அவர்கள் கொண்டிருப்பது பொறுப்பு

பிள்ளையார் வாங்க பையை எடுத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போகும் போதே கவனித்தேன். செட்டிநாடு ஹரிஸ்ரீ பள்ளியிருக்கும் தெருவில் இப்போது இடித்துக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டுவாசதி வாரியக் குடியிருப்பின் முன் மண் பிள்ளையார் செய்து கொண்டிருப்பவரை. நமக்கு அப்பவே மண் எடுத்து அச்சில் சாம்பல் தூவி அப்படியே அடித்து சுடச்சுட எடுக்கப்பட்ட பிள்ளையார் வேண்டும். சந்தையில் சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டு் இறுகி கெட்டியான கொஞ்சம் ஜிகினா பூசப்பட்ட பிள்ளையார்களே அதிகம் கிடைக்கும். ‘அபிஷேகம் பண்ணனுமே! இருப்பதிலேயே கொஞ்சமாவது மண்ணு இருப்பத பாத்து வாங்கிட்டு போவோம்!’ என்ற மனநிலையில்தான் பிள்ளையார் தேர்வு நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும்.

இன்று மண்ணெடுத்து சுடச்சுட பிள்ளையார் அடிப்பவர்களை பார்த்ததும் மகிழ்ச்சி. ‘சரி மார்க்கெட் போயி இலை வாங்கிகிட்டு, இங்கயே திரும்ப வந்து புள்ளையார் வாங்கிடுவோம்!’ என்ற நினைப்பில் சந்தைக்குள் போனேன்.

சந்தையின் நடுவில் வீடிருப்பவர் திடீர்ப் பிள்ளையார் கடை போட்டிருக்கிறார். வரிசையாக நூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வரிசையாய் மரப்பெஞ்ச்சில் என்றோ போட்டு இறுகிப் போய், ஜிகினா பூசப்பட்ட பிள்ளையார்கள்.  ‘அண்ணா… புள்ளையார் வேணுமா, சார் புள்ளாரு!’ என்று கூவுவதற்கு இரண்டு சிறுவர்கள்.

‘வாழை இலை வேணும்ப்பா!’

‘இருவது ரூபாய்ணா!’

‘ஓ அருகம்புல்லும் இருக்கா? குடு. எவ்ளோ?’

‘பத்துரூவாண்ணா!’

‘அண்ணே தோரணம் வாணாமா?’

தென்னை ஓலை தோரணம். அப்பா, சித்தப்பா, குட்டி, பரமானந்தம் மாமா என ஊரில் தோரணம் செய்தோர் மனதில் வந்து போயினர்.

‘எவ்ளோப்பா?’

‘இருவது ரூவாய்ணா’

‘குடு’

இருபது ரூபாய்க்கு மூன்றே மூன்று ஓலைகளைத் தந்தான்.

சந்தையை விட்டு வெளியேறி செட்டிநாடு பள்ளி வீட்டு வசதி வாரிய குடியிருப்புத் தெருவிற்கே வந்தேன்.

ஒருவர் உட்கார்ந்து ஏற்கனவே அடித்த பிள்ளையாருக்கு கண்களில் மணி வைத்துக் கொண்டிருந்தார். இப்போது கூடுதலாக ஒருவர் துணைக்கு நின்றார். இரண்டு வட இந்திய தொழிலாளிகள் பிள்ளையார் உருவாவதை வியப்போடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘பிள்ளையார் குடுங்க. இப்பப் போட்டு குடுங்க!’

‘தோ… இது அஞ்சு நிமிஷம் முன்னால போட்டது. இந்தாங்க’

‘நீங்க குயவரா?’

பெரும் தயக்கத்தோடும் சிந்தனையோடும் தலையை அசைக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தோடு தலையசைத்தார்.

‘திருநீலகண்ட குயவனார்க்கடியேன்!’ என்றதும் என்னை நிமிர்ந்து பார்த்து சிரித்தனர் இருவரும்.

‘எந்த ஊரு?’

‘வாணியம்பாடி பக்கம்’

‘இங்க இருக்கறது?’

‘அரும்பாக்கம்’

அதற்குள் பிள்ளையாரை என் கட்டைப் பையிலுள்ள தட்டில் நீள்வடிவ வைத்து விட்டார்.

‘எவ்ளோ?’

‘எழுபத்தியஞ்சுருவா!’

நூறு ரூபாயைத் தரும் போது பார்த்தேன் அவருக்கு பின்னே மாங்கொத்துகள்.

‘மாங்கொத்தும் இருக்கா? குடுங்களேன்’

‘நீங்க எந்த ஊரு?’ இது அவர்

‘சிதம்பரம் பக்கம்’

மாங்கொத்தைத் தந்தார்.

‘எவ்ளோ?’

‘காசில்லைங்க. பிள்ளையார் வாங்கனா தர்றதுக்கு வச்சிருக்கோம்!’

பத்து ரூபாயை எடுத்து தந்தேன்.

‘ஏற்கனவே நூறுரூவா தந்திட்டீங்க. பிள்ளையாரு போவ இருவத்தியஞ்சி ருவா இருக்கு’

‘அது உங்களுக்குதான். எனக்கு குடுத்த பிள்ளையாரு நூறு ரூவா நான் கொடுக்கற விலை. இந்தாங்க மாங்கொத்துக்கு காசு!’

‘இந்தாங்க மண்ணு எடுத்திட்டுப் போங்க. பிள்ளையார தட்டுல சரியா வைக்க!’

‘டேய் தம்பீ, சேமகொட்டை அப்பா வூட்ல வேணாம், அங்க கிழக்க சின்னத்தாத்தா ஊட்ல போய் பிள்ளையார் வாங்கிட்டு வா. சாம்பல் போட்டு வேணாம். நல்லெண்ணை ஊத்தி போட்டு வாங்கிட்டு வா. கொஞ்சம் மண்ணு கேட்டு வாங்கிட்டு வா!’  சிறுவனாக இருக்கும் போது என்னிடம் அம்மா சொல்வது சில விநாடிகளில் வந்து போனது.

வீடு நோக்கி நடக்கிறேன்.

எப்போதோ போட்ட இறுகிப் போன பிள்ளையாரை வாங்கி விற்கும் வியாபாரிகள் நூற்றி் இருபத்தியைந்திற்கும் நூற்றியைம்பதற்கும் விற்கிறார்கள். ஒரு குயவன் புதிகாக சுடச்சுடப் போட்டு எழுபத்தியைந்து ரூபாய் கேட்க நிறைய யோசிக்கிறான்.  இந்தத் தெரு முடிந்து திரும்பினால் சந்தை, அங்கே மூன்றே மூன்று தென்னை ஓலை இருபது ரூபாய், சொற்ப புல் பத்து ரூபாய். இங்கே ஒரு குயவர் மாங்கொத்தை அள்ளி என் பைகளில் போட்டு விட்டு ‘காசில்லீங்க. பிள்ளையார் வாங்கறவங்களுக்காக வச்சிருக்கோம்!’ என்கிறார்.

‘மாவிலை, தோரணம், கண்களுக்கு வைக்கப்படும் கருகமணி, ஒரு குடை, எருக்கம்பூ மாலை என எல்லாவற்றையும் இந்த பிள்ளையாரோடு வைத்தால், ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை வைத்தால்… இந்த உலகம் ஏந்திக் கொள்ளுமே! அதுவும் என்னைப் போன்ற சூழலியல் ஆர்வலர்கள் மண் பிள்ளையார் என்றால் மகிழ்வாய் வாங்குவார்களே! கூடுதல் விலைக் கூடத் தருவார்களே! என்தர்ப்ரனர்ஷிப் சொல்லித் தர வேண்டும் இவர்களுக்கு!’ என்று எண்ணியபடியே நடக்கிறேன்.

‘அரும்பாக்கத்திலிருந்து வந்து ஆர்ஏ  புரத்தில் போட்டவர்கள் ஏன் மெயின் மார்க்கெட்டில் போடாமல் இப்படி ஓர் சந்தில் போட்டுள்ளனர்! அங்கு போட்டிருந்தால் நிறைய விற்குமே!’

அவர்களை உள்ளூர் மார்க்கெட் அனுமதித்திருக்காது. இடம் கிடைப்பதில் அரசியல் இருக்கும் என்பவை புரிந்தன.

விவசாயிகளைப் போலத்தான் குயவர்களும். மண்பாண்டம் தொழில் செய்வோரை விட வாங்கி விற்கும் வியாபாரிகள் அதிகம் பெற்று விடுகின்றனர்.

எதற்கு கூடுதல் மண் என்று கூட தெரியாத நகரில் கூடுதல் மண்ணும், மாங்கொத்தும் (மாவிலை அல்ல) கொடுத்தனுப்பி, சந்தையை விட குறைவான தொகையையே பெற்றுக் கொள்கிறார்கள் இவர்கள்.

இந்த வேலையை நாம் செய்யவே வேண்டும், எத்தனையோ வீடுகளுக்கு மண் பிள்ளையார் உதவும் என்று செயல்படும் இவர்களை இயக்குவது பணம் அல்ல. பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்லி எளிதாகக் கடந்து விடலாம்.

குயவர்கள் கொண்டிருப்பது பொறுப்பு!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
22.08.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *