இன்றைய தலையங்கத்திற்கு ஒரு கொட்டு, உரிமையோடு!:

 

hinduTamil Thaliyangam 20042020

இன்றைய தலையங்கத்திற்கு ஒரு கொட்டு, உரிமையோடு!:

 

இன்று வெளியான இந்து தமிழ் திசையில் ‘செயல்பாட்டின் வழி நன்றியுணர்வை வெளிப்படுத்துவோம்’ என்ற தலைப்பிலான தலையங்கம் நன்று. மருத்துவர்களும், அதிகாரிகளும், களப்பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றி வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. வணங்கத்தக்கவர்கள் அவர்கள்.

தலையங்கத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு சங்கதி நெருடலாக இருக்கிறது.

‘சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயரிழந்த மருத்துவரின் உடலைத் தகனம் செய்வதற்காக எடுத்து வந்த போது அதற்குப் பொதுமக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தது வெட்கக்கேடு.’ என்ற எழுதப்பட்டிருக்கிறது. நடந்த நிகழ்வு முற்றிலும் வேறானது என்று அறிகிறோம்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவரின் உடலை தகனம் செய்ய கொண்டு வந்த போது, ‘நோய்த் தொற்றுக்கு பலியான அவரது உடலை தொட்டுத் தூக்கி தகன மேடையில் வைப்பது வரையிலான செயல்களை நாங்கள் செய்யவேண்டும். எங்களிடம் பாதுகாப்பு உடைகள் இல்லை, கவசம் இல்லை. எங்களுக்கு நோய்த் தொற்று வரலாமே!’ என்று கூறி மின் மயான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாகக் கருதி அந்தப் பகுதியில் குடியிருப்போரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சினை பெரிதாக ஆனதால், அந்த உடலை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் எங்கே என்று சொல்லமுடியாது என்றும் அதிகாரிகள் அறிவித்தனர். இதுதான் நாம் அறிந்த செய்தி. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவரை முறையான கவசம் உடைகள் இல்லாமல் தூக்கி தகனம் செய்யமுடியாது என்பதே எதிர்ப்பே தவிர மருத்துவர் மீது நன்றியில்லாமல் அங்கே தகனம் செய்யக் கூடாது என்று செய்த எதிர்ப்பு அல்ல அது.

கட்செவியஞ்சலில் பரபரப்புக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் பரப்பப்படும் வதந்திச் செய்திகளை அடையாளம் காட்டி சரியான செய்திகளை ஆதரங்களுடன் வெளியிடும் நாளிதழ் இந்து தமிழ் திசை. அதனால்தானே ஊரடங்கு காலத்திலும் விடாமல் வாசிப்பைத் தொடர்கிறோம். இந்து தமிழில் ஊக வதந்தி செய்தியின் அடிப்படையில் தலையங்கம் வரக்கூடாதே!

மற்ற படி… தொடருங்கள், தொடர்ந்து வாசிக்கிறோம்!

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து

சென்னை

20.04.2020

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *