இரண்டும் கைகோர்த்து இணைந்து செயல்பட வேண்டும் இப்போது – பரமன் பச்சைமுத்து

TCM

TCM

 

பீஜிங்கிலிருந்து சாங் யாங்ஃபேய், வுஹானிலிருந்து வு யோங் ([email protected]) ஆகிய பத்திரிக்கையாளர்கள் எழுதி சீன தினசரியான ‘சைனா டெய்லி’யில் வெளியான ஒரு கட்டுரை நம் கவனத்தைக் கவருகிறது.

…….

“   ….கொரோனா புயலின் மையப் பகுதியான வுஹானில் உள்ள லேய்ஷென்ஷான் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோய்த் தாக்குதலிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 16 பேரில் 6 பேர் சீன பாரம்பரிய மருத்துவத்தின் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டவர்கள்…..

“  …..சீன பாரம்பரிய மூலிகை சிகிச்சையும் கூடுதலாக அக்குபஞ்ச்சரும் பாத மசாஜும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது…  ”

“  ….பிப்ரவரி 17 தேதியின் கணக்குப்படி மொத்தமாக 60,107 கொரோனா நோயாளிகளுக்கு சீன பாரம்பரிய மருத்துவ சிகிச்சையின் மூலமே நோய் குணப்படுத்தப்பட்டது. அதாவது 85.2% ……   “

“ கொரோனாவிற்கு இதுவரையில் மருந்து ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் சீனப்பாரம்பரிய மருத்துவமுறையையும் ஆங்கில மருத்துவமுறையையும் கலந்து கொடுத்ததில் பெருமளவில் அதிவேகத்தில் குணமடைந்தனர். “ கொரோனா நோயிலிருந்து 92% நோயாளிகள் சீன பாரம்பரிய மருத்துவத்தால் குணமடைந்திருக்கிறார்கள்” என்று பிப்ரவரி 24 அன்று சீன மருத்துவத்துறையே அறிவித்திருக்கிறது… “

……….

மேலுள்ள வரிகள் அவர்கள் இருவரும் எழுதியதின் என் தமிழாக்கம். மிக மிக முக்கியமான செய்தியை அவர்களது கட்டுரை தாங்கியுள்ளது. ‘பாரம்பரிய மருத்துவத்திற்கு வக்காலத்து வாங்குகிறான் இவன்!’ ‘ஆங்கில மருத்துவத்துக்கு எதிரானவன் இந்த பரமன்!’ என்ற வகை முன்முடிவுகள் வேண்டாம்.  சளி என்றால் அதிமதுர சூரணமும், ஆடா தொடை மனப்பாகும் எடுப்பவன் என்றாலும், மாலை நிகழ்ச்சி மூன்று மணிநேரம் நின்று மலர்ச்சி வகுப்பெடுக்கவேண்டும் என்னும் பட்சத்தில் அலெக்ரா120 எடுக்கத் தயங்குவதில்லை நான் (மருத்துவர் பரிந்துரையின் படியே)

மருத்துவர் சிவராமன் எப்போதும் சொல்வது போல பாரம்பரிய மருத்துவமும் ஆங்கில மருத்துவமும் கைகோர்த்து செயலாற்றிட வேண்டிய நேரமிது. பன்றிக்காய்ச்சலின் போது நிலவேம்பு குடிநீர் கைகொடுத்ததைப் போல, இந்த இரண்டும் சேர்ந்து கைதூக்கி விடும் நம்மை.

எச்ஐவிக்கு பரிந்துரைக்கப்படும் ரிடோனாவிர், லோபினாவிர் ஆகிய மருந்துகளை பொருத்தமான நோயாளிகளுக்குக் கொடுக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் அறிவித்ததின் பேரில் தற்போது கேரளத்தில் எர்ணாகுளத்தில் கொரோனா நோயாளி ஒருவருக்குக் கொடுத்து குணமடையச் செய்திருக்கிறார்கள் என்று செய்தி வருகிறது. ஏற்கனவே இதே மருந்தின் மூலம் ராஜஸ்தானில் ஒருவரை குணப்படுத்தியிருக்கிறார்கள். இதே சோதனை முயற்சிகளை முறையாக பாரம்பரிய மருத்துவ வழியிலும் செய்யலாமே! பாரம்பரிய மருத்துவத்தின் மேதைகள், ஆங்கில மருத்துவத்தின் மேதைகள் என இருசாரரும் கைகோர்த்து இணைந்து நலத்தை மேம்படுத்த முன் வரவேண்டும்.

இன்று மருத்துவர் சிவராமன் ‘சீனாவில் கொரோனா நோய்த் தொற்றின்போது ‘க்யூபிடி’ என்னும் சீனக் கசாயத்தை கொடுத்துப் பார்த்தார்கள். அது வேலை செய்து நோய் குணமாகத் தொடங்கியதும், அறிவியல் பூர்வமாக அறிவித்தார்கள்’ என்று தெளிவாகவே ஆதாரத்தோடு சொல்கிறார். பாரம்பரிய மருத்துவ முறைகள், தொக்கண சிகிச்சை, நவீன யுக பரிசோதனை கருவிகள், ஆய்வுக் கருவிகள், ஆங்கில மருத்துவம்… நினைக்கவே அட்டகாசமாக இருக்கிறதே!

எந்த ஒரு முன்முடிவுகளும் கொண்டு கட்டுப்படாமல், ‘இது பெரியதா அது பெரியதா?’ என்று இல்லாமல் சோதனை முயற்சியாக, கற்றல் முயற்சியாக, புதிய பரிமாணத்தை நோக்கி சீனா அடியெடுத்து வைத்ததைப் போல, நாமும் அடியெடுத்து வைக்க வேண்டிய நேரமிது. மருத்தவ மேதைகளும் அரசும் முடிவெடுக்க வேண்டும்.

 

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து

சென்னை

26.03.2020

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *