ஓராண்டிற்குப் பிறகு விமானம்

சரியாக ஓராண்டிற்குப் பிறகு விமானமேற வருகிறேன்.

‘டிக்கெட் தேதோ, ஐடி கார்ட்..’ என்று முரட்டு இந்தி இங்கிலீஷில் சொல்லி வாங்கி பார்த்துத் தரும்
வாயிற்காவலர்கள், இப்போது இரண்டையும் தொடாமல் பார்க்கிறார்கள். ‘மாஸ்க் டவுன்..’ என்கிறார்கள் புதிதாய் முகம் பார்க்க.

செல்ஃப் செக்இன் இயந்திரங்கள் கூடுதலாக உள்ளன என்றாலும் மக்கள் இன்னும் வரிசையிலே அதிகம் இருக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் எல்லோரும் சுவாசக்கவசத்தோடே திரிகிறார்கள், இருக்கிறார்கள். சுவாசக்கவசத்திற்கு வெளியே மூக்கை மட்டும் நீட்டிக்கொண்டு திரியும் ஆட்களும் இருக்கவே செய்கிறார்கள்.

செக்யூரிட்டி செக்இன் நுழைவிடத்தில் ‘ப்ரோர்டிங் பாஸ்’ என்று காவலர்கள் நின்று சோதிக்குமிடத்தில் வெப்கேமும் பெரிய திரையும் புதிதாக உட்கார்ந்திருக்கின்றன. அதில் உங்கள் போட்டிங் பாஸை காட்ட நீங்கள் இந்தப் பக்க திரையிலும் காவலர் அந்தப் பக்கத் திரையிலும் பார்க்க முடிகிறது. அவனுக்கு சந்தேகம் வரும் கணத்தில் ‘மாஸ்க் டவுன்’ என்கிறான். அது பரவாயில்லை, எனக்கு முன்பு நின்ற இளம்பெண்ணிடம் ‘ஜ்ஜிம்மே!’ என்று ஏதோ சொன்னான். பல முறை சொல்லியும் அவருக்குப் புரியாமல் என்னைப் பார்க்க, நான் கொஞ்சம் முன்னே சென்று ‘க்யா ஜி!’ (அவ்ளோதான் நம்ப மொத்த இந்தியும்!) என்று சொல்ல, அதே ‘ஜ்ஜிம்மே!’ என்றான் திரும்ப. ஒரு கணம் விழித்து, ‘ஓ… ஸ்ஜூம்மா!’ என்று கேட்டு, ‘மேடம், உங்க போர்டிங் பாஸ் சரியா தெரியலியாம். ஸ்ஜூம் பண்ணுங்க!’ என்று விளக்கியதும் நடந்தது.

சிரமம் பார்க்காமல் போர்டிங் பாஸ் பிரிண்ட் செய்து வருபவர்கள்,
பாதுகாப்பு சோதனையில், ‘போர்டிங் பாஸ்’ என்று ஒரு வேளை காவலர் கேட்டால் எளிதாக கடந்து வர முடியும். இல்லையென்றால், ஸ்கேனிங் மெஷினில் இருக்கும் உங்கள் ஃபோனை வெளியே போய் எடுத்து வந்து அவரிடம் காட்டி விட்டு போகவேண்டும். விமான நிலையத்தில் நுழைந்ததும் இருக்கும் ஸெல்ஃப் செக்கின் இயந்திரத்தில் போர்டிங் பாஸை அச்சடித்துக் கொள்வது சிறந்தது.

உள்ளே வந்ததும் திரைப்படத்தில் பாடலுக்கு ரஜினி அணிவாரே ஒரு லாங் கோட் அப்படியொரு உறையைத் தருகிறார்கள் அணிந்து கொள்ளச் சொல்லி, நடுவிருக்கையில் அமைப்பு போகிறவர்களுக்கு. மற்றவர்களுக்கு நெற்றியிலிருந்து முகம் முழுக்க மறைக்கும் ட்ரான்ஸ்பரண்ட் ஷீல்டும் மாஸ்க்கும்.

மற்ற படி விமான நிலையம் பழையபடியே இயங்குகிறது. அதே ஃபில்டர் காஃபி இப்போது இன்னும் கூடுதல் விலையில் – 160/-

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை விமான நிலையம்
    03.01.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *