திருமணம் என்னும் நிக்கா

‘பரமன் சார் உங்கள பள்ளிவாசல்ல பாத்ததில அவ்ளோ சந்தோஷம் எங்களுக்கு!’

‘நீங்க ?’

‘நான் அப்ளைடு சைக்காலஜி டீச்சர். உங்கள் வீடியோக்களை பாத்திருக்கேன்’

புரசை கார்டன் ஆயிஷா இல்லத்து ‘வலிமா நிக்கா’விற்காக அழைப்பின் பேரில் புரசைவாக்கம் பள்ளிவாசல் சென்றிருந்தேன். 

பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் ஊர்ப்பெரியோர்களும் அங்கீகரிக்கும் மத குருமார்களும் மௌலானக்களும் நிரம்பி வழிந்த பள்ளி வாசலில், மண வாழ்க்கை குறித்து அறிவுரைகள் சொல்லப்பட்டன.  எவ்வளவு எம்பிப் குதித்தாலும் குதிக்கால் வலிக்காது என்னுமளவிற்கான மெத்து மெத்தென்ற, பூ வடிவங்கள் கொண்ட கரும்பச்சை நிற சுத்தமான கார்ப்பெட்டில் தரையில் சம்மனமிட்டு பலரும், முழந்தாளிட்டு ( வஜ்ராசனம் ) சிலரும், நாற்காலிகளில் சிலரும் என பெருந்திரளாக கூடியிருந்தது சமூகம்.

‘வலிமா நிக்கா நிகழ்விற்காக அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள வாழ்வியல் பயிற்சியாளர் பரமன் பச்சைமுத்துவை வரவேற்கிறோம்!’ என்று ஒலிபெருக்கியில் மௌலானா சொன்னதும் நெளிய வைத்தது நம்மை.

கொங்கு வேளாள கவுண்டர்கள், சைவ பிள்ளைகள், உடையார், முதலியார், இதர சமூகம் செய்யும் திருமண உறுதி விழாவைப் போலவே தெரிகிறது என்றாலும் நிக்கா வேறு மாதிரி.

இஸ்லாமில் திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். கவனி்க்க – ‘ஒப்பந்தம்’!  ‘மகர்’ கொடுத்து ஒப்பந்தம் செய்யும் நிகழ்விற்கு ‘வலிமா நிக்காஹ்’ என்று பெயராம். ‘மகர்’ என்பது பெண்ணைக் கட்டிக் கொள்ள பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் தரும் பொன் / பொருள். வரதட்சினை போல, ஆனால் கொடுப்பது மாப்பிள்ளை வீட்டார்! ‘அட…!’ என்று தோன்றுகிறதுதானே!

மதத்தின் ஆசான் / குருமார் ஒருவர் இறைவனின் திருமறையொன்றை ஓதுகிறார். எல்லோரும் உன்னித்து குனிந்து இறையச்சத்தோடு கவனிக்கின்றனர்.  அடுத்து சான்றோர் ஒருவர் ஒப்பந்தத்தை மாப்பிள்ளையை உட்கார வைத்து அறிவிக்கிறார்.  ‘இந்த ஊர்…. ஜனாப்…. இவரின் குடும்பம்… இந்தப் பெண்ணை… இத்தனை கிராம் தங்கம் மகராகக் கொடுத்து… இந்த ஊர்… ஜனாப்… இவரது மகன்… மணம் செய்கிறார்.  ( இன்னும் சில ஒப்பந்தங்களைப் படிக்கிறார்).’

இவற்றையெல்லாம் கேட்ட மணமகன் சபையோர் முன்னிலையில் சத்தமாக ‘ஏற்கிறேன், சம்மதம்!’ என்று அறிவிக்கிறார். இறைவணக்கம் செய்யப்படுகிறது.  ‘வந்திருந்த கிறிஸ்தவ, இந்து நண்பர்களுக்கு நன்றி!’ என்ற அறிவிப்பு வருகிறது. அவ்வளவுதான் திருமணம்.
20லிருந்து 25நிமிடங்களில் முடிந்தது திருமணம்.

எழுந்து பள்ளி வாசலிலிருந்து வெளியே வந்தால் பேரிச்சம் பழம், தேநீர் அல்லது குளிர் பானம் தந்தார்கள். காலணியை மாட்டிக் கொண்டு ஒரு மணிநேரம் கழித்து மதிய உணவு நடக்கும் வேறொரு இடத்திற்குப் போக வேண்டியதுதான்.    அவ்வளவுதான் திருமணமே!

‘பரமன், நீங்க பள்ளிவாசல் வந்து வலிமா நிக்கா செய்யற அந்த நிகழ்வைப் பாருங்களேன். உங்களுக்குப் பிடிக்கும்!’ என்று முகம்மது அலி பாய் சொன்னதற்காக போயிருந்தேன்.

பள்ளிவாசலுக்குள்ளே எந்த மாறுதலும் இல்லை. வெளியே வாசலில் ஓர் அழைப்புத் தட்டி. திருமண வீட்டார் மட்டும் திருமணத்திற்கான உடையில். ஒப்பந்தம், பிரார்த்தனை என முடிந்தது திருமணம்.  பிரியாணி வேறு இடத்தில்.

ஒரு மணிநேரம் கழித்து என் அலுவலகத் தோழர்களோடு போனோம்.  ‘சார்… வெறும் மாப்பிள்ளை மட்டும் மேடையில. நாம வாழ்த்திட்டோம். பொண்ணு வேற இடத்திலயா?’ என்று கேட்டார் என் கார் ஓட்டுநர்.

முஸ்லீம் திருமண நிகழ்ச்சிகளைப் பார்த்திராதவர்களுக்கு வரும் இயல்பான கேள்வியிது. ஆண்கள் ஓரிடத்திலும் பெண்கள் வேறிடத்திலும் என்ற முறையிலேயே கொண்டாடப்படுகின்றன முஸ்லீம்களின் திருமண நிகழ்வுகளில்.  கணவனும் மனைவியும் வீட்டிலிருந்து ஒன்றாகவே வந்து நுழையுமிடத்தில் ஆண் – பெண் என அவரவர்க்கான இடத்திற்கு விரைவர்.

என் சக ஊழியர்கள் பிரியாணி சுவைக்க அசைவ விஜபி உணவரங்கம் நோக்கி விரைய, நான் பாய் வீட்டுக் கல்யாணத்திலும் சைவ உணவரங்கை நோக்கி நகர்கிறேன்.

‘பரமன், சைவமா!? ப்ச்ச்!’ என்று எங்கேயும் எப்போதும் எனை நோக்கி வீசப்படும் பச்சாதாபம் இங்கும் அநேகம் பேரால்  செய்யப்பட்டது. உணவிற்குப் பெரிய முக்கியத்துவம் தருபவனில்லையென்றாலும் பாய் வீட்டுத் திருமணங்களில் பொதுவாக சைவ உணவரங்கில் வகைகள் மிகமிகக் குறைவென்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.

இங்கே கதையே வேறு. ஜெயின்கள், அகர்வால்கள், குஜராத்திகள், என்னைப் போன்ற பல தமிழர்கள் என வரிசைகளில்  அமர்ந்திருந்த எங்கள் இலைகளில் மால்ப்பூவா, பெங்காலி ரசமலாய், நூடுல்ஸ், மினி ஊத்தாப்பம், இஸ்திரி செய்து மடித்ததைப் போல ரொமாலி ரொட்டி, பச்சை வண்ண பாலக் பூரி, (வெஜ்) ஹைதராபாத் பிரியாணி, சாம்பார் சோறு, வெள்ளை சோறு, வத்தல் குழம்பு, மோர்க்குழும்பு, ரசம், பாயசம், வெல்லம் விட்டு அடித்த மாங்காய் பச்சடி, மிளகாய்தூள் இடப்பட்ட பச்சை மாங்காய் துண்டுகள்,தயிர் சோறு, மோர் மிளகாய் என நிறைத்தார்கள். 

தலையில் குல்லா அணிந்திருந்த மௌலானாக்களும், நிறைய எண்ணிக்கையில் பாய்களும் சைவ வரிசையில் உட்கார்ந்து உண்டதை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டே உண்டனர் பலர்.

கை கழுவப் போன இடத்தில்தான், தொடக்கத்தில் குறிப்பிட்ட உரையாடல் நடந்தது.

‘பரமன் சார் உங்கள பள்ளிவாசல்ல பாத்ததில அவ்ளோ சந்தோஷம் எங்களுக்கு!’

‘நீங்க ?’

‘நான் அப்ளைடு சைக்காலஜி டீச்சர். உங்கள் வீடியோக்களை பாத்திருக்கேன்’

‘நான் அலி பாயோட அக்கா வழி சொந்தம். உங்கப் பக்கத்துல உட்காந்து சாப்பிடப் பாத்தேன். நடுவுல என் பையன் உட்கார்ந்துட்டான்!’

‘ஓ!’

( ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியை கட்டிக்கொண்டு ஒரு சிறுவன் வெறும் நூடுல்ஸாக சாப்பிட்டானே, அவன்!)

‘நான் சைவம். இங்க வந்து உட்கார்ந்தேன். நான் வெஜ் அந்தப் பக்கமாச்சே. நீங்க ஏன் இங்க வந்து சைவம் சாப்டறீங்க?!’

‘பரமன் சார்! ஐம்பது வயசாயிடிச்சே! அதான் சைவம்!’

……

– பரமன் பச்சைமுத்து
சென்னை
07.03.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *