டும்.

பிரார்த்தனைகளோடும் பணிவோடும்,

பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்,
17.07.2020
Paraman@Malarchi.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *