பளபள முகம்

‘க்வாலியர்…!’

பாவாடை மாமாவைப் பற்றிப் பேசுவதானால் ராமலிங்கம் சித்தப்பா சொல்லும் முக்கிய வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.

தெரிந்த மனிதர்களையும் அறிந்து கொள்ள சிலர் உதவுகிறார்கள். இளம் பிராயத்தில் நான் விரும்பி நெருங்கி இருந்தது ராஜவேல் சித்தப்பாவோடும் ராமலிங்கம் சித்தப்பாவோடும்தான். ராமலிங்கம் சித்தப்பாவுக்கு பாவாடை மாமா என்றால் பெருமை, மதிப்பு. ராமலிங்கம் சித்தப்பாவால் பாவாடை மாமா மீது மரியாதை வந்ததெனக்கு. விமானப்படை மீது மலைப்பும் எதிர்நோக்கும் வந்தது.

கலியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தண்டபானி என சகோதரர்கள் அனைவருக்கும் இருக்கும்,
பல்லைக் கடித்துக்கொண்டு வாயை இறுக்கமாக வைத்திருப்பதைப் போலவே தோற்றம் தரும் முக அமைப்பு பாவாடை மாமாவிற்கும். கொஞ்சம் கூடுதல் பளபள முகம் அவருக்கு.

என் திருமண முடிவில் பெருங்கருத்து வேறுபாடு கொண்டு விலகி, என் தந்தையே சம்மதித்ததால் ஏற்றுக்கொண்டவர் ராமலிங்கம் சித்தப்பா. ராமலிங்கம் சித்தப்பா மகிழ, சடாட்சரம் சித்தப்பா முகவரி தந்து விளக்க, என் அந்நாளைய டிவிஎஸ் சுசுக்கியில் ஆவடி சபி நகரின் ‘மண் ரோடு’ எனப்பட்ட அந்தத் தெருவில் இருந்த அந்த வீட்டிற்கு வந்திருந்தேன், என் திருமணப் பத்திரிக்கையை பாவாடை மாமாவுக்குத் தந்து அழைப்பதற்காக.

தனது சிறு குழந்தைகள் இருவரையும் அறிமுகப்படுத்திய பாவாடை மாமா,  பளபளவென்று முகத்தோடு இருந்தார்.  காபியும் பிஸ்கெட்டும் தந்து நிறைய பேசினார்.

உறவினர் திருமணங்களில் மட்டும் பார்ர்துக்கொள்வோம் எனும்படியாக அவரவர் வாழ்வின் திசைகளில் ஓட ஆண்டுகள் உருண்டோடி விட்டன.

குகன் திருமணத்தில் ‘சிவா… நீ மேல ஏறி ஒரு ஸ்பீச் குடேன்!’ என்றார் மாமா. ‘உன் வாட்ஸ்ஆப் பதிவுகளையெல்லாம் படிக்கறேன்!’ என்றார் மற்றொருமுறை.

‘மூல விதைகள்’ அத்தியாயங்கள் தொடர்ந்து எழுதிய போது பாவாடை மாமாவிடம் ஃபோனில் பேசியதுண்டு. ஆயிபுரம் வீட்டை, அதில் வாழ்ந்த மனிதர்களின் விவரங்களை திரட்ட வேண்டி அழைத்திருந்தேன். ‘சிவா… கேசவ உடையார் பற்றி நீ எழுதியிருந்ததை படிச்சேன்! அருமையான வேலை செய்யற நீ’ என்று பாராட்டி தொடங்கியது அவரது உரையாடல். ‘உங்கப்பா… எவ்ளோ கஷ்டப்கட்டார்னா ஆயிபுரத்துல… அடேயப்பா! அப்படி ஒருத்தர நான் பாக்கவேயில்லை இதுவரைக்கும் போ!’ என்ற மாமாவிடம், ‘மாமா, அது இரண்டாம் பாகத்துக்கு எழுதிக்கறேன். இப்ப எனக்கு ஆயிபுரம் பெரியவூடு சின்னவூடு விவரம் வேணும்! அதைச் சொல்லுங்க’ எனத் தடுத்தேன். ‘ ‘நான் எங்க அம்மா மாதிரி, நல்ல சிவப்பா பளபளன்னு முகம் எனக்கு. அதனால்தான், தம்பீ இப்படி கஷ்டப்படாத, தாம்பரம் ஏர்ஃபோர்ஸ்க்கு அப்ளிகேஷன் எழுதிப் போடு!’ன்னு சொன்னாங்க அந்தம்மா’ என்று விவரம் சொல்ல மாமாவின் முகம் மனதில் எழும்ப உள்வாங்கிக் கொண்டேன்.  அதுதான் அந்த உருவில் இருக்கும் அவர் என்னுடன் கொள்ளும் கடைசி உரையாடல் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை எனக்கு.

அதற்குப் பிறகு பாவாடை மாமாவிடம் பேசவில்லை.  பேசியிருக்கலாம்.

நமது க்ரூப்பில் மாமாவின் பதிவாக அவரும் அவரது பேத்தியும் இருக்கும் படமொன்று வந்த போதாவது அழைத்துப் பேசியிருக்கலாம். அதற்கு ஒரு பூவை பதில் பதிவாக இட்டதோடு சரி.

இன்று காலை அடித்துப் பெய்யும் மழையில் அதே ஆவடி சபி நகர் வீட்டிற்குப் போகிறேன். திருச்சியிலிருந்து காலையே வந்திருந்து மழையில் நனைந்து நிற்கும் கதிர்வேலுவையும், மாலையை முறுக்கி்க் கொண்டிருக்கும் செல்வி சித்தி(சிவபூஷணம் மகள்)யையும் கடந்து உள்ளே செல்கையில் என்னைக் கட்டிக்கொண்டு கோவென அழுத எழிலனையும் தாண்டி ‘மாமாவைப் பாத்தியா தம்பீ!’ என்ற அழுகைக் குரல் வரும் இடத்திற்குப் போகிறேன்.

கண்ணாடிப் பேழையில் பாவாடை மாமா. சந்தனப் பொட்டிடப்பட்ட அதே பளபள முகம்.
‘எங்கம்மா மாதிரியே நான் சிவப்பா நல்ல பளபளன்னு மொகத்தோட இருப்பேன் அப்போ!’

வெளியே வந்ததும் கதிர், ‘அத்தை வந்திருக்க வேண்டாம். ஆப்பரேஷன் பண்ண ஒடம்பு, இவ்ளோ கூட்டத்துல இருக்கணுமா! நாமதான் இருக்கோமே!’ என்றான் அன்பின் மிகுதியில்.
(சற்று முன்புதான் முத்தையன் சித்தப்பா, அம்மா, ராஜவேலு சித்தப்பா, பஞ்சாட்சம் சித்தப்பா புறப்பட்டுப் போனார்கள்)

‘ஆமாம் கதிரு. சித்தப்பாகிட்டயே நான் அப்படிதான் சொன்னேன். நான்தான் இருக்கேனே பாத்துக்கறேன். நீங்க இருங்கன்னு. அப்புறம் ஆயிபுரம் வீடு நினைவுக்கு வந்தது. இவங்கல்லாம் ஒண்ணா ஒரே வீட்டுல வளர்த்தவங்க. அப்புறம் மனசு கேக்காது, பாத்துட்டு போயிட்டா நல்லதுன்னு தோணுச்சி.  உங்கப்பால்லாம் பழச நெனச்சி ரொம்ப வருத்தப்படுவாரு இப்ப!’

‘ஆமாம் மாமா! என்னோட சின்னவங்கள்லாம் போயிட்டானுவோன்னு பொலம்பறாரு. கஷ்டப்படறாரு!’

மூத்த தலைமுறையின் எஞ்சிய சிலரும் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.

இனி பாவாடை மாமாவிடம் பேசவே முடியாது. அவர் சொல்ல விரும்பிய, கொண்டிருந்த விவரங்கள் அவரோடே போயின.  அவரது பளபள முகம் மட்டும் கண்களில்.

– பரமன் பச்சைமுத்து
12.11.2020
ஆவடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *