மணிவாசகர் பதிப்பகம் சென்றிருந்தேன்

வருமானம் என்று பார்க்காமல் தமிழுக்காக சில பதிவுகள் காக்கப்படவே வேண்டும் என்று இறங்கி தமிழ் ஆராய்ச்சி நூல்களை, தமிழறிஞர்களின் நூல்களை பெருமளவில் வெளியிட்ட சிதம்பரம் ஊரின் பெருமைமிகு பெரியவர் முனைவர் ச.மெய்யப்பன் அவர்களையும் அவரது மணிவாசகர் பதிப்பகத்தையும் தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும்.

அந்த நல்ல நினைவுகளோடு இன்று மணிவாசகர் பதிப்பகத்தின் சென்னை அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது.

மலர்ச்சி மாணவர்கள் சிலர் (பேட்ச் 22) கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ பற்றிய கலந்துரையாடல் ஒன்றில் ‘வீராணம் ஏரி ஆடிப்பெருக்கு உற்சவம் – வந்தியத் தேவன் குதிரையைத் தொலைத்தல்’ பற்றியெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, ‘பொன்னியின் செல்வனை முழுதாய் தொடர்ந்து படித்து இருபது ஆண்டுகள் ஆயிற்று’ என்று சொல்லியிருந்தேன்.

இன்று மணிவாசகர் பதிப்பகம் சென்றிருந்த என்னிடம், அதை மனதில் வைத்துக் கொண்டு திருவாசகத்தோடு பொன்னியின் செல்வனையும் கையில் தந்துவிட்டார் சோமசுந்தரம்.

எனது எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது வகுப்புகளில் இவர்களது ‘வெற்றித் துணைவன்’ என்ற நோட்ஸ் கொண்டே பள்ளித் தேர்வுகளுக்குத் தயாரானேன் நான். இந்த நோட்ஸை வாங்குவதற்காக அம்மாவிடம் ‘இல்லன்னா பள்ளிகொடத்துல சார் அடிப்பாரும்மா!’ என்று பொய் சொன்னதும், கையில் பணமில்லாமல் குளத்து மூலை மூன்றாம் வீட்டு பொற்செல்வியின் அம்மாவிடம் போய் என் அம்மா கடன் வாங்கி வந்து ஆறு ரூபாய் தந்ததும் நெஞ்சை அழுத்துகிறது இன்று.

– பரமன் பச்சைமுத்து
08.11.2017
சென்னை

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *