கண்டறிவதும், கற்றுக் கொள்வதும்தானே வாழ்க்கை

காலையில் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதே குரல்வளை அடைப்பு நீங்கி தெளிவடைந்ததைப் போலொரு உணர்வு. ‘சிவாய நம’ ‘மலர்ச்சி வணக்கம்’ என்று சொல்லிப் பார்த்தேன். அதே பழைய குரல் வந்ததும் துள்ளிக் குதித்தேன். ‘அம்மா, ஆசை, ஓடை… அனைத்தும் வந்து விட்டது… அனைத்தும் வந்து விட்டது… தாயே…’ என்று பேச்சு வந்ததும் பரவசத்தில் துடிக்கும் ‘சரஸ்வதி சபதம்’ படத்து சிவாஜியைப் போலப் பரவசத்தில் துடித்தேன். ‘ஹியூமன் பீயிங்ஸ் ஆர் மேட் அப் ஆஃப் ஃப்பைவ் பர்சனாலிட்டீஸ்…’ என்று சொல்லி என் குரலை நானே கேட்டு பரிசோதித்தேன்.

பல் துலக்கி, வெறும் வயிற்றில் இருக்கும் வேளையில் மூக்கில் சில சொட்டுகள் விட வேண்டிய ஆயுர்வேத ‘அனு தைல’த்தை எடுத்தேன். கண்ணை சரி செய்ய கேரள ஆயுர்வேத மருத்துவர் கொடுத்தது. கண்ணில் விட இருவகை சொட்டு மருத்துகளும், மூக்கில் விட இந்த அனு தைலத்தையும் தந்தார்.

‘எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…’ என்று பாடியதோடு விடாமல் இடையில் வரும் இளையராஜாவின் ‘சகரிமா… சகரி..’வையும் கற்பழித்துக் கொண்டே அனு தைலத்தை எடுத்து மூக்கில் விட்டேன்.

சூடான சோற்று வடி கஞ்சியை ஒரு கையில் எடுத்துக் கொண்டு மறுகையில் செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டு பால்கனி அருகில் போனவன் எதையோ உணர்ந்து நின்று உறைந்து போனேன்.

அனு தைலம் தொண்டையில் இறங்கியிருந்தது மட்டுமல்ல, தொண்டையில் ஏதோ ஒரு அழுத்தமான ஏதோ பரவியிருந்து போல ஒரு உணர்வு. ‘சகரிமா… சகரி…’ பாடிப் பார்த்தேன். காலையிலிருந்த தொண்டை இல்லை. குரல்வளையில் ஏதோ பாதிப்பு என்ற ஒரு உணர்வு.

ஆடாதொடை, ஓமவல்லி, பூண்டுத் தேன், அதிமதுரம் என இரண்டு நாள் உழைப்பு இரண்டு துளி அனு தைலத்தில் அமிழ்ந்தது.

‘மூன்று நாளாய் தொண்டைக் கட்டு போன்ற ஒரு அவதி வந்து பட்ட அல்லலுக்கு இதுதான் காரணமா!’ என்ற உணர்வு உறைந்தது.

கண்டறிவதும் கற்றுக்கொள்வதும்தானே வாழ்க்கை! நான் வாழ்கிறேன்!

– பரமன் பச்சைமுத்து.
14.02.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *