அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ முதல் பாகம் முற்றிற்று.

குகவேலனின் திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பு தொடங்கியது தினமலரில் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடர். அச்சில் வந்த முதல் தொடரின் பதிப்பைப் பார்க்க, நாகை தஞ்சைப் பதிப்பு தினமலர் தேடி மணக்குடியிலிருந்து பயணித்து சிதம்பரம் வழியே கொள்ளிடம் ஆற்றைக் கடந்து தைக்காலில் ஒரு தேநீர்க்கடையில் போய் வாங்கினோம். தேநீர்க்கடையிலேயே தினமலரை நான் பிடித்துக் கொண்டிருக்க, சிவவேலன் படமெடுத்தான் அதை.

வாரா வாரம் என வெளியாகி திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த வாரத்தோடு இருபத்தியேழாம் வாரம் வந்து நிற்கிறது. அடுத்த வாரத்தோடு ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடரின் முதல் பாகம் நிறைவடைகிறது.

ஈரோட்டில், கடையநல்லூரில், திருச்சியில், திருவெண்காட்டில், தஞ்சாவூரில் என பல ஊர்களிலிருந்தும் வரவேற்பளித்து பரவசப்படுத்தி விட்டார்கள் தினமலர் வாசகர்கள். சீனாவிற்கு வியாபாரப் பயணம் மேற்கொண்ட நான்கு வாரங்களிலும் வேலூர் பதிப்பு தினமலரை படமெடுத்து வாட்ஸ் ஆப்பில் படித்துத் தொடர்ந்தாராம் திருவண்ணாமலை சிவக்குமார்.
நின்று நிதானித்து பொறுப்பு கூடியது என்று உணர்ந்து கொண்டேன்.

‘வாய்ப்புண் இருக்கு என்ன செய்யட்டும்?’ போன்ற மருத்துவக் கேள்விகளைத் தவிர்த்து கூடுமானவரையில் வாசகர்கள் கேள்விகளுக்கான தீர்வை உள்ளடக்கித் தொடர் வந்தது.

மகிழ்ச்சி!

நன்றி!

‘எழுதுங்கள்!’ என்று களம் தந்து வாய்ப்புக் கொடுத்த தினமலருக்கு, அதிலுள்ள நண்பர்களுக்கு பெரும் நன்றிகள். இலங்கையில் இருந்தாலும் சரி, ஈரோட்டுக் கல்யாணத்திற்குப் போனாலும் சரி… எந்த ஊரிலிருந்தாலும் எங்கே பயணித்தாலும் எழுதித் தர வேண்டும், எழுதியே தீரவேண்டும். இல்லையென்றால் மணியடிப்பார் நண்பர் மணி. இது என்னை இன்னும் கட்டுக்கோப்பாக்கியது. வார்த்தது. வளர்த்தெடுத்தது.

ஊரில் அந்நாட்களில் ராஜவேலு சித்தப்பாவோடு சேர்ந்து மணக்குடி – குறியாமங்களம் – ஆயிபுரம் வீடுகளில் காலையில் தினமலர் பேப்பர் போட்ட பையனுக்கு, அதே தினமலரில் எழுதும் வாய்ப்பை தந்திருக்கிறது வாழ்க்கை. தினமலருக்கு நன்றி!

இறைவனுக்கு சரணம்!

‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ முதல் பாகம் முற்றிற்று. இரண்டாம் பாகம் துவங்கும்.

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
08.07.2018

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *