போர்ட்டோ நோவா தெரியுமா உங்களுக்கு?

ஓர் இடத்தின் அல்லது ஒரு மனிதனின் பெயருக்குப் பின்னே காரணங்கள் இருக்கலாம், விளக்கங்கள் இருக்கலாம், யாருடைய சிந்தனையோ இருக்கலாம். ‘இடுகுறிப் பெயர்’ ‘காரணப்பெயர்’ என்றெல்லாம் பாடங்கள் வைத்துக் கற்பித்த நம் மொழி சொல்லுவதும் இதைத்தானே.

ஒரு மொழியில் வழங்கப்படும் பெயரை வேற்று மொழியிலிருந்து வருபவனொருபவன் சரியாக உள்வாங்கிக் கொள்ளாத போது, பெயர் நாறடிக்கப் படுகிறது. அதன் பின்னிருக்கும் அழகியல் அடிபட்டுப் போகிறது. புரியாத புதிய பெயர்களை முதல் முறை கேட்கும் போது, ஏற்கனவே பழக்கப்பட்ட பெயரொன்றோடுப் பின்னி விடுவது வெகுசன உள்ளத்தின் இயல்பு. பரமன் என்ற எனது பெயரை ‘பர்மன்’ என்று முதலில் விளிப்பது வடக்கன்களின் இயல்பு. அவர்களுக்குப் புரிவதற்காகவே ‘ர’விற்கு மூன்று மாத்திரை அழுத்தம் கொடுப்பேன் அப்போதெல்லாம்.

அப்படித்தான் ‘பிரகாஷ் படுகோனே’வின் புதல்வியை ‘தீபிகா படுகோன்’ என்று சொல்லி பெயரைக் குதறி வைத்திருக்கிறது பாலிவுட் உலகம். மகேந்திர சிங் ‘தோனி’யை இன்னும் ‘டோனி’ என்றே எழுதுகின்றன சில தமிழ்
தினசரிகள். கர்நாடக எல்லையில் உள்ள ‘ஆடு தாண்டும் காவிரி’யை கன்னடத்தில் அவர்கள் ‘மேக்கே தாட்டூ’ என்று விளக்க, அதை ‘மேக தாது’ என்று இரும்பு தாது, தாமிர தாது வகையில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள். வை கோபால்சாமியை ‘வைகோ'(Vaikko)வாக்கியது பிரச்சினையில்லை, அதை ‘G’போட்டு ‘VaiGo’ என்று படிக்கிறது ஆந்திர செய்தி சேனல்கள்.

(‘வேத்து மொழிக்காரன் நம்ப பேரை தப்பாப் படிக்கறத வுடுங்க பரமன். இஞ்ச நம்ம ஆளுங்க பேரையே நம்மாளுவளே தப்பா படிக்கறாங்களே, ‘சுதா ரகுநாதனை’ ‘சுதா ரங்குநாதன்’ன்னு அமைச்சருங்களே சொல்றாங்களே அதுக்கு என்ன சொல்றீங்க நீங்க, சொல்லுங்க!’ என்றெல்லாம் கமெண்ட் அடிக்காமல் மேலே தொடருங்கள்!)

‘கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ்’ என்று சன் டிவி செய்தி வாசிப்பவர் படித்ததைப் பார்த்து நான் சிரித்த போது, என்னை வித்தியாசமாகப் பார்த்த நண்பர்களுக்கு, அது ‘S a n J o s e’ என்றிருந்தாலும் அதன் பெயர் உச்சரிப்பு ‘ஸான் ஓஸே’ என்று நான் சொல்லவில்லை.

வேற்று மொழிப் பெயர்களை, அதன் சொற்களை நாம் சொல்லும் போது இப்படித்தான் அவர்கள் சிரித்திருக்கக் கூடும். குறிப்பாய் ஆங்கிலப் பெயர்களை சொற்களை நம்மில் சிலர் சொல்லும் போது சிலர் சிரிக்கவே செய்வர். நமது பெயர்களை தப்புத் தப்பாய் ஆங்கிலேயன் சொன்ன போது எவரேனும் சிரித்தனரா தெரியாது, ஆனால் அவன் தவறாய் சொல்லிப் போனவற்றை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் நாம் என்று மட்டும் புரிகிறது செஞ்சிக் கோட்டையின் அடியில் நின்ற போது இன்று.

‘ஏரிக்கரைக் காடு’ என்பதை ‘ஏற்காடு’ என்று ஆக்கி, வேலூரை ‘வெள்ளூர்’ ஆக மாற்றி, மூன்று ஆறுகள் எனப்படும் மூனாறுவை ‘முன்னார்’ ஆக்கி, வெற்றிலைக் குன்றுவை வத்தலக்குண்டாக்கி அடித்து ‘பேட்லகுண்ட்’ ஆக மாற்றி, பூவிருந்தன்மல்லியை ‘பூனமல்லி’யாக்கி, திருவல்லிக்கேணியை ‘ட்ரிப்லிக்கேன்’ ஆக்கி அவன் செப்பிய அல்ல துப்பிய பெயர்களில் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

செஞ்சிக் கோட்டைப் பற்றிய குறிப்பைத் தாங்கிக் கொண்டிருக்கும் பலகையில் செஞ்சி ‘Ginjee’ என்றே எழுதப்பட்டிருக்கிறது.

இதெல்லாம் கூட பரவாயில்லை, என் ஊருக்கு அருகில் இருக்கும் ‘பரங்கிப்பேட்டை’ என்ற ஊரின் பெயரை ‘போர்ட்டோ நோவா’ என்று ஏன் மாற்றி வைத்தான் பிரித்தானியன் என்று தெரியவில்லை.

‘மேட்ரிக்ஸ்’ஸின் ‘நோவா’ கிரகத்திற்கான ஒரு துறைமுகம் பண்டைய இந்தியாவில்தான் இருந்தது. கடலையொட்டியிருந்த அந்த ஊரின் மணல் திட்டிகளில்தான் வேற்றுகிரக பறக்கும் தட்டுகள் வந்திறங்கின. வெள்ளைக்காரன் அதை அறிந்தே அதற்கு ‘போர்ட்-ஓ-நோவா’ என்று பெயர் வைத்தான் என்ற ரீதியில் நாளை எவரேனும் சரடு விடலாம், எவர் கண்டார்!

– பரமன் பச்சைமுத்து
திருவண்ணாமலை,
19.07.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *