ஷாவோலின் – திரைப்படம்

மதம் பிடித்த யானை புகுந்த ஒரு வாழைத்தோட்டம் போல ஒரு பெரும்போரில் மிதிபட்டு நசுங்கி கிடக்கும் ஊரின் இடிபாடுகளிலிருந்து சடலங்களை கண்டெடுத்து அப்புறப்படுத்தி புத்தரின் பெயரால் சேவை செய்கிறார்கள் அவ்வூருக்கு வெளியே இருக்கும் ‘ஷாவோலின்’ கோயிலின் சீடர்கள். குவிந்து கிடக்கும் சடலங்களுக்கிடையே கொஞ்சம் முக்கலும் முணகலும் கேட்க, ‘ஹேய், இங்க ஒருத்தன் உயிரோட இருக்கான்!’ என்று கூவிக்கொண்டு தங்களது ஷாவோலினுக்குத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள் அவனை. நீர் தந்து அவனுக்கு நினைவு வரச் செய்யும் வேளையில், வெற்றி பெற்ற படையின் தளபதி வருகிறான் கண்ணில் பட்டவரையெல்லாம் சுட்டுக்கொண்டு. சீடர்கள் காப்பாற்றிக் கொண்டு வந்தவன்தான் தோற்ற படையின் கமாண்டர் என்றும், போரில் தோற்று ஓடிய அவனைத்தேடியே எதிரிப்படையின் தளபதி வந்திருக்கிறான் என்பதும் புரிகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஷாவோவிலின் படிகளில் ஏறி ஓடி தலைமைத் துறவியின் கால்களில் விழுந்து தன்னைக் காக்கும் படி அபயம் கேட்கிறான் தோற்ற படையின் கமாண்டர். தலைமை குரு கருணையின் கண் கொண்டு அபயமளிக்கிறார்.

ஷாவோலின் டெம்ப்பிளுக்குள் குதிரைகளோடு படைகள் வரக்கூடாது புனிதம் மரியாதை கெட்டுவிடும் என்று கூறி தள்ளு முள்ளு நடைபெறும் போது… கம்பீரமான குதிரையில் பெரும் கம்பீரமாக வருகிறான் வெற்றிபெற்ற படையின் கமாண்டர். ஷாவோலினின் படிகளில் குதிரையோடு ஏறி உள்ளே நுழைந்து, எதிர்ப்பவரை அடித்து அழிச்சாட்டியமும் துவம்சமும் செய்கிறான். ஷாவோலினுக்குள் அபயம் என்று வந்தவனைக் காக்க தன்னுயிரையும் பொருட்படுத்தாது வருகிறார் தலைமை குரு ‘அமிடா புட்ட்டா’ ( Amida Buddha) என்று சொல்லியபடி. ‘ஐயோ, தன்னால் இவர்களுக்கும் ஆபத்தா? உயிர் பிழைத்தால் போதும் இப்போதைக்கு என்று முடிவு செய்து, எதிரியின் கமாண்டரைப் பார்த்து வணங்கி, ‘நான் தோத்துட்டேன். இந்தா, டென்ஃபெங் சிட்டி முழுக்க உனக்குத்தான். இதோ எல்லாத் தங்கமும் உனக்குத்தான், வச்சிக்கோ. என்னை உட்டுறு!’ என்று கெஞ்சுகிறான் தோற்ற கமாண்டர். ‘பிரச்சினை முடிந்தது. இனி அமைதி திரும்பும்! நல்லது. அமிடா… புட்ட்டா!’ என்று துறவிகள் கண் மூடி வணங்கும் வேளையில் தோற்ற கமாண்டரை சுட்டுத்தள்ளி விட்டு ரத்தக்கறையில் ஷாவோலினின் பெயர்ப்பலகையை அடித்து எழுதிவிட்டு ‘மவனுங்களா, யாருகிட்ட!’ என்று கொக்கரித்து விட்டுப் போகிறான் கொடுமைக்கார கமாண்டர்.

டென்ஃபெங் சிட்டிக்காகவும் தங்கத்திற்காகவும் எதையும் செய்யும் கொடுங்கோலனான அவனை ஏய்க்க அவனது அண்ணனும் முயற்சிக்க கொடூரமாக கொல்கிறான் அவனையும். அப்போது நடக்கும் போரில் அடுத்த நிலை தளபதி படையினை கமாண்டர் மீதே நயவஞ்சகமாக ஏவிவிட்டு அவரது குடும்பத்தை சின்னாபின்னமாக்குகிறான். மனைவியைக் காணாது போகிறாள், அடிபட்ட மகளைத் தூக்கிக்கொண்டு் அதே ஷாவோலின் டெம்ப்பிளுக்கு ரத்தம் சொட்டச் சொட்ட ஓடுகிறான். மருத்துவ உதவி செய்து மகளைக் காக்கும் படி விழுந்து விழுந்து மன்றாடிக் கெஞ்சுகிறான். வெள்ளி ஊசி எடுத்து தொண்டை பக்கத்தில் செருகி அக்குபஞ்சர் மருத்துவத்தை தொடங்குகிறார் குரு. ‘எம் பொண்ண மட்டும் பொழக்க வைக்கல, தக்காளி உங்க எல்லாரையும் கொண்டே புடுவண்டா டேய்! எல்லாரையும், எல்லாரையும்…. ஷாவோலினை இடிச்சி தரைமட்டமா ஆக்கிடுவேன்!’ என்று உச்சகுரலில் மிரட்டிக் கத்துகிறான்.

‘அப்பா… கோபப்படாதே!’ என்று சொல்லிக் கொண்டே அவனது மகள் அவன் கண் முன்னே இறக்கிறாள். ‘டாய்….!’ என்று அவன் வெறிகொண்டு எழும் போது அவனது மனைவி அங்கு வந்து சேர்ந்து ‘மகள் சாகலடா மடையா! நீதான் கொன்னே! கொலகாரப் பாவீ!’ என்று அறைகிறாள்.

வெறிகொண்டு எழுந்தவனை ஷாவோலின் சீடர்கள் தற்காப்பு குங்ஃபூ கொண்டு தடுத்து சிறை வைக்கிறார்கள். ஷாவோலினின் கருவரையில் இருக்கும் மிகப் பெரிய தங்க புத்தர் சிரிக்கிறார்.

அவன், ஷாவோலினிலிருந்து தப்பி கோரைப்புற்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் வழியே ஓடும் போது காட்டுப் பன்றிகளைப் பிடிப்பதற்காக வெட்டி வைக்கப்பட்டிருக்கும் பெரும் குழியில் விழுகிறான். காயத்தினாலும் போரின் தோல்வியாலும் விரக்தியாலும் அடிபட்டு ஏற முடியா குழியில் கிடக்கும் அவனை ஷாவோலினில் சமையல் செய்யும் சீடனொருவன் பார்க்கிறான். அந்த ஷாவோலினின் சமையல்காரச் சீடன் ஜாக்கி சான்.

அதற்கப்புறம் என்ன நடக்கிறது? அடிபட்ட ரணம் கொண்ட கமாண்டர் திரும்ப ஷாவோலின் வந்தானா, ஷாவோலின் என்ன ஆகிறது. தங்க நிற புத்தர் என்ன செய்தார் என்பதையெல்லாம் முடிந்தால் அப்புறம் எழுதுகிறேன். அதற்குள் நீங்களே இந்தத் திரைப்படத்தைப் பார்த்தும் விடலாம். கீழுள்ள இணைப்பில் படத்தின் விவரங்கள் ( படமே!) உள்ளன.

https://m.youtube.com/watch?v=STr54ys69lc&t=15s

முதல் பாதி அருமை, கிளைமேக்ஸுக்கு கொஞ்சம் முன்பு கொஞ்சம் தளர்வு அப்புறம் நல்ல கிளைமாக்ஸ் என்ற ரீதியிலான நல்ல படம். இது ஜாக்கி சான் படமில்லை, சிறிய துணை பாத்திரமொன்றை ஏற்றிருக்கிறாரவர். பாருங்கள்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
24.06.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *