நீர்க்கோழி்

கடற்கரையில் படுத்துக்கொண்டு தலையை மட்டும் மணலுக்குள் புதைத்துக் கொண்டு கிடப்பவனைப் போல உடலை நீரின் மேலே மிதக்க விட்டபடி கழுத்தை மட்டும் வளைத்து நீட்டி நீருக்குள் விட்டு இரைகளைத் தேடிப்பிடிக்கும் நீர்க்கோழியைக் கண்டிருக்கிறீர்களா?

நான் முதன்முதலில் நீர்க்கோழியைப் பார்த்தது மணக்குடியின் பாப்பாக் குளத்தில்தான். மொத்த ஊரும் பயன்படுத்திய அந்தக்குளம் நீர் நிறைந்து பனை கருக்குப் போன்ற முள் முனை விளிம்பைக் கொண்ட அல்லி இலைகளால் மூடப்பட்டுக் கிடக்கும் அக்காலமதில். மக்கள் புழங்கும் அல்லிக் கொடிகளில்லாத ஆழமான பிள்ளையார் கோவில் படித்துறைப் பகுதியில் சிறுவர்கள் நாங்கள் குளித்த போது திடீரெனத் தென்பட்டது நீரின் மேற்பரப்பில்.

அதைக் கண்ட வியப்பில் ஹோய்!’ என்று சிறுவர்கள் நாங்கள் குரலெழுப்ப, வயதில் மூத்த வெங்கடேசன் அதைப் பிடிக்க விரட்டி சென்றான்.  ஓரிடத்தில் மூழ்கி் வேறிடத்தில் எழுந்து தப்பிக்க முயற்சித்தது. வெங்கடேசனைப் பார்த்து உற்சாகமடைந்து  அர்ச்சுனன், அரிகிருஷ்ணன், ஆளவந்தார்  என எல்லோரும் ஒரு பெரிய வட்டமாக அதை நோக்கி சூழவே எங்கும் போகமுடியாமல் தவித்து துன்புற்றது அப்பறவை.  நீர்க்கோழியால் பெரிதாக பறக்க முடியாது என்று தெரிந்து கொண்டதும் அப்போதுதான்.

அப்படி இப்படி போக்குக் காட்டி அல்லி இலைகளின் மேல் ஏறி் ஓடி தப்பித்தது அந்த நீர்க்கோழி அன்று.   அதன் பிறகு பல சமயங்கள் நீர்க்கோழியைப் பார்த்திருக்கிறோம்.

‘ஏய் சிவா, அப்பறம் ஒரு நாளு  வெங்கடேசன் நீர்க்கோழியைப் புடிச்சுட்டான் தெரியுமா?’ என்று பள்ளிக்குப் போகும் வழியில் அர்ச்சுனன் பகிர்ந்தான் எனக்கும் சரவணனுக்கும். பகீரென்று இருந்தது அதைக் கேட்கையில் அப்போது.

பாப்பா குளம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டு ரோகு, சில்வர் கெண்டை என வளர்ப்பு மீன்கள் விடப்பட்டு் யூரியா போன்ற ரசாயன தீனிகள் கொட்டப்படுவது தொடங்கிய பின்பு நீர்க்கோழிகள் தென்படவில்லை பாப்பாக்குளத்தில்.

ஐடி இஞ்சினியராக பெங்களூருவில் இருந்த காலத்தில் அல்சூர் ஏரியில் நீர்க்கோழியைப் பார்க்கையில், ஞாயிறு மாலைகளில் மடிவாலா ஏரிக்கரையில் நடக்கையில், காஞ்சிபுரம் அருகே பழையசீவரம் அருகில் ஒரு குளத்தில் பார்க்கையில், கல்கத்தா ஐடிசி ஹோட்டலின் உணவகத்தின்  கண்ணாடிச் சுவருக்கு வெளியேயிருந்த அல்லிகள் செழித்திருந்த குளத்தில் நீர்க்கோழியைப் பார்த்த போது என எங்கே நீர்க்கோழியைப் பார்த்தாலும் ‘இது ரசாயனங்கள் கலக்காத நல்ல தண்ணி’ என்று வாய் முணுமுணுக்கும், மகிழ்ச்சியும் உற்சாகமும் வரும்.  கூடவே மணக்குடியின் பாப்பாக்குளமும் மனதில் வந்து போகும்.

நேற்று காலை நடைப்பயிற்சிக்குப் போன போது, ஃபோர்ஷோர் எஸ்டேட்டை ஒட்டிய சதுப்புநிலக் காட்டின் சிறிய ஏரியில் மீன் வேட்டையாடி நின்று களிக்கும் அமெரிக்க பெலிக்கன்களை பார்த்துக் கொண்டு நின்ற போது, திடீரென்று தண்ணீரின் மேற்பரப்பில் தோன்றியது இந்த நீர்க்கோழி. முடிந்தவரை பார்த்து விழுங்கி, கொஞ்சமாக காணொளிப் பதிவும் செய்தேன். 

பாப்பாக்குளத்தின் நினைவுகள் வந்தன. வெங்கடேசன் உண்மையிலேயே நீர்க்கோழியைப் பிடித்திருப்பானா? பிடித்து என்ன செய்திருப்பான்!

– பரமன் பச்சைமுத்து
09.10.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *