தினமணிக்கு மலர்ச்சி வணக்கம்

கடலூரை சொந்த ஊராகக் கொண்ட அவர் தினமணியில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தொடரை எழுதினார், பின்னாளில் நூலாக வந்து அவருக்கும் சாகித்ய அகாதெமி விருதினை தமிழுக்கும் வாங்கித் தந்தது. அந்த புதிய எழுத்தாளர் பின்னாளில் ஜெயகாந்தன் என்ற ஆளுமையாக அறியப்பட்டார்.

லால்குடிக்காரரான ராமாமிர்தம் தினமணியில் ‘சிந்தா நதி’ என்ற தொடர் எழுதினார். பின்னாளில் அது சாகித்ய அகாதெமி பெற்றது. பின்னாளில் அவர் தமிழ் உலகம் கொண்டாடும் ‘லாசரா’வாக அறியப்பட்டார்.

புதுச்சேரியின் புதல்வர் தினமணியில் ‘மானுடம் வெல்லும்’ எழுதினார். அதன் பிறகு ‘வானம் வசப்படும்’ எழுதினார். அது சாகித்ய அகாதெமி பெற்றுத்தந்தது. அந்த ஆளுமை பிரபஞ்சன்.

முத்தமிழறிஞர் கலைஞர் தனது வரலாற்றை தினமணியில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் எழுதினார்.

திராவிட இயக்கக் கொள்கையிலிருந்து வெளியேறி முற்றிலும் மாறுபட்ட ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தொடரை தினமணியில் எழுதினார் பெரும் ஆளுமை கவியரசு கண்ணதாசன்.

தமிழ் உலகம் அவரை அதிகம் அறிந்திராத காலத்தில் தினமணியில் விமானம் சார்ந்த தொழில் நுட்பங்கள் பற்றி அசந்து போகுமளவிற்கு எழுதினார் ஓர் ஆளுமை. பின்னாளில் உலகம் அவரைக் கையிலேந்திக் கொண்டது. அவர் சுஜாதா.

கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு ஒரு தளத்தை ஏற்படுத்தி ‘இலக்கிய முன்னோடிகள்’ கட்டுரைத் தொடரை எழுத வைத்தது தினமணி. பின்பு அது ‘தமிழாற்றுப்படை’ என்று நூல் வடிவம் பெற்றது.

….

‘தினமணி நல்ல பேப்பர்’ என்பதை என் அப்பா சொல்லியே கேட்டு வளர்ந்ததாலும், எங்களூரில் தினமணி கிடைக்காத்தாலும் அதன் மீது ஓர் அதிக ஈர்ப்பு கொண்டே வளர்ந்தேன் நான். ‘தினமணி செய்தி வெளியிட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டு கலைஞர் எழுதும் கட்டுரைகளும், முற்றிலும் வேறுபட்ட கருத்து கொண்ட சோ ராமசாமியும், வாழப்பாடி ராமமூர்த்தியும், குமரி அனந்தனும், வைகோவும் தினமணியை குறிப்பிடுவதைப் பார்த்தும் அதை வாங்கவே தொடங்கினேன்.

வளர்ந்த பிறகு ஏ என் சிவராமனின் தலையங்கங்கள் என் பார்வையை மாற்றின. வெ. ராமசுப்ரமணியம் போன்றோரின் சொற்கள் என் தமிழையே மாற்றிப் போட்டன. ‘கட்செவியஞ்சல்’ என்ற சொல்லை தினமணியிடமிருந்தே கடன் வாங்கினேன் நான்.

எந்த ஊர் போனாலும் மற்ற தாள்களோடு தினமணியையும் தேடும் என்னைப் பார்த்தே தினமணிக்கு மாறிய குத்தாலிங்கத்தைப் போல பலருண்டு என் வட்டத்தில். மலேசியா போனாலும் சிங்கப்பூர் போனாலும் இலங்கையில் இருந்தாலும் தினமணி இ-பேப்பரைப் பார்க்கத் தவறுவதில்லை நான்.

தினமணி 85ஆம் ஆண்டை நிறைவு செய்து 86ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறதாம். இதில் 25 ஆண்டுகளாக நான் தினமணியின் வாசகன். பிராமணர்கள் படிக்கும் பத்திரிக்கை என்ற பெருவாரியான கருத்துக்குப் பதில் – நான் பிராமணன் அல்ல.

விழுப்புரம், தர்மபுரி என்று பி- டவுன்களில் பதிப்பு கொண்டு வந்து தரமான சேவையைத் தரும் தினமணிக்கு…

மலர்ச்சி வணக்கம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
19.09.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *