விழிப்புணர்வோடு வெல்லுவோம் கொரோனாவை! :
பரமன் பச்சைமுத்து

ஹாங்காங்கில் பல ஆண்டுகள் வசித்து விட்டு இப்போது சென்னை திருவான்மியூரில்  வசிக்கும் தொழில் முனைவரான நண்பர் முத்து ரகுபதி, இன்றும் முகத்தைத் துடைக்க புறங்கையையே பயன்படுத்துகிறார்.  உள்ளங்கையை முகத்துக் கொண்டு செல்வதேயில்லை. அனிச்சை செயலாகவே அடிக்கடி கையைக் கழுவுகிறாராம்.  சார்ஸ் வைரஸ் தொற்று வந்த போது ஹாங்காங்கே எதிர்த்துப் போராடிய போது கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவை, அன்று அங்கே கொண்ட அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றும் அவருக்குள் ஊறிப் போய் நிற்கிறது. இங்கேயும் அவரையறியாமல் தொடர்கிறது.  இது சீன தேசம், அது கண்ட பேரிடரிலிருந்து கற்று வைத்திருக்கும் அனுபவ பெரும் பலம்.

ஹூபே கொரோனா தொற்றினால் துண்டிக்கப்பட்டு கட்டுப் பாட்டிலிருந்த போது, சீன அரசு அப்பகுதி மக்களுக்கு சிகரெட் உட்பட மருந்துப் பொருட்கள், அத்யாவசிய உணவுப் பொருட்களை வீடுகளில் விநியோகம் செய்ததாக செய்திகள் உள்ளன. சார்ஸ், மெர்ஸ் என்று ஏற்கனவே எதிர்கொண்ட இடர்களின் வழியே கற்ற அனுபவங்களும்,  வளர்ச்சியடைந்த கட்டமைப்புகள் தொழில்நுட்பங்கள் என நவீன வசதிகளும் கொண்டிருந்த அந்த தேசம் அதை திறம்பட கையாண்டுக் கட்டுக்குள் வைத்தது.

நம் நிலை வேறு.  கற்றுக் கொள்கிறோம். கற்றுக் கொண்டே கையாள்கிறோம், கையாண்டு கொண்டே கற்றுக் கொள்கிறோம்.

‘அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது’ என்று ஒரு சாரரும், ‘மக்களை மட்டுமே குறை சொல்ல முடியாது’ என்று எதிர் சாரரும் வாட்ஸ்ஆப் குழுக்களில்  சூடு பறக்கக் கதைத்து பிற உறுப்பினர்களை தெறிக்க விடுகிறார்கள்.

ஒரே நாளில் அல்ல, ஒவ்வொன்றாகத்தான் கற்றுக் கொள்கிறோம் நாம். நடந்தேயிராத  நடக்காதவைகள் நடக்கும் போது, நடையை மாற்றி,  நடக்க நடக்க திருத்திக் கொள்கிறோம். அதுவும் நல்லதே.

இத்தாலியையும், பிரிட்டனையும், ஸ்பெயினையும், அமெரிக்காவையும் பார்த்துப் பார்த்து பேசுகிறோம். உண்மையில் நாம் பார்க்க வேண்டியது தென் கொரியாவை.  விழிப்புணர்வு கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அரசும், விழிப்புணர்வோடு கட்டுக்குள் நின்று ஒத்துழைத்த மக்களும் சேர்ந்து உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஓர் உயிர்க்கொல்லியையே செயலிழக்கச் செய்து விட்டார்கள்.  இந்த நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்க சில தினங்கள் ஆகும் என்று உலகமே சொல்லிக் கொண்டிருந்த நிலையில் சில மணி நேரங்களில் கண்டுபிடிக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ச்சியை முடுக்கி விட்டார்கள். கண்டும் பிடித்தார்கள்.  கட்டுக்குள் நின்றார்கள், கண்டறிந்தார்கள், காத்துக் கொண்டார்கள். ‘இடது கையால் கதவுகளைத் திற, பைகளைத் தூக்கு. வலக்கையால் கூடுமானவரை எதையும் தொடுவதைத் தவிர்!’ என்ற முறையே தென்கொரிய விழிப்புணர்விற்கு ஓர் உதாரணம்.

தனது கண்களால் காணாத வரை அதை நம்ப மாட்டேன் என்று மனநிலை கொண்ட மனிதர்களாலும், ‘நமக்கெல்லாம் அது வராதுப்பா!’ எனும் குருட்டாம்போக்கு குணம் கொண்ட மனிதர்களாலும் சுற்றியுள்ளோரின் எச்சரிக்கை மனப்பான்மையும் தகர்த்து உடைக்கப்படுகிறது. 

மீன் கடைகளிலும் இறைச்சி கடைகளிலும், சில மொத்த விற்பனை காய்கறி சந்தைகளிலும்  ‘எங்களுக்கெல்லாம் சமூக இடைவெளியும் இல்ல சமூக விலகயிருத்தலும் இல்ல, போவியா!’ என்ற மனநிலையில் கும்பல் கும்பலாக கூடி நிற்கும் நம் மனிதர்களைப் பற்றிய செய்திகளை்படங்களைப் பார்க்கும் போது பதற்றம் கடந்து கண்ணீர் வருகிறது.
‘அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்’ என்றெழுதிய வள்ளுவப் பேராசான் இவர்களைப் பார்த்திருந்தால் ‘அறியாமை ஆரிருள் உய்த்து விடும்’ என்றெழுதியிருப்பான்.

‘வீட்டிற்கு அருகில்தான் கடையிருக்கிறதே!, தினமும் நான் போய் வாங்கிக் கொள்கிறேன்!’ என்ற மனநிலையால் போகாதே என்ற போதிலும் வெளியே போகும் மனநிலை வந்து விடுகிறது ஒரு புறம்.   அத்தியாவசியப் பொருட்கள் கடைகள் தொடர்ந்து இயங்கும் என்று அரசு அறிவித்த போதிலும், ‘ஐயோ, தொடர்ந்து கெடைக்கலன்னா! எதுக்கும் போய் வாங்கிட்டு் வந்துருவோம்!’ என்ற மனநிலையும் இப்படி கும்பல் கும்பலாய் மனிதர்களை வெளியே திரிய வைக்கிறது.

( இன்று விவசாயப் பொருட்களுக்கு தடை விலக்கல் செய்திருக்கிறது அரசு. மிக மிக நல்ல செய்தி.  தர்ப்பூசணிப் பழங்களை, வெள்ளரிக்காய்களை இனி மனம் நொந்து வீதியில் கொட்ட மாட்டார்கள் விவசாயிகள். தவிர, தோட்டங்களில் விளைவது மக்களுக்குத் தொடர்ந்து சென்றால்தான் விவசாய உற்பத்தியாளர்கள் நுகரும் பொது மக்கள் என இருபுறங்களிலும் சீரான இயக்கம் இருக்கும். பொருட்களும் கிடைக்கும் பதுக்கல் குறையும் விலையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். வரும் நாட்களுக்கு இது மிக மிக முக்கியமானது.  )

தொடர்ந்து அவரவர் வீடுகளுக்கருகேயே அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என்ற ஓர் ஏற்பாட்டை அரசு செய்ய வேண்டும். மக்கள் வெளியே திரிவதை அது கட்டுப்படுத்தும்.

வெளிநாடுகளில் இருந்து கோவிட் 19 என்ற வைரஸ் தொற்றோடு வந்தவர்கள் என்பது முதல் கட்டம். வெளிநாட்டிலிருந்து தொற்றோடு வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு வரும் தொற்று என்பது இரண்டாம் கட்டம். இந்த இடத்தில் ஊரடங்கு உத்தரவின் படி அனைவரும் கட்டுப்பாடோடு விழிப்புணர்வோடு ‘விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு…’ என்று இருந்து விட்டால், நோயைக் கட்டுப்படுத்திக் கொன்று விடலாம். 

நோய்த் தொற்று வந்து எந்த குறிகுணங்களும் காட்டாமல் உடலில் தங்கியிருக்கும் சில மனிதர்களுக்கு. அவர்களுக்கு கோவிட்19 தாக்கம் வந்ததே அவர்களுக்குத் தெரியாது.  உதாரணத்திற்கு, நேற்று தமிழக அதிகாரி பீலா ரமேஷ் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம்.  மருத்துவ மனையில் பணியாற்றிய பெண் மருத்துவருக்கு நோய்த்தொற்று வந்து விட்டது. அவரின் வழியே அவரோடு தொடர்பிலிருந்த 10 மாத குழந்தை உட்பட நான்கு பேர் மீது தாவி விட்டது கோவிட்19 வைரஸ்.  பரிசோதிக்கப்பட்டதால் மட்டுமே இது தெரிந்தது.  

தொற்று வந்து எந்த குறிகுணங்களும் வெளிப்படாமல் இருக்கும் நல்ல ஆரோக்கியமான மனிதர்களுக்கு பிரச்சினையில்லை. அவர்களுக்கு வைரஸ் வந்ததும் தெரியாது, 14 நாட்களில் அதுவே செயலிழந்து போனதும் அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் பாட்டிற்று வெளியே உலாத்தும் போது பெரும் அபாயத்திற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுவிடுகிறது.

‘வாக்கிங் போறேன்’ ‘தோ மீன் வாங்கிட்டு இப்ப வந்துர்றேன்!’ ‘தக்காளி ஃப்ரஷ்ஷா வந்துருக்கும், தவிர வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கெடக்க முடியாது பாருங்களேன்!’ என்று போகிற மனிதர்களில் அவர்கள் சந்திக்கும் தொடர்பில் வரும் மனிதர்களில் தாவி ஏறி பயணிக்கிறது கோவிட்19.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், அவர்கள் தொடர்பில் வந்து தனிமைப் படுத்தப்பட்டவர்கள் ஆகிய வட்டத்திலேயே கண்காணிப்பு செய்யும் அதிகாரிகளால், இந்த அரை நிமிடம் வஞ்சிரம் மீன் வாங்க வந்த இடத்தில் கொரோனா கொடுத்தவனை  கண்டறியவே முடியாது.  சில நிமிடங்களேயானாலும் கொரோனா கொடுத்தவனும் வெளியில் திரிகிறான், அவனிடம் வாங்கியவனும் வெளியில் திரிகிறான் என்னும் போது, கொரோனா அருகாமையில் வரும் ஒவ்வொரு மனிதன் மீதும் தாவி ஏறி ஏறி லட்சக்கணக்கானவர்களைத் தொடும்.  அப்புறம் ஏப்ரல் 14 அல்ல, ஜூன் வரை கூட போராட்டம் நீடிக்கும். அதற்குள் பெரும் இழப்புகள் ஏற்பட்டு விடலாம். இவை எதுவும் நடைபெறாமல் நல்லதே நடந்து மக்கள் காக்கப்பட வேண்டும், மலர்ச்சியோடு இருக்க வேண்டும்.  அதற்கு நாம் எல்லோரும் கட்டுப்பட வேண்டும்.  ‘விழித்திரு.. விலகியிரு.. வீட்டிலிரு..’ என்பதே இப்போது நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய மலர்ச்சி மந்திரம்.

அரசும். மக்களுக்கு வீட்டினருகேயே அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சரி, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் போது நாம் செய்ய வேண்டியது, கொள்ள வேண்டிய முறை என்னென்ன?

அடுத்த பகுதியில் தொடர்வோம்.

– பரமன் பச்சைமுத்து
[email protected]
30.03.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *