பத்துமலை முருகன் கோவில்

நாகரீகம் வளராத இயற்கையோடு மனிதர்கள் இயைந்து வாழ்ந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு காட்டாற்றின் கரையில் இருந்த ஒரு பெரு மலையின் பெருங்குகையில் தோமுவான் என்றழைக்கப்பட்ட பழங்குடியினர் வாழ்ந்தனர். காலப்போக்கில் அம்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறிகளைப் பயிரிட்ட சீனர்கள், அம்மலையின் பெருங்குகைகளில் பெரும்படிமமாகக் கிடந்த வௌவால் கழிவுகளை (தமிழகத்தில் ‘புழுக்கைகள்’ என்றும், மேசியத் தமிழர்களால் ‘சாணம்’ என்றும் சொல்லப்படும் சங்கதி) தோண்டியெடுத்து உரமாக பயன்படுத்திட செடிகள் செழித்து மகசூல் பெருகிடக் கண்டனர்.

‘Batu’ என்று மலாயில் வழங்கப்பட்ட காட்டாறான பத்து ஆற்றின் கரையிலிருந்த இந்த சுண்ணாம்புக் கற்களால் ஆன மலை, பத்து மலை என்று அழைக்கப்படலானது. 1891ல் மலேசியத் தமிழரான தம்புசாமிப் பிள்ளை இந்த உயர்ந்த மலையின் ஒற்றையடிப் பாதை வழியே ஏறி பெருங்குகையைக் கண்டதும் வியப்பிலாழ்ந்தார். ‘என்னதுக்குப் பரமன், அவருக்கு வியப்பு!’ என்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம்.

குகையின் நுழைவாயில் ஒரு வேல் வடிவத்தில் இருந்தது கண்டு வியந்து போன அவர் அவருக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பில் ஒரு முடிவெடுத்தார். அங்கே ஒரு முருகன் கோவிலை அமைத்தார். காலப்போக்கில் வெளிநாட்டு உள்நாட்டுப் பயணிகளின் முக்கிய தலமாக மாறிப் போன இந்த இடத்தில், அறுபடை வீட்டு சிலைகள், சிவன் கோவில், தல விருட்சம் அரச மரம் என முழுக் கோவிலாக மாற்றமடைந்து, அருகிலேயே வைணவர்களைக் கருத்தில் கொண்டு ராமயாண சித்திரங்கள் மண்டபமும் சேர்க்கப்பட்டது.

இன்று அஜீத் படத்தின் ஓபனிங் சாங்கில் வரும் பெயர்பெற்ற இந்த தலம் ‘பத்துமலை முருகன் கோவில்’ என்றழைக்கப்பட்டாலும், உள்ளே கல்வெட்டில் நிர்வாகத்தில் ‘பத்துமலை வேலாயுதர் கோவில்’ என்றே இருக்கிறது. குகைவாயில் தோற்றத்தில் வேலைக் கண்ட அந்த தம்புசாமிப் பிள்ளை வைத்த பெயர் போல.

கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டரில் 20 நிமிடப் பயண தூரத்தில் இருக்கும் இந்த இடம் உலகத்தாரால் பார்வையிடப்படப்படும் ஒரு முக்கிய இடமாகிப் போனது. உருவ வழிபாட்டை தடை செய்த இசுலாமை தேசிய மதமாகக் கொண்ட மலேசியாவில் சிலைகள் கூடாதென்றாலும், வழிபாட்டுத் தலமென்பதால் அனுமதிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் முருகன் சிலை இறங்கிய உடன் பெரிய உருவமாக நிற்கிறது. பெரு மலையின் அருகில் சிறியது போல் முதலில் தெரிந்தாலும், காரை விட்டிறங்கி அருகே போகப் போக பேருருவமாக உயர்ந்து நிற்பது அசத்துகிறது. அதனடியில் சிறு மனிதர்களாய் நாம்.
140 அடி உயரம் கொண்ட இந்தச் சிலைதான் உலகிலேயே உயர்ந்த முருகன் சிலை இன்று வரையில்! ( ‘ஏன் பரமன் அந்த ‘இன்று வரையில்’? இதைவிட உயரமாக 146 அடி உயரத்தில் தபிழகத்தின் வாழப்பாடியில் வைக்க இருக்கிறார்கள் இன்னும் சில மாதங்களில்)

‘ஐயா, ச்சீனர்களும் மலாய்காரங்களும் சப்பாத்தோட நடப்பாங்க. இது நம்ம வணங்கற கடவுள் இல்லையா, சப்பாத்த இங்கன காடிலயே விட்டுட்டுப் போயிடுங்க’ என்று என் வாகன ஓட்டுனர் பயண வழிகாட்டி சொல்லிட, காரிலேயே ஷூவைக் கழட்டி விட்டு நடந்தேன். ( ‘சப்பாத்து’ – ஷூ, ‘காடி’ – வண்டி)

அங்கங்கே மூச்சிறைக்க நிற்பவர்களைக் காணும் போதுதான், செங்குத்தான 272 படிகளை ஒரே மூச்சில் ஏறி வருகிறோம், தினசரி உடற்பயிற்சியால் மிக ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து மகிழ முடிகிறது.

ஒரு பெரிய மலையை அப்படியே உட்புறமாகக் குடைந்து எடுத்தால் அல்லது ஒரு தேங்காயை உறித்து உடைக்காமல் செங்குத்தாக பூமியில் செருகிவிட்டு நடுவில் கொஞ்சம் துளையிட்டு விட்டால், அதன் மேல் ஓட்டின் வெளிப்புறத்தில் பச்சைபசேலென்று பூஞ்சைகளும் காளான்களும் வளர்ந்து விட்டால் எப்படியிருக்கும். அப்படியிருக்கிறது குகையின் முதல் பார்வை.

உள்ளே நுழைந்ததும் சரேலென அடிக்கிறது குகையின் குளுமை. முதல் தோற்றத்தில் ‘அவதார்’ திரைப்படத்தின் பண்டோரா கிரகத்தின் தொங்கும் மலைகளை நினைவூட்டுகிறது உயர்ந்து நிற்கும் குகையின் உச்சியை நோக்கிய காட்சி. எனக்கு அடுத்து நின்று தனது செல்லிடப்பேசியில் படமெடுத்துக் கொண்டிருந்த ஓர் அழகிய இளம்பெண்ணிடம், ‘இட் ஈஸ் ஸோ ப்யூட்டிஸபுல், ரிமைண்ட்ஸ் ஆஃப் அவதார் ஃபில்ம் சீன்ஸ், ஈஸ்ன்ட் இட்!’ என்றேன். வசீகரமான அழகாக இருந்த அவர், இன்னும் முகமலர்ந்து ‘ஓ.. யா! எக்ஸாட்லி! தே(ங்)க்ஸ் ஃபார் தட் வ்யூ!’ என்றார். இருவரும் புன்னகத்துக் கொண்டு நகர்ந்தோம்.

பழனியில் சண்முகா நதியிலிருந்து வரும் போது முதலில் இடும்பன் சன்னதி இருப்பதைப் போலவே இங்கும் முதலில் வருகிறது இடும்பன் சன்னதி. கொஞ்சம் நகர்ந்தால் உற்சவர் மூலவர் என இருவரையும் பளிச்சென்று காட்டும் 50″எல்ஈடித் திரை.
‘உத்தராஷ்ட நட்சத்தர கார்த்தி நாமஸ்ய, சகக் குடும்ப, வியாபாரத்திலே பதே பதே…’ என்று சத்தமாக யாருக்கே அர்ச்சனை செய்யும் குருக்களின் குரல் வர நெருங்கினால், உற்சவர் மூலவர் என அருள் பாலிக்கும் பத்துமலை வேலாயுதர் சன்னதி. மந்திரத்தை இயந்திரம் போல் படுவேகத்தில் உச்சகதியில் சொல்லாமல் கொஞ்சம் தமிழும் கலந்து ராகமும் கலந்து, ‘வெற்றிவே….லா…. போற்றி…. கந்தா போற்றி!’ என்று கவர்கிறார் குருக்கள். தேங்காய் அர்ச்சனையை 3 ரிங்கட்டுக்கும், படி அர்ச்சனையை 2 ரிங்கட்டும் செய்யும் அவர்கள் வருவோரின் நெற்றியில் விபூதியை அவர்களே இட்டுவிடுகிறார்கள்.

சீனர்களையும், மலாய் மக்களையும், ஐரோப்பியர்களையெம் நெற்றியில் பொட்டு மாதிரி விபூதிக் கீற்றோடு பார்க்க வித்தியாசமாக, அழகாக இருக்கிறது. இலங்கையின் புத்த தலதாக்களிலும் விகாரையிலும் தோள் தெரியும் முழங்கால் தெரியும் குட்டை உடைகளணிந்து செல்வது தடை செய்நப்பட்டுள்ளது போலவே, பத்து மலை முருகனை தரிசிக்க முட்டி தெரியும் முழங்கால் தெரியும் உடைகள் அனுமதிக்கப்படுவதில்லை. மலையடிவாரத்தில் இடுப்பில் சுற்றி முடியிட்டுக் கொள்ளும்படியும், சுற்றி அழுத்தி ஒடிக்கொள்ளும்படியான ‘ஒட்டிக்கோ கட்டிக்கோ’ அங்கிகளும் 3 ரிங்கிட்களுக்கு வாடகைக்குக் கிடைக்கிறது. வாங்கிச் சுற்றிக்கொண்டு சுய படமெடுத்துத் திளைக்கிறார்கள் மஞ்சளழகிகள்.

‘முருகா… செந்தில் வேலா!’ என்று தமிழகர்களும், ‘சுப்ரமண்யா!’ என்று வடஇந்தியர்களும் பக்தியில் முணுமுணுத்து தொழுவதைக் காண்பது அழகாக தெரிகிறது. கோயிலின் பிரகாரம் வரையிலும் மற்ற இனத்தினர் ஷூவோடு வந்து திரிவதையும், இன்னும் சில கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் தேன் ஹூ புத்த ஆலயத்திற்குள் மற்ற மத்த்தினரும் கூட காலணியைக் கழற்றிவிட்டுவிட்டு பக்தியோடு நுழைவதையும் நினைக்கையில் நெருடுகிறது.

குகையை விட்டு வெளியில் வந்து படியிலறங்கும் போது மாறும் வெப்பநிலை, குகையின் குளுமையை உணர்த்துகிறது.

இறங்கிக் கீழே வந்தால் ‘தே தாரே’, பெரிய மலேசிய இளநீர் என்று விற்கும் உணவகங்கள் இருக்கின்றன. வாட்ஸ்ஆப் வீடியோ காலில் இந்தியாவில் கிராமத்திலிருக்கும் அம்மா அப்பாவை, நகரத்திலிருக்கும் குடும்பத்தினரை அழைத்து பத்து மலை முருகனின் பெருஞ்சிலையை சுற்றியுள்ள இடங்களைக் காட்டி மகிழலாம்.

காரிலேறி கடந்த போதும், குகையின் குளுமை உள்ளத்தில் இருக்கவே செய்கிறது.

செலாமத் டத்தாங் மலேசியா!

– பரமன் பச்சைமுத்து
பத்து மலைக் குகை, மலேசியா,
22.06.2019

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *