‘விசாரணை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

visaranai2 - Copy

 

visaranai1

ஆட்டோ ஓட்டும் ஒருவர் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டெழுதிய ‘லாக்கப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட படமாம். நாவல் எழுதியவரை உலகத் திரைப்பட விழாவிற்கே கூட்டிச் சென்றும், படத்தில் பெயர் போட்டும்  கௌரவித்து விட்டார் இயக்குநர்.

தங்களைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கும் உயர் அதிகாரம் கொண்டவர்களுக்கு பெரும் நெருக்கடி வந்தால், அவர்களது வட்டத்திற்குள் மாட்டும் சாமான்யனின் நிலை என்னவாகும், பல ஆண்டுகளாய் கெட்டு புரையோடிப் போய் கிடக்கும் ஒரு சிஸ்டத்தை ஒரு தனி மனிதன் எதிர்த்தால் என்னவாகும் என்பதை பகீரென்று சொல்லும் படம்.

‘ஆடுகள’த்தில் அடித்து ஆடி தேசிய விருது குவித்த வெற்றிமாறன், ‘விசாரணை’யில் வெளுத்து வாங்கியிருக்கிறார். விருது நிச்சயம்!

பிழைப்பிற்காக வெளியூர் போய், பூங்காவில் தூங்கி, சலூனில் தலை வாரி, பரக்கப்பரக்க சைக்கிள் மிதித்து, அதிகாலை கடை திறந்து அங்கேயே இரவு வரை உழைக்கும் தினேஷ் பாத்திரம், அவனது நண்பர்கள் பாத்திரங்கள் இன்னும் கண் முன்னேயே நிற்கின்றன என்பதை விட மாநகரில் தினசரி வாழ்வில் நாம் பார்த்த பல மனிதர்களை நினைவூட்டுகின்றன.

சமுத்திரக்கனி – சபாஷ். சம்பளமும் வாங்கிக் கொண்டு சட்டத்தை வளைக்கும் சட்டைகளுக்கிடையே, மனசாட்சிப்படி நிமிர்ந்து நிற்க முயற்சித்து செய்வதறியாது நிற்கும் ஒரு நேர்மையான அதிகாரியை கண் முன்னே நிறுத்துகிறார்.  நடிகனாகவே தெரியவில்லை. அந்தப் பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி வெளிப்படுத்தி விட்டார்.  அவரது தோற்றம் பொருந்திப் போகிறது.

visaranai2திருப்பதி பிரசாதம் தருபவரின் கருணையைக் கண்டு ‘அடிக்கறாங்க சார்!’ என்று கெஞ்சும் காட்சியும், ‘கொல்லப் போறாங்கன்னு பேசிக்கறாங்க சார்’ என்று அப்சல் அரண்டு கேட்கும் காட்சியும், யாரை நம்புவது என்று தவிக்கும் ஒரு சாமான்யனின் மனவலியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.
‘விடுவிச்சிட்டாங்களே, ஓடிப் போங்கடா! டேய், இங்க இருந்தா மாட்டிப்பீங்க’ என்று கூவ வேண்டும் போல் இருக்கிறது சில இடங்களில். திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்தலுக்கு கிடைத்த வெற்றி இது.

பகீரென்று முடியும் அந்த முடிவு மனதை ஏதோ செய்கிறது.

‘சிஸ்டம்’ என்பது பல்வேறு மனிதர்களால் பல்லாண்டுகளாய் உருவாக்கப்பட்டு பெரிதாக வளர்ந்து நிற்கும் ஒன்று.  திடீரென்று யாரேனும் ஒரு பலமில்லாத மனிதன் அதை மாற்ற முயற்சித்தால், அவன் இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஆழமாக சொல்லியிருக்கிறார்கள்.

எல்லாப் போலீசுகளும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ண முடியாது, உருட்டுக் கட்டை எடுக்கும் போலீஸும், உதவி செய்யும் பெண் போலீஸும் ஒரே ஸ்டேஷனில்தான் இருக்கிறார்கள் என்று சொல்கிறது திரைக்கதை.  இருந்தாலும்,
படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் ஒரு சாமான்யனுக்கு காவல்துறை அலுவலகத்தைப் பார்த்தால் இனி ஒரு பயம் வரும் என்பது உண்மை.  பணக்கார கிஷோர், பார்க்கில் தூங்கும் தினேஷ், அதே துறையில் இருக்கும் அதிகாரி என எல்லோருக்கும் இதே நிலைதான் என்பதைப் பார்க்கும்போது அந்தப் பயம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இப்படி ஒரு படத்தை தயாரித்த தனுஷுக்கு பாராட்டுக்கள்.

இது தமிழ் சினிமாவின் பெருமை.  கமர்சியல் படங்கள் மட்டுமே விரும்புபவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். இருந்தாலும் பாருங்கள். இது போன்ற படங்கள் வெற்றி பெருவது நம் தமிழ் சினிமாவுக்கு நல்லது.

வி- டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘விசாரணை’ – வேறு தளத்தில் வெளுத்து வாங்கல்.

: திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

1 Comment

  1. Selvakumar Ganapathi

    Thanks Paraman, well versed and honest comments.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *