ஒரு பெருநாளில் தொடங்கப்பெற்றது…

‘அப்பா… உனக்கு ஹாலிடே இல்லையா, எங்களுக்குல்லாம் இன்னிக்கு ஹாலிடே!’

இவை, விடுமுறை என்பதைக் குதூகலாகமாக கொண்டாடும் ஒரு மகள் தனது தந்தையிடம் வெளிப்படுத்திய வாக்கியங்களாகத் தெரியலாம் உங்களுக்கு. இவை, எனக்கு என் வாழ்வின் புதிய உலகத்திற்கான பெருங்கதவைத் திறந்துவிட்ட திறவுகோல்.

பெங்களூரு பிடிஎம் லே அவுட்டில் இரண்டாம் தளத்திலிருந்த வீட்டின் கூடத்தில் பாய் விரித்து யோகப் பயிற்சிகளை செய்து கொண்டிருந்த என்னை நோக்கி, கிண்டர் கார்டன் படித்துக்கொண்டிருந்த என் இளைய மகள் தொடுத்த வாக்கியங்கள் அவை.

‘ஹாலிடேவா… ஏன் ஹாலிடே, என்ன இன்னைக்கு? என்ன நாள்?’ என்று எண்ணியவாறே சுவற்றில் மாட்டியிருந்த தினசரி காலண்டரை நோக்கி ஓடினேன். ‘பக்ரீத் பண்டிகை’ என்று இருந்தது. கீழ் வீட்டில் குடியிருந்த முகம்மது ஷேக்கிற்கும், அலுவலகத்தில் உடன் பணி புரிந்த முகம்மது சையத்திற்கும் எப்படி வாழ்த்து சொல்வது, இது மகிழ்ச்சியான நாளா, வேறெதும் உணர்வு தரும் நாளா என்ற குழப்பத்தோடு அப்போது வைத்திருந்த பச்சை வண்ண ஐந்து கியர் மாருதி 800ஐ ஓட்டிக் கொண்டு கோரமங்களாவில் இருந்த அலுவலகம. போனேன்.

‘மைக்ராலேண்ட்’டில் ஏனைய இஞ்சினியர்கள் பொறாமைப்படும் ‘டெக்னாலஜி அண்ட் ப்ராக்டிஸ்ஸ்’ என்றழைக்கப்பட்ட ‘க்ரீமி டிபார்மெண்ட்’டின் முக்கிய இஞ்சினியர் நான் (ராமு பெருமாளும் முகுந்தனும் இதே பிரிவில்தான் இருந்தனர்). அலுவகம் வந்து இணையத்தில் ‘பக்ரீத் ‘ பற்றித் தேடிப் படித்த போது, பல மின்னல்கள் என்னுள்ளே.

உணர்வுகள் பெருகிட, ஓர் ஆழம் உள்ளே வர, கைகள் துடிக்க… ‘மைக்ரோசாஃப்ட் வேர்ட்’டைத் திறந்து எழுதத் தொடங்குகிறேன், ஓர் எழுத்தாளனாக அக்கணத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறேன் என்பதையறியாமலேயே. பத்திரிக்கை பிரசுரத்திற்கான, என் முதல் எழுத்து அது என்று அறியாமலேயே.

‘ஈத் முபாரக்’ என்று தலைப்பிட்டு எழுதிய அதை எனது எல்லா யாஹூ க்ரூப்புகளுக்கும், ஏவிசிசி கல்லூரி நண்பர்களுக்கும், அலுவக நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறேன். அல்மா மாட்டரின் தீவிர மாணவனாக இருந்த நான் விவிபுரத்தில் ஜெயின் வித்தியாலயாவில் நடந்த அந்த வார ஞாயிறு காலை சந்திப்பில் அனைவர் முன்னிலையும் எழுந்து அதைப் பகிர்கிறேன். பூஜா ஓஸ்வாலும், பூஜா நொதானியும், தீபக் ஷிண்டேயும், செந்தாமரையும் என்னைக் கட்டிக்கொண்டு கொண்டாடுகிறார்கள்.
சென்னையிலிருந்து வந்திருந்த நண்பன் செந்தில் கொண்டாடுகிறான்.

எல்லோரும் கொண்டாடும் அதை அப்படியே ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கிறேன். ‘ப்ரோஸன் தாட்ஸ்’ ஆங்கிலப் பத்திரிக்கை 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாத இதழில் எனது முதல் ஆங்கிலப் படைப்பை / எழுத்தை ‘பரமன் பச்சைமுத்து’ என்று பெயரிட்டு பிரசுரித்தது. அந்த ஆங்கில இதழில் ஒவ்வொரு மாதமும் மூன்று பகுதிகள் தொடர்ந்து எழுதியதும், பத்து ஆண்டுகள் கழித்து அதே நிறுவனத்தின் தமிழ்ப்பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணிபுரிந்தததும், பின்னே வரிசையாய் நூல்கள், நாளிதழ்களில் தொடர்கள் என்று எழுதியதெல்லாம் இறைவன் கருணையால் நடந்தவை.

முதல் முதலில் எழுத்தை வெளிக் கொணற வைத்தது இதே தியாகப் பெருநாளில் வந்து விழுந்த அந்த, ‘அப்பா… உனக்கு ஹாலிடே இல்லையா, எங்களுக்குல்லாம் இன்னிக்கு ஹாலிடே!’

2003ன் பெருநாளில் நடந்த அவை மனதில் ஓட 2019ன் பெருநாளான இன்று திருவண்ணாமலை நோக்கி ‘வளர்ச்சிப்பாதை’ மலர்ச்சி வகுப்பெடுக்க பயணிக்கிறேன். மகளை செல்லிடப் பேசியில் அழைத்து, ‘ஐ ஆம் க்ரேட் ஃபுல் ட்டூ யூ!’ என்றேன். நான் எழுத்தாளன் ஆன கதையை முழுதாய் விவரித்து சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்கும் முன் அவளிடம் சொன்னதையே உங்களிடமும் சொல்கிறேன்….

“ஈத் முபாரக்!”

– பரமன் பச்சைமுத்து
கீழ்ப்பெண்ணாத்தூர்,
(திருவண்ணாமலை நோக்கி)
12.08.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *