வழுக்கி விழும் வஸ்தாதுகள்

பெங்களூரு வேலூர் நெடுஞ்சாலையில் பயணித்து வந்து தான் ஓட்டி வந்த கண்டெயினர் லாரியை ஆம்பூரின் அருகில் உணவகத்தின் வெளியே நிறுத்தி விட்டு சாப்பிடப் போனாராம் ஓட்டுநர். சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தால் கண்டெயினர் லாரியைக் காணோமாம்.

பதறிய ஓட்டுநர் தனது உரிமையாளரை உடனே அழைத்து தகவல் தர, சிதறாத உரிமையாளர் ஜிபிஎஸ்ஸை வைத்து லாரி எங்கே இருக்கிதென்று தேடி, கிருஷ்ணகிரி அருகில் சென்று கொண்டிருப்பதை அறிந்து அங்கிருந்த காவல் நிலையத்திற்கு தகவல் சொன்னார். நெடுஞ்சாலைக்கு விரைந்த காவலர்கள் தமிழ்ப்படப் பாணியில் கண்டெயினரை முந்தி மறித்து அவர்களை மடக்கினர்.

யாசின் என்பவனின் தலைமையில் இயங்கும் நான்கு பேர் கொண்ட இந்தக் கொள்ளைக்கூட்டத்தினர் அந்த உணவகத்தின் நிறுத்தத்தில் தொடர்ந்து வாகனங்களைத் திருடி அருகிலுள்ள தங்களது இடத்திற்குக் கொண்டு சென்று பாகங்களை கழட்டி உதிரியாக விற்றுவிடுவார்களாம். அவர்களது இடத்திற்கே போய் இரண்டு கார், ஆட்டோ என காணாமல் போன வாகனங்களை கைப்பற்றியிருக்கிறது காவல்துறை.

சற்று முன் யாசின் மற்றும் அவனது கூட்டாளிகள் நால்வரின் படங்களையும் வெளியிட்டன செய்தி ஊடகங்கள். எல்லோர் கைகளிலும் மாவுக்கட்டு, ஒருவருக்கு கூடுதலாக காலிலும் கட்டு என்ற நிலையில் இருந்தார்கள்.
‘காவல்துறையின் விசாரணையின் போது கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டார்களாம்.’

மனித உரிமை ஆர்வலர்கள் விவாதிக்கிறார்கள். மாவுக்கட்டோடு கிடக்கும் அவர்கள் கொஞ்ச நாட்களுக்கு திருட மாட்டார்கள். மக்கள் விஷமப் புன்னகை செய்து மகிழ்கிறார்கள். என் நண்பர் கேட்டீ மகிழ்ந்து சத்தமாக சிரித்துவிட்டு சொல்கிறார் – ‘தூய்மை இந்தியா ஸ்வாச் பாரத்துன்னு பீலா விடறார் மோடி. பாத்ரூம்லாம் இன்னும் வழுக்கி விழற நிலையில்தான் இருக்கு!’

– பரமன் பச்சைமுத்து
23.08.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *