நல்ல தீர்ப்பு – யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும் : – பரமன் பச்சைமுத்து

இந்தப் பூமிப் பந்து என்பது புல், புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் என பல்லுயிர்க்குமானது. மனிதனுக்கு மட்டுமேயானதல்ல. மொத்த பூமியும் எனக்குத்தான் என்று மனநிலையில் ஆக்கிரமிக்கும் மனிதனால்தான் பல்லுயிர்ப் பெருக்கம் தடைபடுகிறது. இயற்கையின் சுழற்சியில் எதுவுமே வீண் இல்லை. ஒவ்வொன்றுமே ஒரு சங்கிலிப் பிணைப்பால் இணைக்கப் பட்டு மொத்த சூழலும் காக்கப் படுகிறது.

ரசாயண உரப் பயன்பாட்டால், ரசாயண பூச்சிக் கொல்லிகளால் வெட்டுக்கிளி அழிந்தது. வெட்டுக்கிளி அழிவால் கொசுக்கள் அழிக்கப்படாமல் பெருகின. கொசுக்களின் பெருக்கத்தால் பன்றிக் காய்ச்சல், டெங்கு என பல வகைக் காய்ச்சல்கள் வந்து துன்புறுகிறது மனித இனம். கறிவேப்பிலையின் மலரை வண்ணத்துப் பூச்சிக்கும், பழங்களை குயில்களுக்கும் அண்டங்காக்கைகளுக்கும் வைத்து இலைகளை மனிதனுக்கு வைத்த இயற்கையின் படைப்பில் எதுவுமே வீண் இல்லை. ஒவ்வொன்றும் ஒரு சங்கிலிப் பிணிப்பால் இணைக்கப் பட்டிருக்கின்றன. ‘ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பிற்கும் சுனாமிக்கும் தொடர்பிருக்கிறது’ என்னும் ‘கயாஸ் கோட்பாடு’ பகர்வதும் இதைத்தான். புதிய வகை விதைகளால் விளைச்சல் அதிகம் வந்தது என்று மகிழ்ந்த உலகம், அதிகம் விளைந்த இந்தப் பயிர்களில்தான் பூச்சிகள் அதிகம் வந்தன என்பதைக் கண்டுகொள்வதற்குள், பூச்சிக் கொல்லிகளால் பெரும் இழப்புகள் நடந்தேறி விட்டன.

நிலம்… நிலம்…என்று நிலத்தின் மீது ஆசை கொண்டு, காடாக இருந்தாலும் பரவாயில்லையென்று கண்ணில் பட்டதையெல்லாம் காசு கொடுத்து ஆக்ரமிக்கும் மனிதனால் பல்லுயிர்ப் பெருக்கம் கெட்டுப் போனது. காடுகளின் சூழல் அழிகிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன. மனிதனின் பேராசையால் கட்டிடங்களும் வேலிகளும் எழுப்பப்பட்டு யானைகளின் வழித்தடங்கள் ஆக்ரமிக்கப்படுகின்றன. காலம் காலமாய் புழங்கிய வழியை திடீரென்று கட்டிடங்களெழுப்பி மனிதன் மறித்து விடும் போது திகைத்துப் போன யானைகள் ஊருக்குள் வருகின்றன. மனிதனின் முதல் தவறால் வழி மாறி வந்த யானைகளை அடித்து விரட்டி இரண்டாம் தவறையும் புரிகிறோம்.

என்ன பாவம் செய்தன அந்த யானைகள்? தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு தங்கள் வழியில் போகும் அந்த யானைகளை துயரத்திற்கு உள்ளாக்கி ஊருக்குள் வரவழைக்கிறோம். பின்பு வெடி வைத்தும் கும்கி யானைகளை வைத்தும் விரட்டி விடுகிறோம்.

நீலகிரி மலையின் பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களை மறித்துக் கட்டப்பட்டிருக்கும் பதினோரு கட்டிடங்களை, சுற்றுலா விடுதிகளை நாற்பத்தியெட்டு மணி நேரத்தில் இடிக்கலாம் என்று ஒரு உத்தரவையிட்டு யானைகளின் மீது அருவி நீரை ஊற்றியிருக்கிறது நீதி மன்றம். இனி என்ன நடக்கும், எத்தனை கட்டிடங்கள் இடிக்கப்படும் என்பதைத் தாண்டி இந்த தீர்ப்பு யானைகளைப் பற்றிய கண்ணோட்டத்தில், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பற்றிய பார்வையில், சூழலியல் பற்றிய ரீதியில் புது வெளிச்சத்தை ஏற்படுத்தும்.

மனிதனுக்கான இடத்தில் மனிதன் வாழட்டும். யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும். பல்லுயிரும் பெருகட்டும். எல்லா உயிர்க்குமான இந்த பூமி செழித்து சிறக்கட்டும்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
09.08.2018
சென்னை

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *