17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னுமொரு நூல்…

20201228_072125.jpg

பெங்களூருவில் ஐடி இஞ்சினியராக இருந்த காலத்தில், அப்பாவிற்கு மணி விழா வந்தது (60 வயது). அப்பாவும் அம்மாவும் முறைமைகள் செய்து சிவலிங்கம் கட்டிக் கொள்ள முடிவெடுத்து, ‘லிங்காயத்’ சமூகம் அதிகம் வாழும் கர்நாடகாவிலிருந்து ‘செச்சை’ (சிவலிங்கத்தை வைத்து மூடி மார்பில் அணிய உதவும் வெள்ளியிலான கூடு) வாங்கி வரச் சொன்னார்.

அப்பா கொண்டாடி மகிழ்வார் என்பதற்காகவே, ‘மணி விழா மலர்’  ஒன்றை ஓசையில்லாமல் உருவாக்கி முதல் நாள் அவர் கையில் தந்தேன் ‘மணி விழா வெளியீடு’ என்று. கொண்டாடித் தீர்த்தார் அப்பா.

ஒரு வகையில் ஒன்றும் தெரியாமல் உணர்வின் அடிப்படையில்  அப்பா மகிழ்வார் என்பதை மட்டுமே முதன்மையாகக் கொண்டு, சிவபுராணம், திருவாசகம், வாரியார் சுவாமிகள் சொன்ன சில,  மகாபாரத தர்ம நியாயங்கள் விளக்கும் முக்கிய பகுதியொன்று, சண்டிகேசுவரர் கதையென்று, நான் வாசித்திருந்த சில பகுதிகளை தேர்ந்தெடுத்து தொகுத்து ஒருவருக்கும் தெரியாமல் நாம் கொண்டு வந்த அதுதான் ஒரு வகையில் ‘எனது முதல் நூல்’

மைக்ரோலேண்ட் வருவதற்கு முன்பு சென்னையில் டிடிபி யூனிட் நடத்திய காலத்தில் ‘இதயம் பேசுகிறது’ இதழுக்காக பாலகுமாரனின் கதையொன்றுக்கு ஓவியர் வரைந்து தந்த A3 அளவு  படமொன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதழ் தயாரிப்பு முடிந்ததும், அந்த ஓவியத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று ஃப்ரிட்ஜில் ஒட்டி வைத்திருந்தேன்.  அதை ஸ்கேன் செய்து மணிவிழா மலரின் மேல் அட்டையில் வடிவமைத்தேன்.

அந்த மலரின் உள்ளடக்கத்தை, அவர் பெரிதும் மதிக்கும் ஆடூர் வைதிகர் போன்றோர் கொண்டாடியதில் அப்பாவுக்கு வானாளாவிய மகிழ்ச்சி.  முக்கியமான நபர்களுக்கெல்லாம் அந்த மலரின் ஒரு பிரதியை தந்து மகிழ்ந்து போவார்.

மலரின் பிரதிகள் தீர்ந்து போக, அவரே அந்த மலரின் பிரதியொன்றை மூலமாக வைத்துக் கொண்டு, அதை அப்படியே மறுஉருவாக்கம் செய்து பல பதிப்புகள் செய்து கொண்டார். ஆண்டுகள் கடந்தும் அதைச் செய்து கொண்டேயிருந்தார். அப்பாவுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவரது அன்புக்குரியவர்கள் என்றால் அவர்களிடம் நிச்சயம் ஒரு பிரதியை வழங்கியிருப்பார்.

அதன் பிறகு வந்த ஆண்டுகளில்  கிறித்துவம், இஸ்லாம், ஜென் பயிற்சிகள், ஓஷோ வழி, உருவ வழிபாடு தவிர்த்தல் என என் பயணமும் மாறிப் போனது.   

21.05.2003ல் வெளியீடானது அந்த நூல். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அப்பாவின் முதலாம் நினைவு நாள் முதல் குருபூசைக்கு இதோ இன்னுமொரு நூல் வெளியிடுகிறோம்.  ஒரே வித்தியாசம், அப்பா தேர்த்தெடுத்த பாடிய பரிந்துரைத்த, சிறுவனாக இருந்த போது என்னிடம் படிக்கச் சொன்ன  பதிகங்களின் தொகுப்பை உள்ளடக்கம் கொண்டிருக்கிறது இது.

‘பதிகங்கள் அவர்கள் பாடிப் போனவை, உள்ளே உணர்ந்தால் நம்மிடமிருந்து ஒரு சொல்லாவது வரும். பதிகங்கள் வேண்டாம்!’ என்ற வழியில் பயணித்தவன், திரும்பவும் திருமுறைகள் கொண்ட ‘சிவ வழிபாட்டு மாலை’ கொண்டு வருகிறேன், அப்பாவின் பணி இதன் வழியே தொடரும் என்ற நம்பிக்கையில்.

இரண்டு சிறு நூல்கள் வெளியீட்டிலும் முதன்மை நோக்கம் ஒன்றே – அப்பா கொண்டாடி மகிழ்வார், விரும்புவார், வாழ்த்துவார்!

கலவையான உணர்வுகளுடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
28.12.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *