சோளக்கொல்லை…

20181105_112134-2396744489192963227.jpg

அண்ணாசாலையை இன்னும் ‘மவுண்ட் ரோடு’ என்றும், சென்னையை இன்னும் ‘மெட்ராஸ்’ என்றும்,
ரஜினியை ‘சிவாஜி’ என்றும், தனுஷை ‘வெங்கட் பிரபு’ என்றும், சூர்யாவை ‘சரவணன்’ என்றும் இன்னும் யாரேனும் விளிக்கக்கூடும்தானே. அப்படித்தான் ‘சோளக்கொல்லை’ என்பது எங்களுக்கு.

முத்து முதலியாரின் கொல்லை அது என்பதெல்லாம் பிற்பாடு வெகு ஆண்டுகளுக்குப் பிறகே தெரிய வந்தது. அரைக் கால்சட்டை அணிந்து கொண்டு மணக்குடியிலிருந்து புவனகிரியை கடந்து நடந்தே பெருமாத்தூர் ‘பாய்ஸ் ஹைஸ்கூல்’ போன காலங்களிலிருந்தே அது எங்களுக்குச் சோளக் கொல்லைதான். அதற்கு முன்பு பருத்தியும், அதற்குப் பின்பு சவுக்கும் நெல்லும் பயிரிடப்பட்ட போதும், இடையில் சில போகங்களுக்கு இருந்த சோளமே பெயரைத் தட்டிக் கொண்டது. அது இடுகுறிக் பெயரா இல்லை காரணப் பெயரா என்ற தமிழிலக்கணக் கணக்கை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

காலை பள்ளி்க்கு செல்லும் போதும் மாலை திரும்ப வரும் போதும் மஞ்சள் மஞ்சேள் என்று ஒரு காடு மாதிரி வளர்ந்து நிற்கும். ஓர் ஆள் உள்ளே போய் முழுசாய் மறைந்து கொள்ளுமளவிற்கு உயரமாக பயிர்கள் நிற்கும். எந்த தேசத்திலாவது எந்த ஊரிலாவது உட்கார்ந்து கொண்டு ஊரை நினைத்தால் முதலில் ஊருக்குப் போகும் வழியில் நிற்கும் இந்த சோளக்கொல்லையே நினைவில் வந்து நிற்கும்.

‘வெவசாயம்னா முத்து மொதலியார் மாதிரி செய்யனும். சோளம், கம்பு, சுறைக்காய், பாவக்காய், பருத்தி, நெல்லு, உளுந்துன்னு பண்றாரு பாரு!’ என்று பலர் பேசிக்கொள்ளுமளவிற்கு விவசாயம் நடக்கும் அவ்வயலில். மணக்குடி பழமலை உடையாருக்கு முன்பு மாட்டிற்கு புல் வெட்டும் இயந்திரமும், களையெடுக்கும் கருவியும் வைக்கப்பட்டது முத்து முதலியார் நிலத்தில்தான். அவர்களது வயலுக்கு வெளியே சாலையோரப் புதர்களில் எங்கள் ஈச்சங்காய், கலாக்காய் வேட்டை நடக்கும். கையில் முள் குத்தாமல் பறித்து வெற்றிக் களிப்பில் கடித்து சுவைத்து நடக்கும் களைப்பை அறுப்போம். பச்சைப் பாம்பு , சாரைப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், நல்ல பாம்புகளை கண்டு ரகமறியக் கற்றதெல்லாம் அப்போதுதான். அர்ச்சுணனோடும், சரவணனோடும் என் அதிக பொழுதுகள் இவ்விடங்களில் கழிந்திருக்கின்றன.

பள்ளிப் பருவம், மன்னம்பந்தல் கல்லூரிக்குப் போன போது, சிதம்பரத்திற்கு சைக்கிளிலேயே போன வேலை தேடிய காலங்கள், ராஜவேல் சித்தப்பாவோடு சர்க்குலேஷன் லைப்ரரி – தினமலர் பேப்பர் எடுத்து வந்த சில காலங்கள், சென்னைக்கு வேலை தேடி வந்த காலங்கள், திருமணம் நடந்து மனைவியோடு வந்த பொழுது என எல்லா நேரங்களிலும் மணக்குடிக்கு வரும் போதெல்லாம் கண்களும் மனதும் சோளக்கொல்லையில் சில கணங்கள் குத்தி நிற்கும். முதன் முதலில் கார் வாங்கி எடுத்து வந்த போதும், மகள்களை கூட்டி வந்த போதும் முத்து முதலியார் கொல்லையில் நிறுத்தி இறங்கி சில நிமிடங்கள் கழித்தே சென்றிருக்கிறேன். டோக்கியோவிலிருந்து திரும்பி வந்த போது, ‘ஹாய்!’ என்று சொல்லியே கடந்திருக்கிறேன்.

நான்காண்டுகளுக்கு முன்னால் வந்த போது, பேரதிர்ச்சி. சோளக்கொல்லையை கூறு போட்டு வீட்டு மனைகளாக மாற்றியிருந்தார்கள். ‘முத்து நகர்’ என்று பெயரெழுதப்பட்ட பெரிய வளைவெல்லாம் வைத்திருந்தார்கள், ‘வீட்டு மனை ரூ.98,000/-‘ என்று. ‘விளை நிலத்தை விலை நிலமாக ஆக்கிட்டீங்களேப்பா!’ என்று குமுறல் வந்தாலும், ‘விவசாயம் பொய்த்து விட்டதே அவர்கள் என்ன செய்வார்கள்!’ என்று உள்ளேயே பதில் குரலும் வரவே செய்தது. எல்லா ஊரையும் போல விளை நிலங்கள் விலை நிலங்களாயின எங்களூரிலும்.

‘முத்து மொதலியார் வெவசாயத்தை வுட்டுட்டாரு. ரியல் எஸ்டேட் போட்டு விக்கறாரு. பொன் வெளைஞ்ச பூமி, ம்ம்ம் மனசே கேக்கல’ என்பார்கள் பலர் நான் கேட்கும் போதெல்லாம். புவனகிரியின் எல்லையையொட்டிய பகுதிகளில் சிலர் வீட்டுமனை வாங்கினர். தள்ளி இருக்கும் இந்த இடத்தில் எவரும் வாங்கவில்லை போல.

அடுத்த சில ஆண்டுகளில் கருவை முட்கள் அடர்ந்து புதர் மண்டிய காடாக வீணாகிக் கிடந்தது சோளக்கொல்லை. ஆள் போனால் மறைக்குமளவிற்கு இருந்த சோளக்கொல்லை, யானை போனால் மறைக்குமளவிற்கு புதர்க்காடாய் வளர்ந்து கிடந்தது. கடக்கும் போதெல்லாம் கருவை முட்கள் மனதில் குத்தும்.

எப்போதும் போல இவ்வாண்டும் தீபாவளிக்கு மனைவியோடும் மகளோடும் மணக்குடிக்கு காரில் விரைகையில், வேடன் தோப்பைக் கடந்து சோளக்கொல்லையை நெருங்கியதும்
அலறியேவிட்டேன். ப்ளூ டூத்தில் ’96’ படத்துப் பாடலை ஒலிக்க விட்டுக் கொண்டிருந்த மகள்கள் அதிர்ந்தனர். உறங்கிக் கொண்டிருந்த மனைவி எழுந்து விட்டாள்.

வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு இறங்கி ஒரு பைத்தியக்காரனைப் போல வெளியே ஓடி எதையோ வெறித்துக் கொண்டிருப்பவனை புரிந்து கொள்ளமுடியாமல் குழம்பினர்.

என் முன்னே சோளக்கொல்லை. மைக்ரோசாஃப்ட் வேர்டில் செய்வதைப் போல, சில ஆண்டுகள் ‘அன் டூ’ செய்யப்பட்டு நிற்கிறது சோளக்கொல்லை. ‘ஐய்ய்யோ…!’ மண்டியிருந்த புதர்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, நிலம் திருத்தப்பட்டு, அண்டை வெட்டப்பட்டு, வரப்புகள் உயர்த்தப்பட்டு… ஏர் உழப்பட்ட நிலத்தில் நடவு நட்டிருக்கிறார்கள். சில நாள் நெல் பயிர்கள் விறைத்து நிற்கின்றன. திரும்பவும் விவசாயம் நடக்கிறது எங்கள் பகுதியில்.

‘விலை நிலம் திரும்பவும் விளை நிலமாகி நிற்கிறது!’

‘அப்பா… வாட் ஹேப்ண்ட்!?’ பின்பக்கமிருந்து மகளின் குரல். என் முன்னே சோளக் கொல்லை. சொன்னால் அவளுக்குப் புரியுமாவென்று தெரியவில்லை. திரும்பாமலேயே, அவளிடம் சொல்கிறேன், ‘செல்லம், ஒரு ஃபோட்டோ எடேன்!’

– பரமன் பச்சைமுத்து
சென்னை
05.11.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *