‘மேதகு மனைவி’ : த வைஃப் : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

images-9.jpeg

அதிகாலை அரைத்தூக்கத்தில் இருக்கும் மூத்த தம்பதிகளை தொலைபேசி மணியின் சிணுங்கல் எழுப்புகிறது. படுத்தவாறே தூக்கக் கலக்கத்தில் ரிசீவரை எடுத்து ‘ஹலோ!’ என்று சொன்ன மனிதன், அரை வினாடியில் அதிர்ந்து எழும்பி உட்காருகிறான். ‘திரு ஜோசப் கேஸில்மேன், நான் நோபல் பரிசுக் கமிட்டியிலிருந்து பேசுகிறேன். உங்களது எழுத்திற்காக, இந்த ஆண்டின் நோபல் பரிசுக்கு நீங்கள் தேர்வாயிருக்கிறீர்கள்.’ என்கிறார் அடுத்த முனையில் இருப்பவர்.

எப்படி இருக்கும் அந்த மூத்த எழுத்தாளனுக்கு! மகிழ்ச்சியில் பெருமையில் திளைக்கிறார் அவர். மகன், கருவுற்றிருக்கும் மகள், நண்பர்கள் என எல்லோரையும் அழைத்து விருந்தளித்துக் கொண்டாடிவிட்டு ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோம்ஸ் நோக்கிப் புறப்படுகிறார்கள்.
நோபல் பரிசு வாங்கக் குதூகலமாய் குடும்பமாய் அவர்கள் பயணிக்கும் அதே பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இன்னொருவரும் பயணிக்கிறார். எழுத்தாளர் ஜோவிடம் ஏதோ பேச முயன்று விரட்டியடிக்கப்படுகிறார் அவர்.

நோபல் பரிசுக் கமிட்டியின் சிறப்பான வரவேற்பு, ஏற்பாடுகள், விருது வாங்கும் முறைக்கான ஒத்திகை என மும்முரமாய் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில் கருத்து வேறுபாடு வெடித்து மகன் தனியே நடக்கிறான். பொறாமை கொண்ட சக போட்டியாளர் எழுத்தாளரின் மனைவியிடம் நடு சபையில், ‘நான் என் மனைவியை இப்படி ஆக்கியிருக்கிறேன், பிள்ளைகளை இப்படி ஆக்கியிருக்கிறேனாக்கும்!’ என்று பீற்றி வெறுப்பேற்றுகிறார்.

உச்ச கட்ட நிகழ்வான அந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழக்கும் விழா தொடங்குகிறது. பெரும் சான்றோர்கள் நிறைந்த அந்த அவையில் ஜோசப் கேஸில்மேன் பெயர் அழைக்கப்பட்டு பெரும் கரவொலிக்கிடையே மன்னர் அவர்களால் நோபல் விருது அளிக்கப்படுகிறது. கையில் பெரும் பரிசோடு உணர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஜோ, ‘இந்த இடத்தில் நான் நிற்பதற்குக் காரணம் என் மனைவி. அவள் இல்லையென்றால் நானிங்கே இல்லை. உண்மையில் இந்தப் பரிசிற்கு உரியவர் உண்மையில் என் மனைவி!’ என்று மனைவியை நோக்கிப் பேசுகிறார். மொத்த அவையும் அவரது மனைவியை நோக்கும் அந்தத் தருணத்தில் அவர் அவையை விட்டு எழுந்து ‘சீ..தூ !’ என்று வெளியேறுகிறார்.
பின் தொடர்ந்து போன கணவனிடம் ‘இதற்கு மேல் முடியாது, உன்னோடு இனி நான் வாழ முடியாது! எல்லாம் முடிந்தது’ என்கிறார்.

ஜோன் கேஸில்மேன் தனது கணவரை விட்டு விலகுவது ஏன்? என்ன நடந்தது திடீரென்று? என்பனவற்றை வெள்ளித்திரையில் காணலாம்.

கட்டிலில் படுத்திருந்த கணவனைக் காணாது தேடி, ‘நடுராத்திரியில இனிப்பை அள்ளிக் கொட்டிக்காதீங்க, அப்புறம் தூக்கம் போயிடும், சொல்லிட்டேன்!’ என்ற முதல் காட்சியில் தொடங்கி, கணவனின் துரோகத்திற்கு வெகுண்டெழும் காட்சி, நடுப்பகலில் தெரியாத ஊரில் எவரோடோ உட்கார்ந்து தண்ணியடித்து புகைத்தும் விட்டு எழுந்து கண்ணியமாய் மிரட்டும் காட்சி, மகனும் கணவனும் அடித்துக் கொள்வதைப் பார்த்து குமைந்து விலக்கும் காட்சி, மாரடைப்பு வந்து விழும் கணவனை அனைத்து ஆதரவாய் பேசும் காட்சி, அதே பிரிட்டிஷ் ஏர்வேய்ஸில் திரும்பி வரும் போது இறும்புப் பெண்மணியாக அழுத்தம் காட்டும் கடைசிக் காட்சி வரை பின்னிப் பெடலெடுத்து நிற்கிறார் நடிகை க்ளென் க்ளோஸ்.

‘அப்படியானால், நோபல் கமிட்டிக்கு இதுகூடவா தெரியாது? அப்படியேவா பரிசளிப்பார்கள்!?’ போன்ற கேள்விகள் எழுப்பும் திரைக்கதை பலவீனம்.
க்ளென் க்ளோஸ் படம் முழுக்க நிறைந்து பலவீனங்களை தெரியாமல் செய்து விடுகிறார்.

அடுத்தவர் படைப்புகளைத் திருடி தனதென்று சொல்லிக்கொள்ளும் திருடர்கள் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள், ஒரு பெண் தனது சுய விருப்பு வெறுப்பு கொண்ட லட்சியம் தன்மானம் என எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்கிறாள் தனது ஆணிற்காக. பெண்மையின் இந்த பெரும்பான்மை குணத்தைப் பயன்படுத்தி இன்னமும் சூறையாடல்கள் தொடரத்தானே செய்கின்றன எல்லா தேசங்களிலும்… என்ற எண்ணங்கள் எழும்பி நிற்கின்றன, படம் முடிந்த பின்னும்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘த வைஃப்’ – அயலூர் வைஃப், ஆனால் அதே லைஃப். பார்க்கலாம்.

: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *