வேட்டி மறைப்பிற்கு இருபுறம் நின்றபடி திருமணம்

நாதஸ்வரமும் தவிலும் இசைக்கத் தொடங்கிய உடனேயே ஒரு இடமானது நல்நிகழ்வுக்குத் தயாராகிவிடுகிறது.  லாஷ்கர காந்தார தேசத்திலிருந்து படையெடுத்து வந்து டெல்லியை ஆட்சி செய்த சுல்தான்களுக்கு நாதஸ்வர இசை புதியதாகவும் இடைஞ்சலாகவும் இருந்ததென்றும் மாலிக்காபூர் மட்டும் அதில் மயங்கிக் கிடந்தான் என்றும் சாகித்ய விருது பெற்ற தனது ‘சஞ்சாரம்’ புனைவில் எழுதியிருப்பார் எஸ்ரா.
நாதஸ்வரமும் தவிலும் மிக எளிமையான ஒரு மண்டபத்தையும் சில கணங்லகளில்  திருமணத்திற்கான இடமாக மாற்றி ஆயத்தப்படுத்தி விடுகின்றன அல்லது திருமண நிகழ்வுக்கு கணங்களில் கனம் கூட்டிவிடுகின்றன.   

மல்லாரி எல்லாமும் தெரியாமலேயே ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’ என்று மணமேடையிலிருந்து கூவும் போதும் அதற்குப்பிறகும் வாசிக்க வேண்டியது, முன்னும் பின்னும் ‘மனதினிலே தோன்றும் ஆசைகள் கோடி……. சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லதம்மா! ‘கண்ணோடு. காண்பதெல்லாம்…’ ‘சிங்கார வேலனே தேவா’ போல சில பாட்டுக்கள்  வாசிப்பு என்பது தெரிந்தால் போதும் நகரத்து திருமணத்திற்கு.   சில நாதஸ்வரக்காரர்கள் மாப்பிள்ளை பெண்ணைக் கூட பார்க்க விடாமல் தங்கள் வாசிப்பால் நம்மை இழுத்துப் போட்டு விடுவார்கள்.

இரண்டு நாதஸ்வரம் இரண்டு தவில் என ஒரு குழுவினர் வேண்டியதை தந்தனர் இன்று, மலர்ச்சி அலுவலகத்தில் எங்களோடு பணிபுரியும் திவ்யாவின் திருமணத்தில்.

எப்போதும் எந்த மேக்கப்பும் போடாமல் இயல்பாக இருக்கும் திவ்யாவிற்கு திருமண மேக்கப் போட்டு ‘ஆமாம், இது திவ்யாதான்!’ என்று எண்ணும்படி மாற்றியிருந்தார்கள்.  கூரைப்புடவை, மஸ்டர்ட்டு எல்லோ (‘மலர்ச்சி மஞ்சள்’!) வண்ண ரவிக்கை, திருமணக் கொண்டை என வேறு பெண்ணாகவே உருமாறியிருந்தார் திவ்யா. அதற்கு பொருந்தும் இளஞ்சிவப்பு வண்ண சட்டையில் மாப்பிள்ளை.

‘பாகுந்தி’ ‘வர்ஷம் லேதூ’ ‘துஃபானு உப்பேனா’ ‘மீரு தின்னாரா?’ ‘நேனு பூர்த்தி சேஸ்னானு’ ‘நேனு தின்னானு’ என சுந்தரத் தெலுங்கால் நிறைந்திருந்த அந்த மண்டபத்தில் 75 பேர்கள் இருந்தோம். நாங்கள் 8 பேர் உட்பட 25 பேர் மட்டுமே சுவாசக்கவசம் அணிந்திருந்தவர்கள். அதில் சுவாசக்கவசத்தை இறக்கி வாயிலோ தாவாங்கட்டையிலோ போட்டிருந்தவர்கள் ஓர் ஐம்பது சதவீதம்.  நிவர் புயல் வந்ததில் கொரோனா மறந்துவிட்டது போல மக்களுக்கு.

‘அரசாணிக்கால் நடறாங்க, மேடையில ஒருத்தர் கையில் புத்தம் புதுக்குடை இருக்கு, அப்படீன்னா காசியாத்திரை உண்டு, பாத பூசை உண்டு. இவங்க நாயுடு சமூகத்தில வேற என்ன சம்பிரதாயத்தில பண்ணுவாங்க பாப்போம்!’ என்று எண்ணியவாறே இருக்க, ஒவ்வொன்றாய் நிகழ்ந்தது.

மணகளின் தந்தை இடப்புறம் பிடிக்க மணமகன் தந்தை வலப்புறம் பிடிக்க  திடீரென்று ஒரு வெள்ளை வேட்டியை உயர்த்தி நடுவில் பிடித்தார்கள். வேட்டியின் அந்தப் பக்கம் மணமகன், வேட்டியின் இந்தப்பக்கம் மக்களுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு மணமகள் என நின்றார்கள்.  வேட்டிக்கு இந்தப் பக்கத்திலிருந்து ‘நிஜமாகவே கழுத்தை நீட்டிய படி’ மணமகள் இருக்க, மணமகன் ஏதோ செய்து கொண்டிருந்தான். ‘டேய் பரி… தாலிடா அது, கட்றாங்கடா, ஃபோட்டோ எடு ஓடு!’ என்று நாம் சுதாரித்து சொல்லும்படி தாலிகட்டும் சடங்கு நடந்தது. ‘யாரும் அட்சதை போடலியே!’ என்று பார்த்தால் அடுத்து இன்னுமொரு தாலியைக் கட்டுகிறான் மணமகன்.  துணியின் மறைப்புக்கு இருபுறமும் மணமக்கள், நின்று கொண்டே திருமணம், இரண்டு தாலிகள் என அவர்களது(நாயுடு) மரபு மண சடங்குகளை அறிய முடிந்தது.

‘பிரமாதனமான வாழ்க்கையா இருக்கட்டும் இவங்களுக்கு!’ என்று பிரார்த்திக்கொண்டே மணமேடை நோக்கிப் போகிறோம்.

‘ப்பாப்பங் பாப்பப்பேங் பாப்பேங்…’ என்று நாதஸ்வரக்காரர்கள் வேறு பாடலுக்கு மாறியிருந்தனர்.

குத்தாலிங்கம், கஜலட்சுமி, வனஜா, அக்கவுண்டண்ட் விஜய், பாலு, சிவவேலன், ஹரி, நான் என 8 பேரும் சுவாசக்கவசத்தை கழற்றினோம் மணமேடையில் படமெடுக்கும் போது (கீழ்த்தளத்தில் வந்து உணவருந்தும் போதும்)

தரைதளத்துக்கு வந்து கல்யாண சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தாம்பூலம் பெற்றுக் கொண்டு, மலர்ச்சி மாணவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியே அடியெடுத்து வைக்கிறேன். காற்றில் வழிந்து வருகிறது மேல் தளத்திலிருந்து நாதஸ்வரம். தில்லானா மோகனாம்பாள் வாசிக்கிறார்.

‘நலம்தானா… நலந்தானா… உடலும் உள்ளமும் நலந்தானா!’

….

– பரமன் பச்சைமுத்து
27.11.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *