‘கலகக் கலைஞன்’ – ஜெயகாந்தன் – கவிஞர் வைரமுத்து கட்டுரை

தமிழாற்றுப்படை வரிசையில் ஜெயகாந்தனைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை கவிஞர் வைரமுத்து வாசிக்கும் நிகழ்ச்சிக்கு உடல்நலம் குன்றிய எழுத்தாளர் சிவசங்கரி இருமல்களுக்கிடையே தலைமையுரை ஆற்றும் போதே புரிந்தது, ‘பரமன், இந்த ஆளுமை செய்யும் இந்தப் பகிர்வுகள் தவறவிடக்கூடாதவை. நல்லவேளை நீ வாய்க்கப் பெற்றாய்!’ என்று பல்லி கத்தியது மண்டைக்குள்ளே.

‘வடகிழக்கு – வடக்கு இந்தியாவின் இலக்கியத்தோடு என்னை சேர்த்து வைக்க உதவியது சிவசங்கரியின் நூலே!’ என்று வைரமுத்துவே அறிவித்த அந்த நூல் உண்டான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். திராவிட வெளிச்சம் பாய்ந்து உமிழும் அவையில் தனது இயல்பை மாற்றிக் கொள்ளாமல் ‘கடவுள்”தெய்வம்’ ‘தவம்’ என்று உள்ளிருந்து பேசி தனது உயர்வைக் காட்டினார் சிவசங்கரி அவர்கள். நல்லவேளை அவர்களை தரிசிக்க முடிந்தது.

கவிஞர் வைரமுத்து எப்போதும் போல, கம்பீரமாய் கலக்கினார். பாயும் தமிழுக்குக்காகப் போகும் என்னைப் போன்றோர் கருத்துக் கலகங்களுக்குள் சிக்கிக் கொள்வதில்லையென்பதால், நிகழ்ச்சியில் ஊன்றிக் கலந்து விட முடிகிறது. கடைசி பாராவில் ஜெயகாந்தனின் ஒரு பாடலையும் சேர்த்து அதை அதே ராகத்தில் பாடியும் காட்டிவிட்டார் கவிஞர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிறந்து பள்ளியை துறந்து மாமாவின் பட்டறைக்கு வந்ததில் கம்யூனிச பட்டறைக்கு வந்தார் ( எனது ‘அகமும் புறமும்’ நூலில்) என்றெல்லாம் ஜெயகாந்தனைப் சொல்லுவாரோ என்று நினைத்திருந்தேன், ‘பானைக்குள் யானையை அடைக்கும் வேலை’ என்று இந்துமதி அவர்கள் சொன்னதைப் போல மற்ற பெரும் சங்கதிகளை எடுத்துக் கொண்டு வேறு தளத்திற்கு நகர்ந்து விட்டார் கவிஞர்.

‘விளிம்பை மையம் ஆக்கியவர்’ ‘நீங்கள் கோபக்காரரா, உங்களுக்கு ஏன் முறுக்கு மீசை?’ போன்ற இடங்களில் கைதட்ட வைத்த கவிஞர், ஜெயகாந்தனைப் பற்றிய சமகால இலக்கியவாதிகளின் எதிர்வாதங்களை ஜெயமோகனின் வரிகள் கொண்டு புறந்தள்ளியது நிமிர வைத்தது. ஜெயமோகன் மீது இன்னும் மரியாதையை வர வைத்தது.

நிறைய ஆய்வு செய்திருக்கிறார், நிறைய உழைத்திருக்கிறார். ஜெயகாந்தனை மீண்டும் வாசிக்கத் தூண்டி விட்டார்.

நேற்று நாரதகான சபாவில் வைரமுத்து அவர்களால் வாசிக்கப்பட்ட இந்தக் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், இன்றைய ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியாகியுள்ளது.

– பரமன் பச்சைமுத்து
14.06.2018
சென்னை

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *