தானாய் நடைபெறும் சுவாசம்

உடலை உற்றுக் கவனிப்பதில் ஒன்று புரிகிறது. நம்மால் உணரமுடியா அதிசயங்கள் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தேறுகின்றன.

நாசியின் வழியே உள் நுழைந்து உடலியக்கத்திற்கு உறுதுணையாய் நிற்கும் காற்று ஓர் அதிசயம். அதைக் கொண்டு உடல் செயல்படும் விதம் ஓர் அதிசயம். மூச்சுப் பயிற்சியில் காற்றை இழுத்தல் – நிரப்பி நிறுத்தல் – வெளியேற்றுதல் தாண்டி – வெற்றிடத்தை நிறுத்தல் என்ற நிலையில் உடல் தவிப்பது புரிகிறது சில நாட்களாய்.

மூச்சுக் காற்றை முழுவதும் வெளியேற்றி வெறும் வயிற்றை நிறுத்தி வைக்கும் கும்பகத்தில் சில நொடிகள்… சில நொடிகள் கூட்டினால், ஞான முத்திரையில் மடக்கி வைக்கப்பட்ட இடது கை விரல்களில் உள்ளூர ஒரு உதறல் தவிப்பு துடிப்பு வரும்போது ( ஒரு விதமான உள் நோக்கிய சிறு இழுப்பு ) மூச்சுக்காற்றின் அருமை புரிகிறது. மூச்சை இழுக்கத் தொடங்கிய உடனே எல்லாம் சரியாவதில் அது இன்னும் உறுதிபடுகிறது.

இறக்கும் தருவாயில் மூச்சுத்திணறலில் மனிதர்கள் கைகளை கால்களை வெட்டி இழுத்துத் தவிப்பது நினைவில் வருகிறது.

அடேயப்பா… மூச்சு… உள்ளிழுக்கும் காற்று எவ்வளவு முக்கியமானது என்பது என்பது மட்டும் புரிகிறது. தானாய் சுவாசம் நடைபெற வைத்து உயிர்சக்தியின் வழியே சீராக உடலை இயக்கும் இயற்கையை நினைக்கையில் பெரும் பெரும. பிரமிப்பு வருகிறது.

மூச்சுப்பயிற்சியை கண்டறிந்து சாமானிய மனிதர்களுக்குத் தந்தவன் எப்பேர்ப்பட்டவனாக இருக்க வேண்டும். கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
10.12. 2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *