அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

இரவு உணவிற்குப்பின் மீதி கால் வயிற்றை நட்சத்திரங்கள் கொண்டு நிரப்பலாமேயென்று வானம் பார்க்க வாசலுக்கு வெளியே வந்தேன். அடுக்ககத்தின் பார்க்கிங் பகுதியில் காரில் முதுகை சாய்த்துகொண்டு நட்சத்திரம் தேடியபோது, விழுந்த விளக்கொளியில் முதலில் தெரிந்தது மரக்கிளையில் அடங்கி ஒடுங்கி அமைதியாய் இருந்த இருட்டைவிட கருப்பான சில காக்கைகள்.

இரவைப் பகலாக்கும் தொழில்நுட்பங்கள், ஒளியை உமிழும் விளக்குகள், இரவின் அமைதியைக் குலைக்கும் பேரிரைச்சல்கள் என்று எல்லாமே மாறிவிட்ட போதிலும், இரவென்றால் ஒடுங்கித் துயில்கொண்டு பகலென்றால் உயிர்த்து செயலாற்றும் உயிரியக்க வழியிலேயே இன்னும் இருக்கின்றன பறவைகள்.

தரையிலும் வசிக்காமல் மிக உயரத்திற்கும் செல்லாமல், வானளாவிய கட்டிடங்கள் வந்தாலும் அதன் மீது வசிக்காமல், ஓரு குறிப்பிட்ட உயர அலைவரிசையிலேயே தங்கள் இயற்கைப்படியே வாழ்கின்றன இந்தக் காக்கைகள். பசிக்காத போது உண்பதில்லை, தொட்டுக் கொள்ள பதார்த்தங்களைத் தேடி விழுங்கி செரிமான மண்டலத்தை அழித்துக் கொள்வகொள்வதில்லை இவை.

வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வை அழித்துக் கொள்ளுவதில்லை இவை. இயல்பை மாற்றாமல் இயற்கையோடு இயைந்து இன்புற்றிருக்கின்றன பறவைகள்.

சிவப்பு, மஞ்சள், வெள்ளை என்று நிறங்கள் மாற்றி கண் சிமிட்டும் தென்மேற்கு திசை நட்சத்திரம் பார்க்க வந்தவன், காக்கையில் குத்தி நிற்கிறேன். வாய் முணுமுணுக்கிறது – ‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்!’

– பரமன் பச்சைமுத்து
சென்னை
08.11.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *