‘பேரன்பு’ : திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

peranbu_15265294990

peranbu_15265294990

பெற்ற தாயால், உற்றாரால் உலகத்தாரால் வெறுக்கப்படும் குறைபாடுகள் உள்ள யாரோடும் ஒத்துப்போக முடியா மகளை வைத்துக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் ஒரு தந்தையின் கதை

படம் முழுக்க வாயைக் கோணிக்கொண்டு கைகளை திருகிக்கொண்டு நடிப்பது எளிதல்ல, பின்னிப் பெடலெடுத்திருக்கிறாள் ‘பாப்பா’வாக வரும் அந்தப் பெண்.

‘மம்மூட்டிய எதுக்கு போட்டீங்க?’ என்று இயக்குநர் ராமை கேட்டவர்கள், படத்தைப் பார்த்து விட்டு வாயடைத்து நிற்பார்கள். படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார். அதிலும் தனது மகளை ஏதும் செய்ய முடியவில்லை என்று நிற்கும் போது இயலாமையில் பீறிட்டு வரும் அழுகைக்கு முன்பு உணர்ச்சியில் துடிக்கும் அவரது மோவாய்…. அடேயப்பா…! என்ன ஒரு நடிகர்!

மிக நுண்ணிய உணர்சிகளை மிக நுட்பமாக வெளிபடுத்துகிறது படம்.

கருத்துக்கு நல்ல வசனங்கள், கண்ணுக்கு நல்ல ஒளிப்பதிவு, நடிப்புக்கு மம்மூட்டி, பாப்பா என்று சிறந்தவற்றை ஒன்றாய் சேர்த்து இழைத்துத் தந்திருக்கிறார் ராம்.

அஞ்சலியும், அஞ்சலி அமீரும் அவரவர் பங்கை சிறப்பாகத் தந்திருக்கிறார்கள்.

பதின்ம வயது மகளின் உணர்வின் பசியைத் தீர்க்க விழையும் தந்தையின் உள்ளம் சரியாகப் புரிந்து கொள்ளப்படுமா என்று கேட்பவர்களுக்கு, படத்தின் பெயரையே (‘பேரன்பு’) பதிலாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அந்த இடத்தில் அந்த சேவை தரும் நிறுவனத்தின் மேலாளர் நடந்து கொள்ளும் விதம் கொஞ்சம் சினிமாத்தனமாக இருக்கிறது.

‘சார்.. நாங்க ஏன் அதை பண்ணோம்னாவது கேளுங்களேன் சார்!’ என்று கெஞ்சும் அஞ்சலி, அதை மிக அழகாக ஒதுக்கிவிட்டு ஒரு சஞ்சலமும் இல்லாமல் நகரும் மம்மூட்டி என்று வரும் அந்தக் காட்சி சிறப்பானது.

கதை சொல்லிக்கொண்டே போவது போல் நகர்வதால் சில இடங்களில் மெதுவாக போகிறது படம்.

அழகாகத் தெரிபவர் அருவருப்பாக நடப்பதும், அருவருப்பாக ஒதுக்கப்படும் ஒரு திருநங்கை அழகான மனம் கொண்டிருப்பதும் திடுக். நாம் உலகத்தைப் பற்றி மனிதர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துகளும், உண்மையான உலகமும் உண்மையில் வேறு வேறாக இருக்கலாம்தானே என்பதை தந்தை பாத்திரத்தின் கண்களின் வழியே படம் முழுக்க சொல்லிக் கொண்டே போகிறது படம்.

இந்த விமர்சனம் வெளிவரும் போது இந்தப் படம் தியேட்டரில் இருக்குமா என்பது கேள்விக்குறியே என்றாலும் நல்ல படங்களை அடையாளம் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் இதை எழுதுகிறோம்.

வி- டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘பேரன்பு’ – சிறந்த படைப்பு – இது போன்ற படங்கள் வெற்றி பெற வேண்டும் – நிச்சயம் பாருங்கள்.

: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

 

www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *