‘தீபன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

dheepan

அயல் சினிமா: ஃபிரெஞ்ச் – தமிழ்

‘தீபன்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

இலங்கையில் வடக்கு மாகாணத்தில், தரைக்கு மேலே சில அடிகள் இடைவெளி உயரத்தில் சொற்ப கழிகளால் அமைக்கப்பட்டுள்ள மேடையில் முகம் சிதைந்து சிலர், காயங்களுடன் சிலர், குழந்தைகள் பெரியவர் என வரிசையாக கிடத்தப்பட்டுள்ள உடல்கள் மீது பனை மட்டைகள் வைக்கப்படுகின்றன, இயலாமை, இழப்பு என சொல்லவொண்ணா பல உணர்வுகளால் இறுகிப்போன முகத்தோடு வெறித்து நிற்கும் மனிதன் அந்தச் சிதைகளுக்கு எரியூட்டிவிட்டு, குண்டடி பட்ட காலின் வலியோடு, அணிந்திருக்கும் உடைகளை கழட்டி அதே நெருப்பில் கனத்த மனதோடு போட்டுவிட்டு அங்கிருந்து நகர்கிறான்.

எப்படியாவது இங்கிருந்து தப்பவேண்டும் என்ற எண்ணத்தில் அகதிகள் முகாம் முழுக்க தாயில்லாத ஒரு சிறுமியை தேடிக்கண்டு கூட்டி வருகிற இருபத்தியாறு வயது பெண்ணை அவனோடு சேர்த்து நிறுத்தி, ‘உனது பெயர் இனி நடராஜன் தீபன், இது மனைவி, இது மகள்’ என்று கூறி ஏற்கனவே இறந்தவரின் பாஸ்போர்ட்டை கையில் திணித்து படகில் ஏற்றி அனுப்புகின்றனர்.

தனது சகோதரன் இருக்கும் இங்கிலாந்திற்கு போகப்போவதாக நினைத்து பயணிக்கும் இளம்பெண் யாழினி ‘ஃபிரான்சுக்குப் போகிறோம்’ என்று அறிந்து ஏதும் செய்யமுடியா அதிர்ச்சியில் உறைந்தே அவர்களோடு பயணிக்கிறாள். ஃபிரான்சின் தலைநகர் பாரீஸ்சிற்கு வந்து சேர்ந்த அவர்கள் புதிய வாழ்க்கை ஏற்படுத்திக்கொள்ள பெரிதும் சிரமப்படுகிறார்கள். ‘இரண்டு யூரோ, இரண்டு யூரோ’ என்று சாவிக்கொத்துகளையும் சிறிய டார்ச் விளக்குகளையும் கூவிக் கூவி தெருக்களில் விற்கும் தீபன் நடராசன் போலீசிடமிருந்து தற்காத்துக்கொள்ள ஏனைய குடியுரிமை இல்லாத அகதிகளைப் போலவே கண்கள் பிதுங்க ஓடுகிறான்.  

குடியுரிமைக்கு விண்ணப்பித்து நேர்முகத்தேர்வுக்கு வரிசையில் காத்திருக்கிறார்கள் குடும்பமாய். பெயர் அழைக்கப்படவே உள்ளே சென்ற தீபன் ஃபிரெஞ்சு பேசும் அதிகாரி தமிழ் பேசும் அதிகாரி என ஈரதிகாரிகளை எதிர்கொள்ளுகிறான்.

‘நான் போரின்போது அமைதி முயற்சி மேற்கொண்ட என்ஜிஓ அமைப்பை சேர்ந்தவன்’ என்று சொல்லும் தீபனை, ‘உன்ன கள்ளத்தோணியில ஏத்தி அனுப்பினவங்க சொல்லச் சொன்ன கதையா அது? இதையேதான் எல்லோரும் சொல்றீங்க!’ என்று நிறுத்துகிறார்.

‘நீ என்ன செய்ஞ்சிட்டு இருந்த?’

‘உங்களுக்கு எதுக்கு அது தெரியனும்?’   

‘உன் உண்மையான பெயர் என்ன?’

‘சிவதாசன்!’

சிவதாசன் புலிகளின் முக்கிய தளபதி, அவர் நந்திக்கடல் போரில் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்து விட்டது. அந்த சிவதாசன், தீபன் நடராசனாக பாரீஸில் அதிகாரிகள் முன்னிலையில் உட்கார்ந்திருக்கிறார். இப்படி அமர்களமாக தொடங்குகிறது படத்தின் கதை. (‘நீங்க யாரு… யாரு… யாரு… பாம்லே நீங்க என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?’ ‘பாஷா… பாஷா’ மொமென்ட். ஆனால், அப்படியேதும் செய்யாமல் உணர்ச்சியை பார்வையாளர்களிடம் விட்டு விட்டு படத்தை தொடர்கிறார்கள்).

மூவருக்கும் உண்மையில் வேறு வேறு குடும்பம், இங்கே குடும்பமாக காட்டிக் கொள்கிறோம், நாம் குடும்பம் இல்லை என்று புதிய வாழக்கையைத் தொடங்கும் அவர்கள், பாரீசில் வேலைக்காரப் பெண்மணியாக வேலைக்காரனாக  பிழைப்பிற்காக படும் அல்லல்களும் எதிர்கொள்ளும் இன்னல்களும் உணர்வுப் பூர்வமாகக் காட்டப்பட்டுள்ளது,.

மொழி புரியாத வீட்டு எஜமானனிடம், ‘எங்கள் நாட்டில் விழுந்தாலும் சிரிப்போம், வலித்தாலும் சிரிப்போம், இங்கே சிரிச்சா கனத்த பகடி பண்ணுவதாக எடுத்துக்கொள்கிறார்கள்!’ என்று தனது மொழியிலேயே யாழினி பேசும் இடம் நெகிழ்வு,

மறுபடியும் தீபனை எப்படித் துப்பாக்கி ஏந்த வைக்கிறது பாரீஸ் மண், அதை எப்படி எதிர்கொள்கிறான் அவன் என்பதை உணர்ச்சியோடு தந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘தீபன்’ – யாதர்த்தம் தெரிந்த உணர்வுப் பூர்வமானவன். உலகத்திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்ற திரைப்படம், கொண்டாடப்பட்ட திரைப்படம். பாருங்கள்.

–    திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *