வானமெங்கும் வௌவால்கள்

ஒவ்வொரு முறை வௌவால்களைப் பார்க்கும் போதும் ஒரு வியப்பு வந்து போகும் எனக்கு. புவனகிரி பள்ளியில் ஏழாம் வகுப்பு ஆர்கே வாத்தியார் எங்களுக்குள் விதைத்ததில் தொடங்கிய அது இன்னும் தொடர்கிறது. தொண்டையிலிருந்து பல்லாயிரம் கேளாஒலி அலைகளை எழுப்பிய வண்ணமே இருக்கும் வௌவால்கள், அந்த ஒலியலைகளை வைத்தே பொருள்களை கண்டறிந்து மோதாமல் பறக்கின்றனவாம். வௌவால்களைப் படைக்கும் போது, ஒரு ‘போயா’ ட்ரான்ஸ்மிட்டரையும் ரிசீவரையும் உள்ளே வைத்தே படைத்திருக்கிறான் இறைவன்.

பாலூட்டிகளிலேயே பறக்கும் ஒரே பாலூட்டி வௌவால்தான் என்று எப்போதோ படித்ததாக நினைவு. நரியைப் போல முகமிருப்பதால் ‘பறக்கும் நரி’ என்றழைக்கிறார்களாம் இவற்றை அமெரிக்கர்கள். 

இன்று அஜீத் படம் உட்பட
மலேசியா என்றால் பத்துமலை முருகனைக் காட்டுவது சிறப்பாக ஆகியுள்ளது. ‘பட்டு கேவ்ஸ்’ எனப்படும் பத்துமலையில் இன்று முருகன் கோவில் வருவதற்கு வௌவால்கள்தான் முதற்காரணம் என்பதை விவரமறிந்தோர் சொல்வர். 

‘வௌவால் பாட்டுக்கு வாழட்டும், மனிதன் பாட்டுக்கு வாழட்டும்! நெருங்கிப் போறதாலதான் பிரச்சினையே, சீனாவுல வவ்வால பொரிச்சி சாப்பர்ரானுவோ. அதுலதான் தொடங்குது பிரச்சினையே!’ என்கிறார்கள் சூழலியல் ஆய்வார்கள்.

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் ஒரு தினுசுதான். நம் வாழ்க்கை முறையிலிருந்து ஒப்பிட்டால் எல்லாமே தலைகீழானவை எனச் சொல்லும்படியானவை வௌவால்கள். பகல் முழுதும் உறங்கும், நாள் முழுவதும் தலை கீழாகத் தொங்கி ஓய்வெடுக்கும், இரவில்தான் வாழ்வே தொடங்கும் என எல்லாவற்றிலும் நமக்கு எதிர்த்திசையில் இருக்கும் வௌவால்கள், வாய் வழியே உண்டு வாய் வழியாகவே மலம் கழிக்கின்றன என்பது இன்னும் உச்சம். சரி… எச்சம்!

உலகமே உறங்கப் போகும் இரவு நேரத்தில் தெம்பாக நிமிர்ந்து உட்கார்ந்து பப்ஜி ஆடி நண்பர்களுடன் சாட் செய்து நள்ளிரவில் நெட்ஃபிளிக்ஸில் வெப்சீரியல் பார்த்து விட்டு, அதிகாலை டீ போட்டு குடித்து விட்டு விடிந்ததும் உறங்கப் போகும் சில பிள்ளைகளைப் பார்த்தால் எனக்குள்ளே நான் சொல்லிக்கொள்வது… ‘வௌவாலு!’

இன்று மாலை அடையாறு ஆற்றின் பாலத்தின் வழியே நடை பயிற்சிக்குப் போன போது கண்டது பேரனுபவம். 

பரந்து விரிந்த வானமெங்கும் பறந்து செல்லும் வௌவால்கள். இருபது நிமிடங்களுக்கும் மேலாக அங்கேயே நின்றேன். அவை நிற்க வில்லை, வந்து கொண்டேயிருக்கின்றன, இரவு நோக்கிய வாழ்க்கையைத் துவக்க.

செல்லிடப் பேசியில் பதிவு செய்ய எவ்வளவு முயற்சித்தும் தோற்றுப் போனேன். வெற்றுக் கண்ணால் காண்பதை அப்படியே கேமராவில் கொள்ள முடியவில்லை.

இருளும் ஒளியும் கலக்கும் வேளையில் பரந்த வானமெங்கும் பறந்தசையும் பறவைகள்.

வானமெங்கும் வௌவால்கள்!

– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்,
16.08.2020

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *