வெள்ளியை விதைத்தாயிற்று

குழந்தைகள் மிக எளிமையானவர்கள், விதைப்பதை பட்டென்று உறிஞ்சி உள்ளே பதித்து வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். நாம் வெகு இயல்பாய் செய்யும் எதை எப்போது பிடித்துக் கொள்வார்கள் என்பது தெரியாது.

ஒரு மலர்ச்சி மாணவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் இரு வாரங்களுக்கு முன்பு. உரையாடி மகிழ்ந்து விடைபெற்று வெளியே வந்து காரேறும் போது அவ்வீட்டின் சிறுமியிடம் வானத்தைக் காட்டினேன். இருட்டுக் கவிழும் வானில் தேய்ந்த பிறைக்கு அருகில் தெரிந்த நட்சத்திரத்தை நான் காட்டுகிறேன் என்று புரிந்த அவள் சிரித்து குதித்தாள்.

‘ஸோ ப்ரைட் அங்க்கிள்!’

‘ம்ம்… அதுதான் வெள்ளி!’

‘வெள்ளி?’

‘யா…வீனஸ்! நிலாவுக்கு அடுத்த ப்ரைட்டஸ்ட் அதான். நட்சத்திரம் மாதிரி தெரியும், அது நட்சத்திரம் இல்லை!’

சூரியக்குடும்பமும் பள்ளிப்பாடமும் நினைவுக்கு வர அதிசயித்து கூவினாள். பாடத்தில் படித்ததை வெற்றுக் கண்களால் காணுமதிசயத்தை நம்ப முடியாமல் வாய் பிளந்தாள் ( அவளது அன்னையும் வாய் பிளந்தார்!!)

‘வீனஸ்ஸ்ஸ்… அதுவா பரமன் அங்க்கிள்!’

‘ஆமாம்! விடிகாலையிலும் மாலையிலும் பிரகாசமாகத் தெரியும். விடிவெள்ளி என்பது இதைத்தான்!’

மாட்டு வண்டியில், சைக்கிளில், ரயிலில், பேருந்தில் என
எத்தனை ஆண்டுகள் எத்தனை நாட்கள் இந்த வெள்ளியோடு பயணித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன், சிங்கப்பூர் மண்ணிலிருந்து ஆப்பிரிக்கத் தீவிலிருந்து வெள்ளியைக் கண்டு கூவியிருக்கிறேன்! கடிகாரங்கள் அதிக புழக்கத்திலில்லா முப்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த அந்த இந்தியாவில் இந்த வெள்ளியோடு இணைப்பிலிருந்த, என் போன்ற சிறுவர்களுக்கு இணைப்பைத் தந்த குளத்து மேட்டு கப்பக்காரத் தாத்தா, வள்ளியம்மை பாட்டி, தலைக்குளத்தார் போன்றோரை நினைத்துக் கொண்டே கார் கதவு திறந்து நுழைகிறேன். அதிசயித்து வாய்பிளந்து வெள்ளியை கண்களால் விழுங்கிக் கொண்டே காரைக் கிளம்பும் எனக்கு கையசைத்தாள் சிறுமி நிஷிதா.

இரண்டு வாரமாக மாலை வானை கவனிக்கிறாளாம், நட்சத்திரக் கூட்டத்தில் வெற்றுக் கண்களால் வெள்ளியைக் கண்டறிகிறாளாம், ‘வீனஸ்… வீனஸ்…!’ என்று உற்சாகம் கொள்கிறாளாம்.

ஒரு குழந்தையின் மனதில் ஒன்றை விதைத்தாயிற்று. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு வெள்ளிக்கு நேரம் கொள்வாள் அவள். இயற்கை மேல் இச்சை வரும். இணைப்பு வரும். அவளுக்குள் ஒரு விடிவெள்ளி முளைக்கலாம்!

– பரமன் பச்சைமுத்து
20.06.2018
சென்னை

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *