‘புத்தம் புது காலை’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

puththam puthu kaalai

puththam puthu kaalai

நாடு முழுக்க ஒரே ஊரடங்குதான் என்றாலும் ஒவ்வொருவருக்குமான ஊரடங்கும் அதன் தாக்கங்களும் வேறுவேறுதான் உண்மையில். நாடு தழுவிய ஊரடங்கை பாரதப்பிரதமர் அறிவிக்கும் வேளையில் ஐந்து வேறு வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து தமிழின் முக்கிய ஐந்து இயக்குனர்கள் குறும்படமாக இயக்கி ஐந்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே படமாக – ‘புத்தம் புது காலை’ என்று தந்திருக்கிறார்கள்.

தமிழின் இவ்வளவு பெரிய ஆட்கள் ஒன்றாகச் சேர்ந்து பண்ணிய படத்தின் பெயரில் பிழை இருப்பதை எவரேனும் ஒருவர் கூடவா பார்க்கவில்லை.  அல்லது பார்த்தும் விட்டு விட்டார்களா? ‘நான் எழுதிய பாடல் வரியில் ஒற்று மிகாமல்தானே எழுதியிருந்தேன், அந்த வரியை எடுத்துப் பயன்படுத்திய போது ஒற்று மிகுந்து விட்டதே!’ என்று கவிப்பேரரசு வருந்தியிருப்பார். ‘புத்தம் புது காலை’ என்பதே சரி. படத்தின் தலைப்பில் ‘புத்தம் புதுக் காலை’ என்று ‘க்’ சேர்த்து காட்டுகிறார்கள். இன்று பிறந்த குழந்தையின் புத்தம் புதுக் காலை,   புத்தம் புதுக்காலின் விரல்களை குறிப்பிடுவதுபோல பொருள் மாறிவிட்டது.

முதலில் வரும் புதுச்சேரிக்கு யோகா கற்கப் போவதாக பொய் சொல்லும் கதையில் பழைய நினைவுகளுக்கு இளஞ்சோடிகளைக் காட்டியது நன்று.

இரண்டாவது கதையின் அணு விஞ்ஞானி தாத்தா எம் எஸ் பாஸ்கரும் சரி ஆன்லைன் மீட்டிங் பேத்தி ரீத்து வர்மாவும் சரி பின்னியிருக்கிறார்கள். காதல் கல்யாணம் என்ற பெயரில் ஒரு பெண்ணின் அடையாளமும் வாழ்க்கையும் சில சமயங்களில் அழிந்து அல்லது மாறிப்போகிறது என்பதை அழுத்தமாக சொல்லுகிறது அத்தியாயம்.

சுகாசினி மணிரத்னத்தின் அத்தியாயம் துவக்கத்தில் கொஞ்சம் மேல்தட்டு ஓவர் ஆக்டிங் போலத் தோன்றினாலும் உச்சக் காட்சியில் நினைத்ததை உருவாக்கி நிமிர்த்தி விடுகிறார்கள். ‘இட் ஈஸ் நாட் குட்’ என்றதும் ‘குட் ஃபார் ஹூம்? யு, மீ ஆர் ஃபார் அம்மா?’ என்ற காத்தாடி ராமமூர்த்தியின் அந்த கேள்வி நச். ‘அதென்ன வியாதி? டிஸ்லெக்ஷியா… உன் அப்பனே அதான், என்ன அப்ப அதுக்கு பேரு கண்டுபிடிக்கல!’ நச்சோ – நச்.

வாழ்கையை விட போதை தரும் பொருள் எதுவும் இல்லை என்ற கருத்து நன்றுதான், அதை சொன்ன விதத்தில் பெரிய சுவராசியம் இல்லை, ‘ரீயூனியன்’ அத்தியாத்தில்.

 

 

தனது ‘சச்சின் கிரிக்கெட் க்ளப்’ குறும்படக் கதையை எடுத்தே இந்த அத்தியாயத்தைப் பண்ணியிருக்கிறார்கள் என்று அஜயன் பாலா இணையத்தில் குற்றச்சாட்டு வைத்திருகிறார் ஐந்தாவது அத்தியாயமான ‘மிராக்கிள்’ பற்றி.

‘அஞ்சு லாக் டவுன் கதைகள், முடியும் போது ஒரு ட்விஸ்ட், அப்படியே பாசிடிவ்வா முடிக்கணும்!’ என்ற அடிப்படியில் வேலை செய்திருக்கிறார்கள், அதனால்தான் ஐந்தாம் அத்தியாயத்தில் பிரியாணியை இழந்து புளியோதரையை உண்ணுவதையும் பாசிடிவ்வாக காட்டி முடித்திருக்கிறார்கள்.

குட்டிக் குட்டி கதைகள், பாடல்கள் என்று ‘சில்லுக் கருப்பட்டி’ காட்டிய வழியில் செய்திருக்கிறார்கள்.

வி டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘புத்தம் புது காலை’ – பாசிடிவ் தொடக்கம்; பார்க்கலாம்.

  • திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *