கார்த்தி சுற்றிருக்கிறீர்களா!

images-18.jpeg

‘பன்னீர் மாதிரி கார்த்தி சுத்தனும்’ ‘பன்னீரோட கார்த்தியில மட்டும் எவ்வளோ நல்லா நெருப்பு பொறி வருது!’ ‘ஒரு நாளு நானும் பன்னீரு மாதிரி சுத்துவேன்’

எனக்கு மட்டுமல்ல மணக்குடி சிறுவர்களில் பலர் இவ்வகை ஏக்கத்தை கண்ணில் தேக்கியே ‘கார்த்தி’ சுற்றுவர்.

உறுதியாகவும் நீள்  வடிவமும் கொண்ட பனம் பூவை பறித்து வந்து,  உதிர்ந்துவிடாமல் இருக்க அதைச் சுற்றி சனல் சாக்கோ துணியோ பனை மட்டைகளோ வைத்துச் சுற்றி, தோட்டத்தில் தோண்டப்பட்ட சிறு குழியில் இட்டு, நெருப்பு மூட்டி எரிய விட்டு அப்படியே மண் அள்ளிப் போட்டு மூடி விட வேண்டும். உறுதியான பனம்பூ நெருப்பின் வெம்மையில் எரிந்து கங்குகளாக மாறி, பூமிக்குள் புதையுண்டதால் காற்றின்றி அதே வடிவத்தில் ஆனால் கன்னங்கரேர் கரிக்கட்டைகளாக மாறியிருக்கும்.

அம்மாதான் இதை எனக்காக செய்வார். ‘எப்ப இதை எடுக்கனும், எப்ப இதை மாவாக்கனும்!’ என புதைத்த உடனேயே பரபரப்பேன். ‘நாளைக்குதான்டா எடுக்கனும் போடா!’ என்று சிறுவனான என் கன்னத்தை கிள்ளுவார் அம்மா.  இரவு முழுக்க பனம்பூ கனவுகள் கண்ட நான் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அடுத்த காலை, குழியைத் திறந்து பனம் பூக்களை எடுத்து இடித்து அரைத்து நொறுக்கி மாவாக்கி, துணியில் சுற்றி மூன்று பொட்டலங்களாக கட்டி மாட்டுக் கொட்டகையில் ஓர் ஓரத்தில் வைத்து விட்டிருப்பார் அம்மா.

காட்டாமணக்கு செடியைத் தேடி நானும் சண்முகமும் ஆளவந்தாரும் காளகேயர்களை போரில் சந்திக்கப் புறப்பட்ட பாகுபலியைப் போலப் புறப்பட்டுப் போவோம். ஒரே கழியில் மூன்று கிளைகள் கிளம்பும் அமைப்பைக் கொண்ட காட்டாமணக்கே எங்கள் இலக்கு. கண்டுபிடித்து அதை ஒடித்து கார்த்தி மாவு பொட்டலத்தை வைத்துக் கட்டும் கவையாக அதை சீர் செய்து கொள்வோம்.  (காட்டாமணக்கு கிடைக்காதவர்கள், பனை மட்டையை நறுக்கி மூன்று கழிகளாக்கி கட்டுவார்கள். பார்க்க – படம் )

வீட்டிற்கு வந்து கார்த்தி மாவு பொட்டலத்தை காட்டாமணக்கு கவையின் நடுவில் வைத்து இருக்கக் கட்டிவிட்டு, நீண்ட கயிறு ஒன்றை கவையின் ஒரு முனையில் இணைத்துக் கட்டிவிட்டால் கார்த்தி தயார்.  இது முடியும் போது எங்களுக்கு வாயெல்லாம் பல்லாக இருக்கும். கிட்டத்தட்ட ‘மாஸ்க்’ படத்து ஜிம் கேரி போல இதயம் வெளியில் வந்து துடித்துவிட்டுப் போகும்!

மாலை அம்மா விளக்கு வைப்பதற்காக காத்திருப்போம். விளக்கு வைத்ததும் இரண்டு கட்டி நெருப்பை எடுத்து மாவுப் பொட்டலத்தில் மேற்பக்கம் வைப்பார்கள் அம்மா. ‘உஹ்ஹாஹ்ஹா!’ என்று புது குபீர் உற்சாகம் கிளம்ப தெருவுக்கு ஓடுவோம்.

நெருப்பு கங்கு கனன்று துணியைப் பற்றி பனம்பூ மாவை எரிக்கத் தொடங்கும். கயிற்றின் ஒரு முனையைக் கவனமாகப் பற்றி நம் மேலே படாமல் தலைக்கு மேலே சுற்றினால், அட அட… பனம்பூவின் கரி மாவு நெருப்புப் பொறிகளாக அப்படியே பூ பூவாக கொட்டும். அந்த இருட்டு நேரத்தில் அவ்வளவு அழகாக நெறுப்பு பூ பூவாக கொட்டுவதற்கு ஈடாக உலகில் இது வரையில் எந்த பட்டாசும் மத்தாப்பும் புஸ்வானமும் தயாரிக்கப்படவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

‘கார்த்தே கார்த்தி… கார்த்தே கார்த்தி’ என்று கத்திக்கொண்டே சிறுவர்கள் நாங்கள் பிள்ளையார் கோவில் இருக்கும் பெரிய தெருவிற்கு ஓடுவோம்.

பரணி தீபம், கார்த்திகை தீபம், தீபத்திற்கு மறுநாள் என மூன்று நாளும் கார்த்தி சுற்றுவோம். கார்த்தி சுற்றுதல் என்று நாங்கள் சொல்வதை, தமிழகத்தின் சில பகுதிகளிலும் இலங்கையிலும் மாவலி சுற்றுதல் என்கிறார்கள்.

பிள்ளையார் கோவிலருகில் நிறைய சிறுவர்கள் குழுமி சுற்றுவோம். பராக்கு பார்த்துக் கொண்டு கார்த்தியை நேராக பிடிக்காமல் சாய்த்து விட்டாலோ, மாவுப்பொட்டலத்தை இறுகக் கட்டாமல் விட்டாலோ பாதி எரிந்த பொட்டலம் தரையில் விழுந்து விடும், திருமணம் பாதியில் நின்றது போல சோகம் வந்து கவ்விக் கொள்ளும்.  நாயைத் துரத்திக் கொண்டு ஓடி அதை பயமுறுத்த கார்த்தி சுற்றும் ‘நாயகச்’ செயல் புரியும் சிறுவர்களே கவனம் சிதறி கார்த்தியை தரையில் விட்டு சோகமாய் நிற்பார்கள்.

சரியாக கவனமாகப் பிடிக்கக் கற்று, தலைக்கு மேல் மட்டுமல்லாமல் சிலம்பம் சுற்றுவது போல் தோள்பட்டையின் இரு பக்கமும் சுற்றி நெருப்பு வளையம் உருவாக்கும் அளவிற்கு திறன் பெற்றிருப்பேன் அவ்வயதில்.

‘இரவில் கார்த்தி சுற்றிக்கொண்டே போனால் அந்த முக்கூட்டு வாய்க்கால் கூனிலிருக்கும் பேய் நம்மை ஒன்றும் செய்ய முடியாது’ என்ற என் சுயகருத்தைக் கொண்டு கார்த்தி சுற்றிக்கொண்டே இருட்டில் வீட்டிற்குத் திரும்ப ஓடி விடுவேன்.

எவ்வளவு சுற்றினாலும் பன்னீரின் கார்த்தி அளவுக்கு நெருப்புப்பூ விழாது வேறு எவர்க்கும். வெடித்து நெருப்பு விழ வேண்டும் என்று கல்லு உப்பைக் கலப்பானாம் பன்னீர். பன்னீர் எங்களைப் போல சிறுவனல்ல. அப்பவே பதின்ம வயதைத் தாண்டியவன். ஆனால் சிறுவர்களின் செயல்களை செய்து கொண்டு நாயகனாகத் திரிவான்.  பனம்பூ மாவை பொற பொறவென்று அரைத்து வைத்திருப்பான்.

‘அடுத்த வருஷம் பன்னீரு கார்த்தி மாதிரி சுத்தனும் நாம!’ என்பது எங்களின் ஏக்கமாக இருக்கும்.

மூன்றாம் நாளோடு தீபம் முடிந்து போனது கார்த்திகை மாதம் முடிந்து போனது, இனிமேல் அடுத்த ஆண்டுதான் என்ற ஏக்கமும் வந்து கவ்வும்.  மார்கழி பிறந்து எங்கள் கார்த்தி சுற்றும் கனவுகளை விழுங்கி விடும்.

ஆண்டாளுக்கு ரங்க மன்னர், திருவாதவூர் மணிவாசகருக்கு சிவன், எங்களுக்கு கார்த்தி சுற்றுதல் மீது… மார்கழி என்பது ஓர் ஏக்கம்.

– பரமன் பச்சைமுத்து
மார்கழி 4
சென்னை

#Kaarthi
#Maavali
#Maarkazhi
#ParamanPachaimuthu

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *