ஏ ஆர் கிருஷ்ணன் என்ற மனிதனை இயற்கை அழைத்துக் கொண்டது.

a rk 1 - Copy

a rk 1

 

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல் தோன்றுமே, எல்லோரும் இருக்கும்போதும் யாருமே இல்லாதது போல் உணர்வோமே, அப்போது உடனே அழைத்து பேசுவதற்கு,

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் போது உள்ளம் பூரித்து நிற்கும் அவ்வேளையில் உள்ளே ஒரு தனிமை உருவாகுமே, அப்போது உடனே அழைத்து பேசுவதற்கு,
ஒரு பெரும் வெற்றி வரும்போது அதை பகிர்ந்து கொண்டாடுவதற்கு,

பெரும் சோதனைகள் வந்து துவண்டு நிற்கும்போது, ‘இப்ப சரியாயிடும் போ!’ என்று தோளைத்தட்டி சொல்வதற்கு,

இரவு உணவு உண்ண பணம் இல்லாமல் பசியும் மானமும் போட்டிப் போட்டுகொண்டு நம்மைத் தின்னும் வேளையில், முகத்தை மட்டுமே பார்த்து முழுவதையும் விளங்கிக்கொண்டு வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்புவதற்கு,

குடும்பத்தைப் பற்றி மனைவியைப் பற்றி மகள்களைப் பற்றி தந்தையைப் பற்றி தாயைப் பற்றி அலுவலகத்தைப் பற்றி என அந்தரங்க விஷயங்களைப் பற்றிக் கூட நம்பி பகிர்ந்துகொள்வதற்கு,

வெளியூரில் இருக்கும் வேளைகளில் ‘மனைவியும் மகள்களும் தனியாக இருக்கிறார்கள், கொஞ்சம் என் வீட்டுக்குப் போயி இருக்கிறீங்களா?’ என்று கேட்டுக்கொள்வதற்கு,

‘இந்த இடத்தில நான் தப்புப் பண்ணிட்டனோன்னு தோணுது, சரியா, தப்பா?’ என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு,

இப்படி எல்லாவற்றிக்குமாக உங்களுக்கு ஒரு மனிதர் இருந்தால், அவரோடு எவ்வளவு சேர்ந்திருக்க முடியுமோ சேர்ந்திருங்கள். அவரை இழந்துவிடாதீர்கள். நான் இழந்து விட்டேன், இதை எழுதமுடியாமல் உடைந்து தேம்பித் தேம்பி அழுகிறேன், எவ்வளவு அழுதாலும் வாழ்க்கை ‘ஏஆர்கே’வை திரும்பித் தரப் போவதில்லை.

‘சார் எல்லாக் கிளாசுக்கு போகும்போதும் ஏஆர்கே சாருக்கு ஃபோன் பண்ணி பேசிட்டுத்தானே போவீங்க! இனிமே?’ என்று கேட்ட என் டிரைவருக்கு சொல்ல என்னிடம் பதில் இல்லை.

மலர்ச்சி நிறுவனத்தில் ‘ஃபவுண்டர்ஸ் ப்ரோஃபைல்’ எழுதுவதிலிருந்து, வளர்ச்சி இதழின் குறுக்கெழுத்துப் போட்டி எழுதும் வரையில் என என்னுடன் எல்லாவற்றிலும் சேர்ந்து நின்ற ஏ ஆர் கிருஷ்ணன் என்ற மனிதனை இயற்கை அழைத்துக் கொண்டது.

‘பரமன், இத்துடன் அடுத்த ஆறு மாத வளர்ச்சி இதழ்களுக்குத் தேவையான குறுக்கெழுத்துப் போட்டியை முடித்து இணைத்துள்ளேன்’ என்று மின்னஞ்சல் அனுப்பி ஒரு வாரத்திற்கு முன்பே தனது கணக்கை முடித்துவிட்டார்.

‘பரமன், ரொம்ப நாள் ஆச்சி நாம் சேர்ந்து ஒரு ட்ரிப் போயி. ராம்ஜி கிட்டயும் லதாகிட்டையும் பேசி அரேஞ்ச் பண்ணு’ என்று பத்து நாள் முன்பு சொன்ன போது, ‘சரி’ என்று சொன்ன எனது கணக்கு முடியவில்லை.

எல்லாம் வல்ல இறைவா…
உன் கணக்கு எனக்குப் புரியவில்லை. புத்திக்குத் தெரிகிறது, மனது கேட்கவில்லை. உடைந்து அழுகிறேன். விழுந்து வணங்குகிறேன். பிரார்த்திக்கிறேன்.

எல்லோருக்கும் உதவி புரிந்துகொண்டே வாழ்ந்த அந்த மனிதற்கு நற்கதி கொடு.
உன் பாதத்தின் அடியில் அவருக்கு இடம் கொடு.

-பரமன் பச்சைமுத்து
14.05.2017
சென்னை

A R K

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *