தாரை தப்பட்டை – திரை விமர்சனம்: பரமன்பச்சைமுத்து

wpid-unnamed.jpg

image
சென்ற வருடம் முகநூலில் ஒரு விவாதத்திற்காக ஒரு கேள்வியை கேட்டிருந்தேன்.
‘அன்பென்பது என்ன, நீ அழுது கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை நான் பக்கத்திலிருக்க இடம் வேண்டும் என்பதா? அல்லது நான் தூரமாகப்  போனாலும் பரவாயில்லை, நீ நன்றாக இருக்க வேண்டும் என்பதா?’ என்று கேட்டிருந்தேன். அதற்கான இயக்குநர் பாலாவின் பதில் ‘தாரை தப்பட்டை’ திரைப்படம்.

ராஜாவும், பாலாவும், வரலட்சுமியும் நம் நெஞ்சில் ஏறி நிற்கிறார்கள். ‘ஐ ஆம் மிஸ்டர் சூறாவளி!’ என்று ரகளை செய்யும் வரலட்சுமி பாத்திரம் தமிழ் சினிமாவில் வெகுகாலம் பேசப்படும்.

ஒரு முந்தைய தலைமுறை கலைஞனின் வலிகள், கலையை கொஞ்சம் மாற்றித் தரும் அடுத்த தலைமுறை, மக்களின்  ரசனை மாற மாற நலிவு பெறும் கலை,  அவர்களின் வலிகள் என போகிற போக்கில் பதிவு செய்கிறார்.

எப்போதும் அன்பை வெளிப்படையாய் பேசுபவள், எப்போதும் உள்ளேயே வைத்துக்கொண்டு வெளிக்காட்டாதவனை சந்திக்கும் ஒரு தருணம்… பேசாதவன் ஒரேடியாக பேசிவிட, பேசிக்கொண்டேயிருப்பவள் பேசவே முடியாமல் போகிறாள். படம் நம்மை ஒடுக்கி விடுகிறது.

‘ஒன் மகன் வாசிச்சா, என் காலு  தரையில நிக்காதே’ என்று சாராயம் உறிஞ்சுவதிலிருந்து தொடங்கி, ‘என் மாமனுக்கு ஒண்ணுன்னா நான் உடம்புல துணியில்லாம கூட ஆடுவேன்!’ என்ற காலில் ரத்தம் வரும் நிலை
யில் சொல்லும்போது மனம் முழுக்க பரவி இருக்கும் காட்டுத்தனமான காதல், படித்துறையில் ஓங்கி உதைத்து ஆற்றில் தள்ளும்போது பெரும் வடிவமெடுத்து வியாபித்து நிற்கிறது. இதை அனுபவித்துப் பார்ப்பவர்களுக்கு ‘பாருருவாய்… சிவபெருமானே!’ திருவாசகப் பாடல் வரும்போது கண்ணில் நீர் கட்டும்.  இந்தப் பாடலை தனியாகப் பார்க்கக் கூடாது, படத்தின் அதே வரிசையில் பார்க்க வேண்டும். (தன்னையே தருவேன் என்ற ஒரு பாத்திரத்திற்கு திருவாசகப் பாடலை வைத்த பாலா – ராஜாவுக்கு கும்பிடு போடுகிறேன்)

இடைவேளையோடு படத்தை முடித்திருக்க வேண்டும் என்று ஒரு கருத்து உள்ளே வந்தாலும், எடுத்துக் கொண்ட கதையை விட்டுக்கொடுக்காமல் தன் பாணியில் தந்துள்ளார் துணிச்சலாக என்றும் தோன்றுகிறது. முடிவு வேதனை தருவது கூட இந்தப் படத்தின் வெற்றிதான்.

சசிகுமாரும், வில்லனும், மற்றவர்களும் நன்றாக செய்திருக்கின்றனர்.

இரண்டாம் பாதி மெதுவாக போகிறது. படம் எல்லோருக்கும் பிடிக்காது.
விருது நிச்சயம்.

நிறை: வரலட்சுமி, ராஜா, முதல் பாதி
குறை: ‘இங்க பாரு’ என்று சொல்ல வேண்டிய தஞ்சாவூர் வட்டார வழக்கு ‘இங்காரூ’ என்று மதுரை வழக்கிலேயே வருகிறது சசிகுமாருக்கு, சூறாவளி இல்லாதபோது விழுந்துவிடும் படம் என ஆடும் இரண்டாம் பாதி.

‘தாரை தப்பட்டை’ :  ராஜா – பாலா – வரலட்சுமி பலமாக அடிக்கும் தாரை தப்பட்டை

திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *