பசுஞ்சாண பூசணிப்பூ

நம் வீட்டு வாசலில் திடீரென்று கையளவு பெரிய மஞ்சள் பூ ஒன்று முளைத்து சிரித்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்?  அதுவும் நீங்கள்  அரைக்கால் சட்டையணியும் சிறுவன் என்றால்!

அதிகாலை வாசல் திருத்தி தெருவடைக்கும் வகை பரந்து விரிந்த பெரும் மாக்கோலம் இட்டு அதன் ஓர் ஓரத்தில் பசுஞ்சாணியில் பாத்தி கட்டி அதன் குழிவில் ஆலக்கரைசலை ஊற்றி, உச்சியில் அணி செய்வதாக பூசணிப்பூவை செருகி விட்டிருப்பார் அம்மா.  மாக்கோலத்தை கொத்தியுண்ணும் காகங்களோடு, அரிசி மாவை இழுத்துப்போக மொய்க்கும் கருப்பெறும்புகளோடு சிறுவர்கள் நாங்களும் பசுஞ்சாண பூசணிப்பூவை மொய்த்துக் கிடப்போம்.

‘எங்க வீட்ல இன்னும் பெருசு! தெரிஞ்சுக்கோ!’ வகை பீற்றல்களும் உண்டு சிறுவர்களிடையே.

டயர் வண்டி, பனங்காய் வண்டி ஓட்டிக்கொண்டு ஓடி விளையாடுகையில் தெரியாமல் அதே பசுஞ்சாண பூசணிப் பூ பாத்தியை மிதித்து ‘ஙே!’ என்று நிற்பதும், ‘ஏய் இவன…பாத்து வெளையாட மாட்டீங்களாடா!’ என்று வீட்டின் அத்தைகள் கத்துவதும் குபீர் உணர்ச்சி தருணங்கள்.

பூசணிப்பூவும், அதன் மஞ்சளும்  அவ்வயதில் ஒரு வியப்பு. மஞ்சள் ஒரு அழகு. பூசணிப் பூவின் மஞ்சள் இதழில் உள்ளே மடிப்பாய் ஓடும் வரிகள் அழகு. அதில், மலையிலேறி பள்ளத்தாக்கில் இறங்குவது போல ஏறி இறங்கும் எறும்புகளும் அவ்வயதில் வியப்பு.

கார்த்திகை என்றால் சிவப்பு மலர்கள், மார்கழி தை என்றால் மஞ்சள் மலர்கள் என்று வண்ணம் கொண்டு இயற்கை நிகழ்த்தும் படைப்பு இவ்வயதில்  வியப்பு.   

வியக்கும் சங்கதிகள் மட்டும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. வியப்பு தொடரவே செய்கிறது. வியப்புதானே நம்மை மனிதனாக வைத்திருக்கிறது, உள்ளே மலர்ச்சி தருகிறது!

மார்கழி என்றால் மஞ்சள் மலர்களின் தொடக்கம்.

– பரமன் பச்சைமுத்து
மார்கழி 2,
சென்னை

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *