ஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் வயல்களுக்கு

நிவர் புயல் வீசப்போகிறதென்றதும் அதிகாரிகள், பாதுகாப்புப் பணிகள் என அரசு நல்ல முன்னேற்பாடுகளோடு நின்றது. எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் மழைக்கோட்டு அணிந்து கொண்டு மழைநீரில் இறங்கி நீர் சூழ்ந்த பகுதிகளுக்கே சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மழையில் செம்பரம்பாக்கம் ஏரிக்குப் போனார். ஸ்டாலின் அவர்கள் இறங்கி செய்வது எப்போதும் அரசிற்கு அழுத்தம் தரும், அது அவர்களை மேலும் எச்சரிக்கையாக உடனே செயல் பட வைக்கும். இது மக்களுக்கு நல்லது. (கொள்ளிடம் கதவனை பாதிப்பின் போது ஸ்டாலின் நேரடியாய்ப் போய் நிற்க, அடுத்த சில நாட்களில் அது நிவர்த்தி செய்யப்பட்டதை நினைவு கூர்க).  நிவர் புயல் சமயங்களில் இருவரும் சிறப்பாகவே செயல்பட்டனர்.

புரெவிதான் படுத்துகிறது. தலைநகருக்குப் பாதிப்பில்லை என்பதால் விட்டுவிடும் வழக்கம் இதிலும் தொடர்கிறது. புரெவி புயல் கடலூர் மாவட்டத்தை மூழ்கடித்துக் கொண்டுள்ளது. ஏன் இன்னும் எவரும் கண்டுகொள்ள வில்லை என்பது எப்போதும் போல இப்போதும் வருத்தத்திற்குறிய கேள்வி. 2015 தீபாவளியின் போது வானம் பொத்துக்கொண்டு ஊற்றி கடலூர் மாவட்ட வயல்களை மூழ்கடித்து பயிர்களை அழுகச்செய்தபோது, கடலூர் புதுச்சேரி சாலை இணைப்பே மூழ்கி துண்டான போது பெரிதாக கண்டுகொள்ளாத ஊடகங்கள், சிலநாட்களில் ‘சென்னை மூழ்கியது’ என்று வெளிச்சமிட்டது. சித்தார்த் போன்ற வெகுசிலர் ‘கடலூர்… கடலூர்…’ என்று கூவிய பின்னரே ஊடகங்கள் கொஞ்சம் திரும்பின.

43 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் கோவிலின் உள்ளே இடுப்பளவு தண்ணீர் நிற்கும் அளவு மழை. 34செமீ மழை என்கிறது ஊடகம். பேட்டிகள் எடுக்கப்படுகின்றன.  அந்த நிலையிலும் ஆறு கால பூசைகள் நடத்தி, ஒரே நாளில் மொத்த தண்ணீரையும் இறைத்து வெளியேற்றி இயல்புக்குக் கொண்டு வந்து நிமிர்ந்து நிற்கிறது சிதம்பரம் கோவில் நிர்வாகம். நல்லதே. நாளை இதையும் ஊடகங்கள் பாராட்டும்.

5 ஆண்டுகளுக்கு முன்பே தில்லை நடராசர் கோவிலிலிருந்து நீர் வெளியேறும் சுரங்க வழித்தடத்தின் அடைப்புகளை ஆக்ரமிப்பை நீக்கி மீட்க திரு. செங்குட்டுவன் போன்றோர் பெரும்பாடு பட்டனர். ஒரு நிலைக்கு மேல் அவர்களால் முடியவில்லை. இன்று ‘புதிய தலைமுறை டிவி’ அதை எழுப்பியிருக்கிறது. நல்லது.

சிதம்பரம் கோவில் வெளிச்சம் பெறும். நிர்வாகம் சீராகும். நன்று.  கடலூர் மாவட்டம் முழுக்க வயல்களின் நிலையை எவர் சொல்வார், எவர் கவனிப்பார்!?

கீழமணக்குடி, வயலாமூர், அருண்மொழிதேவன், தச்சக்காடு போன்ற கடலூர் மாவட்டத்தின் சிதம்பரத்தின் தொடுதூரத்தில் உள்ள கிராமங்களின் வயல்களில் பயிர்கள் எழுந்து நெல் பால்கட்டும் நேரத்தில் மூழ்கி நிற்கிறதே, நீர் வடியாமல் நின்று நெற்கள் பதர்களாக அல்லது பயிரே அழுகி நிற்கப்போகிறதே… இதற்கு எவரேனும் எதுவும் செய்வாரா?

ஸ்டாலின் அவர்களும், அரசின் அமைச்சர் அவர்களும் சென்றிருக்க வேண்டும். பயிர்கள் மூழ்குவது கண்டு ஒருவரிடமும் பேசமுடியாமல் ஏதும் செய்யமுடியாமல் வெறுமனே படுத்துக் கிடக்கும் விவசாயிக்கு தேவை, நிவாரணப் பணமல்ல. இது நடவாமலிருக்க வேறென்ன செய்யலாமென்ற தீர்வு.   முதல்வர் அவர்களின் கவனம் வரட்டும் இது போன்ற பகுதிகளுக்கு.

வீடு மூழ்கினால் விபரீதமெனத் தெரிந்த ஊடகங்களுக்கு வயல் மூழ்கினால் பெரும் கேடு என்று புரிவதெப்போது!

ஊடகங்கள் செல்லட்டும் கடலூர் சிதம்பரம் பகுதி வயல்களுக்கு.

– பரமன் பச்சைமுத்து
05.12.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *