ஏவிசிசிபி அலுமினி மீட் – நிறைவுப் பகுதி

wp-15776884945251779575029260195958.jpg

*AVCC Polytechnic 91 Batch Alumni Meet’*

(முந்தைய பதிவுகளின் தொடர்ச்சி )

*நிறைவுப் பகுதி:*

கொஞ்சம் எடை கூடியதைத் தவிர உருவத்தில் வேறு மாற்றம் இல்லாத மீன்சுருட்டி *அமிர்தலிங்கம்*, அளவாக அழகாக பகிர்ந்தார்.

பெரும் கட்டுமான நிறுவனமான ‘மார்க்’கில் உயர்மட்ட நிர்வாகியாக இருக்கும் அமிர்தலிங்கம் பொறியியல் படிக்கும் மகள், ப்ளஸ் டூ படிக்கும் மகன் மனைவியோடு சென்னையின் மேடவாக்கத்தில் வசிக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு லேண்ட் லைனில் வகுப்புத் தோழன் நண்பனை அழைத்ததையும் சில நிமிடங்களில் வந்து நின்ற சந்திப்பையும் நினைவு கூர்ந்து நம்மையும் கூட்டிச் சென்றார் தனது பகிர்வின் வழியே.

( சவேராவின் மதிய உணவு மெனுவில் அந்த ஸ்பெஷல் ஃபிஷ் ஃபைரையை டிக் செய்ததே அமிர்தலிங்கத்தை மனதில் வைத்துதான்!)

(‘நாங்கள்லாம் பிள்ளைமாருங்க. சைவம்தான்!’ என்று சொல்லி மீனைப் பார்த்து அதிர்ந்தனர் ஜகதீஸ்வரி & மீனாட்சி சுந்தரி என்பது கூடுதல் செய்தி)

….

கார் குலத் தலைவர் என்று எங்களால் செல்லமாகச் சொல்லப்படும் *ஸ்ரீதர்* உருவம் கொஞ்சம் மாறியிருந்தாலும் அதே கம்பீரக் குரலைக் கொண்டிருந்தான். குத்தாலம் சரவணனையும் மகாதானத்தெரு மாரியப்பனையும் கூட்டிவர இறுதி நொடி வரை முயற்சித்த, ‘பரமா… நான் நடுவில போயிடுவேன். ஈவினிங் வேற மீட்டிங் இருக்கு!’ என்று சொல்லிக் கொண்டே வந்த ஸ்ரீதர் தொழில் முனைவர் என்பதைத் தாண்டி நகரின் பல தொழில் முறை வட்டங்களில் (சாதீய சமூக அமைப்புகளிலும் ) வலம் வரும் முக்கிய பிரமுகர்.

அசோக்நகரில் தன் சொந்த நிறுவனத்தை நடத்தும் ஸ்ரீதர் ஏவிசி போர்டில் உள்ள அனைவரோடும் தொடர்பிலிருக்கும் முக்கிய புள்ளி. ஸ்ரீதருக்கு தன் மகள் என்றால் உயிர். ஸ்ரீதரின் மகள் மலர்ச்சி மாணவி. (முத்துவின் மகன், ராஜவேலுவின் மகன்கள், சந்திரமௌலியின் மகன் ஆகியோரும் என் ‘மொட்டுகள், அரும்புகள்’ மாணவர்களே என்பது கூடுதல் தகவல்)

ஸ்ரீதர் திருவிழந்தூர் பற்றிப் பகிர்ந்து கொண்டிருந்த போது, காலஞ்சென்ற நம் ஆசிரியர் பிரபாகரின் நினைவும் அவர் வீடும் மனதில் வந்து போயின.
….

சந்திரமௌலியின் அழைப்பை ஏற்று மயிலாடுதுறை செல்வதைத் தள்ளிப் போட்டுவிட்டு சந்திப்பிற்கு வந்து அசத்தினர் அருணும் அருள்நாதனும்.

அருள்நாதனின் அசலான அவ் வயது முகம் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் மறந்து போனது என்பது அவர் பேசும் போது, ‘உங்க பேர சொல்லுங்க, பேர சொல்லுங்க!’ என்று எழுந்த குரல்களிலிருந்து புரிந்தது. தன் குட்டி மகளோடு வந்திருந்த *அருள்நாதன்* ஏவிசிக்குப் பிறகு பிகாம் படித்து விட்டு கணக்கியல் துறைக்குள் குதித்து விட்டார். போரூரில் வசிக்கிறாராம்.

அப்போது ஒல்லியான உருவமும் நிறைந்த கேசமும் கொண்டிருந்த அருணை இப்போது கண்டுபிடிப்பதில் சிரமமே இருக்கவில்லை, மீசை மழிக்கப்பட்டும் எடை கூடியும் இருந்த போதும். ( அருணைப் போலவே ஒரு ரமேஷ் இருப்பான் வகுப்பில்!)

டிப்ளோமாவிற்குப் பிறகு இஞ்சினியரிங் முடித்து விட்டு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் சிஸ்டம் அட்மினாக பணி புரியும் *அருண்* நிறைவான எளிமையான ஒரு வாழ்க்கையை வாழ்வதாகப் பகிர்ந்தார்.

….

நம் ஏவிசி வாட்ஸ்ஆப் க்ரூப்பில் பலரை உசுப்பேற்றி் தெறிக்க விடும் *முத்து*, நேரில் அப்படியே நேர் மாறு. அமைதி… அமைதி… அமைதியாய்! (கைலாசாவிற்கு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருக்கிறார் போல)

அண்ணாநகரில் பல ஆண்டுகள் ராஜவேல் – ராஜ்குமார் – செந்தில் நாதன் ஆகியோரோடு நிறுவனம் நடத்தியது, அங்கிருந்து ஹாங்காங்கிற்கு போனது, திரும்ப சென்னை வந்து திருவான்மியூரில் நிறுவனம் நடத்துவது, மனைவி பெயர் ராணி என சகலத்தையும் நறுக்கென்று ‘புரியும்படி’ முத்து பேசியது கவர்ந்தது.

பதினான்கு பேர் என்பது உறுதியாகி பாலமுருகனோடு பதினைந்து என்றாகி கூடுதலாக இருக்கட்டுமென பெயர்களை இட்டு பதினாறு நூல்களை ‘ஸ்பெஷல் எடிஷன் பிரிண்ட்’ போட்டு கொண்டு வந்தேன், இன்ப அதிர்ச்சியாக அருள்நாதனும் அருணும் வந்து நிற்க, அனைவரும் கையொப்பமிட்ட நூல்களை அனைவருக்கும் தந்து விட்டு, ராஜவேலும் நானும் வெறுங்கையோடு வெளியேறினோம்.

(நிகழ்வின் போதே செல்லிடப்பேசியில் அழைத்திருந்த மாரியப்பனோடும், முகம்மது மர்ஜுக்கோடும் சரியாக பேச முடியவில்லை, அடுத்தடுத்து தொகுத்து வழங்கிக் கொண்டிருந்ததால்)

மதிய உணவில் தொடங்கி மாலை தேநீர் இடைவேளை வரை தொடர்ந்து உயிர்ப்புடன் நடந்தது நிகழ்வு.

பெண்கள் அனைவரும் கிளம்பியவுடன் பலர் பிய்த்துக்கொள்ள நாங்கள் சிலர் பக்கத்து ஹோட்டலான உட்லாண்ட்ஸில் காப்பி குடிக்கப் போனோம். ‘அன் அஃபீஷியல்’ ஆக கதைத்தோம்.

இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் கல்லூரி மூன்றாமாண்டின் முடிவில் நாம் செய்த ஆட்டோக்ராஃப் புக்கின் முதல் பக்க வரிகளான ‘பிரிவதற்காகவே சந்தித்தோம், சந்திப்பதற்காகவே பிரிகிறோம்!’ நினைவுக்கு வந்தன, புறப்படும் வேளையில்.

வாழ்க்கையை பொறுத்தவரை கூடுதல், குறைதல் என்பது இல்லை, ஒவ்வொரு மனிதனும் முக்கியமானவனே. ஒவ்வொரு மனிதனுக்கும் சில பல அனுபவங்களைத் தந்து அவனை உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கிறது அது. வாழ்க்கை தன் அனுபவங்களைக் கொண்டு ஒவ்வொரு மனிதனின் கதையையும் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டேயிருக்கிறது. மனிதனின் உடலிலும் உள்ளத்திலும் உணர்விலும் வாழ்க்கை எழுதும் வரிகள் அவனது கதையாக விரிகிறது ஒவ்வொரு நாளும்.

-பரமன் பச்சைமுத்து
சென்னை
28.12.2019
#CollegeAlumniMeet

ஒரு மதியத்திலிருந்து மாலை தேநீர் ருசிக்கும் வரை பதினெட்டு மனிதர்களின் ‘இன்று வரை நான்’ கதையைப் படிக்கும் வாய்ப்பை வழங்கியது வாழ்க்கை சவேரா ஹோட்டல் சந்திப்பு நிகழ்விற்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும்.

மீதி சரித்திரம் எழுத அவரவர் வழியில் புறப்படுகிறோம், மறுபடியும் கூடி களித்து கதைப்பதற்காகவே.

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
29.12.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *