புற்றுத் தேன் உண்டிருக்கிறீர்களா?

‘தேசனே தேனாரமுதே சிவபுரனே!’

பக்தியில் திளைத்து இதை மாணிக்கவாசகர் பாடும்போது, புற்றுத் தேனின் சுவையின் நினைவில் பாடியிருப்பார் என்றே தோன்றுகிறது இன்று எனக்கு. ‘உன் பேரைச் சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே’ என்ற கார்த்திக் ராஜாவின் இசையில் வந்த ‘டும் டும் டும்’ படப் பாடல் வரியைப் போல, புற்றுத் தேன் என்று எழுதும் போதே என் உள்நாக்கில் தித்திக்கிறது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வீட்டின் கொடுக்காப்புளி மரத்தின் உயரத்து வெள்ளை வெளேர் கிளையில் இருந்த பெரிய தேன் கூட்டிலிருந்து ராமகிருஷ்ணனை கூட்டி வந்து தேன் எடுத்தார்கள் பூராயர் அண்ணனும் கண்ணப்பன் சித்தப்பாவும். தேனடையை பிழிந்து பிழிந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் ஊற்றினார்கள். கண்ணி வைத்து கொக்கு நாரைகளை பிடிப்பது, நல்ல பாம்பை அலக்கால் குத்தி கொன்று கிழிப்பது, தூண்டி போட்டு மீன் பிடிப்பது, தேன் எடுப்பது, நெல் மூட்டைகளை தூக்க என பலவேலைகளையும் மணக்குடியில் செய்து கொண்டிருப்பார் ராமகிருஷ்ணன்.

முகம் தலையெல்லாம் வெள்ளைத் துணியையும் கையில் தீப்பந்தத்தையும் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் கொக்கி போன்ற முட்கள் நிறைந்த கொடுக்காப்புளி மரத்திலிருந்து இறங்கி வரும் போது ஒரு தேனடையைத் தந்துவிட்டுப் போனார் என் கையில். அன்று குடித்த தேனின் சுவை என் வாழ்வில் ‘தேன் என்றால் அதுதான் தேன்’ என்று ஒரு ‘பெஞ்ச் மார்க்’ கொள்ளுமளவிற்கு இன்னும் நாவிலும் நினைவிலும் நின்று போனது.

அதற்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் எவ்வளவோ தேன் குடிதாயிற்று. எல்லாமே விழுங்கும் போது மருந்து போன்ற உணர்வைத் தரும் ‘உவ்வே’ தேன். உண்மையான தேனை சுவைகாதவர்களே இந்தத் தேனை கடைகளில் வாங்குகிறார்கள் என்று சொல்லிக் கொள்வேன். ஒரு வகையில் அது உண்மையும் கூட.

தருமபுரி தேன்கனிகோட்டைக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் இருக்கும் கோக்குமாரனஹள்ளியில் இருக்கும் ராமு பெருமாளின் விவசாயநிலத்திற்கு சென்ற போது ‘பரம்ஸ்… மஞ்சி மலைத்தேன்!’ என்று ஒரு பாட்டிலைத் திணித்தார். சென்னை வந்து சுவைத்த போது சுவையில் திகைத்துப் போனேன். மருந்து உணர்வு தரும் ‘உவ்வே’ தேன் அல்ல, அசல் தேன். இரண்டு மாதங்கள் தினமும் தேன்தான்! அப்புறம் அதே தேன் கிடைக்கவில்லை. சில ஆயுர்வேத சித்த மருந்துகளை உட்கொள்ள வேண்டி வந்தால் அதற்காக மட்டும் எஸ்கேஎம் சித்தா தேன் வாங்கி வைத்துக்கொள்வேன்.

இருவாரங்களுக்கு முன்பு வளர்ச்சிப்பாதைக்கு வரும்போது ரகு ஒரு பையை தந்து விட்டு ‘கௌரி கொடுத்து அனுப்ச்சதுங்க, புற்றுத்தேன், கை குத்தல் குழியடிச்சான் அரிசி’ என்று சொல்லிப் போனார். வீட்டிற்குப் போய் தேன் பாட்டிலை பார்த்ததும், ‘மருந்துத் தேனா, இல்ல நிஜம் தேனா?’ என்று எண்ணத்தோடேயே ஒரு கரண்டி தேனை நாக்கில் விட்டேன். ‘ஐய்ய்ய்யோ… சிறுவயதில் சாப்பிட்ட கொடுக்காபுளி மரத்து தேனெல்லாம் ஒன்றுமே இல்லை! இப்படி ஒரு சுவையை தேனில் கண்டதே இல்லை நான்!’

நாக்கில் படும்போது மட்டுமல்ல, விழுங்கும் போதும், விழுங்கிய பின்னும் இனிக்க வேண்டும் தேன். இந்தப் புற்றுத் தேன், நினைக்கும் போது கூட இனிக்கிறது!

புற்றுத் தேன் – இதுவரை உண்ட தேன் அனைத்திலும் சுவையில் உச்சம்!

‘சீரகம் – நற்பொருள் குவியம்’ என்ற பெயரில் கோவையில் ஒரு கடையைத் திறந்தார் இயற்கை பொருள்களை விளைவித்து சந்தையில் தரும் திருமதி கௌரி. அதன் திறப்பு விழாவிற்கு நான் செல்வதாக இருந்தது, திருவண்ணாமலையில் நடந்த மலர்ச்சி வகுப்புகளாலும், நெய்வேலியில் நடந்த மலர்ச்சி மாணவி திவ்யாவின் திருமணத்திற்கு வருவதாக ஒத்துக் கொண்டதாலும், கோவை சீரகம் திறப்பு விழாவிற்கு செல்ல முடியவில்லை.

வருவேன் என்று எனக்காக எடுத்து வைத்திருந்த புற்றுத் தேன் பாட்டில் அடங்கிய பையை சென்னைக்கு அனுப்பி விட்டார் கௌரி. இப்படி ஒரு தேன் இருக்கும் கடையை எப்படி விடுவது! சீக்கிரம் போக வேண்டும் கோவைக்கு. தொடந்து கிடைக்க வழி கேட்க வேண்டும்.

-பரமன் பச்சைமுத்து
சென்னை
29.09.2018

www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *