‘மழைப்பாடல்’ – ஜெயமோகன் : பரமன் பச்சைமுத்து

wp-1609937883562.jpg

பள்ளிப் பாடங்களில் காந்தாரம் பற்றி காந்தாரக் கலை பற்றிப் படித்திருப்போம், பாகிஸ்தானுக்கு அடுத்த பெருமணல் வெளி பாலையைக் கடந்து இருக்கிறது ஆப்கானிஸ்தான் என்று அறிந்திருப்போம், மகாபாரதக் கதையில் திரிதராஷ்டிரனுக்கு மனைவியாக கண்ணைக் கட்டிக் கொண்டு வரும் காந்தாரி பற்றியும் கதைகள் கேட்டிருப்போம்… இவையெல்லாம் ஒரே இடத்தை குறிக்கின்றன, ஆப்கன் நாட்டிலிருந்து வந்த இளவரசி வசுமதியே காந்தார தேச மகள் என்பதால் காந்தாரி என்றழைக்கப்பட்டாள் என்று இதுவரை எவரும் எனக்கு சொல்லவும் இல்லை, நான் படித்திருக்கவும் இல்லை. ஜெயமோகன் ஆராய்ந்தும் அனுமானித்தும் அடித்தும் ஆயிரத்து பதினான்கு பக்கங்களில் சொல்கிறார். (ஆமாம்… 1014 பக்கங்களில் ஒரு நாவல்! அதுவும் இது வெறும் இரண்டாம் பாகம் மட்டுமே! இரண்டு தலையனைகளை சேர்ந்தார்போல வைத்தது போன்ற அளவு நாவல்! ஹி மஸ்ட் பி அ ரைட்டிங் மெஷின்!)

சுயோதனன் என்னும் துரியோதனனுக்கு தொன்னூற்றியொன்பது தம்பிகள் அவர்கள் காந்தாரிக்கே பிறந்தார்கள் என்ற கதை வடிவமே பலர் கொண்டிருக்க, பேருருவம் கொண்ட கண்ணில்லா திரிதராஷ்டிரனுக்கு காந்தாரியோடு சேர்த்து பத்து இளவரசிகள் மணம் செய்யப்பட்டனர். சத்யசேனை, சுதேஷ்ணை, சம்படை என்றிருந்த அவர்களுக்கெல்லாம் சேர்த்து பிறந்ததே அந்த தொன்னூற்றி சொச்சம் பிள்ளைகள், காந்தாரிக்குப் பிறந்தது துரியோதனனும் அவன் தங்கை துச்சலையும்தான் என்கிறது இந்தக் கதை வடிவம்.

மார்த்திகாவதியின் யாதவ இளவரசி பிருதை என்னும் குந்தியை எப்படியாவது மணம் புரிந்துவிட வேண்டுமென்று மதுராவின் யாதவ கம்சன் முயற்சித்தான் என்பதை வாசிக்கும் போது ‘என்னாது!’ என்றபடியே  விரிகின்றன நம் விழிகள்.

காந்தார சௌபாலனை(சகுனி), கங்கர்குல தேவவிரதனை (பீஷ்மர்), மிக ஆழமான அறிவான விதுரனை, ஆட்சி அரியணை என்றே அச்சம் கொண்டு திரிந்த கம்சனை, பிருதைக்கு எல்லாமுமாய் இருந்த வசுதேவனை, பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரியை  என பாத்திரங்கள் விவரிக்கப்பட்டாலும், கங்கை புறத்து காசி தேசத்து இளவரசிகளான அம்பிகை, அம்பாலிகை, பாலைவனத்து பழங்குடி இளவரசி காந்தாரி, யாதவ குடியின் இளவரசி குந்தி, சந்திர குலத்து சந்தனுவை மணந்து அஸ்தினாபுரியின் பேரரசியான மீனவ குலத்து சத்யவதி ஆகிய ஐந்து பெண்மணிகளின் அக உலகமே இப்பாகத்தின் முக்கிய களமாக கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

இவர்கள் ஆடும் அரசியல் ஆட்டமே பின்னாளில் மைந்தர்களால் பாரதப்போராக குருஷேத்திர களத்தில் நடைபெற அடித்தளமாக அமைந்திருக்கிறது என்றொரு வடிவத்தை முன் வைக்கிறது நூல்.

வெக்கை மணல் புழுதி வீசும் காந்தாரம், ஓயாது மழை பொழியும் யமுனை புறத்து புல்வெளி சூழ் மார்த்திகாவதி மதுரா பிரதேசம், கடல் போல பரந்து விரிந்த கங்கை பாயும் காசி தேசம், சமவெளியான அஸ்தினாபுரம், அந்திமக் காலங்களில் வெளிர் தோல் நலங் குறைவு பாண்டு கழித்த குளிர்சூழ் இமயமலைச்சாரல் காடு என பாரதத்தின் வெவ்வேறு மண்ணையும் கலாச்சாரங்களையும் கண் முன்னே நிறுத்துகிறது நாவல்.

தமிழ் நிலம் என்று தமிழ்நாட்டையும், திருவிட தேசம் என்று ஆந்திர பகுதியையும் குறிப்பிடுகிறது நூல்.

பீஷ்மரையும், விசித்திரிய வீர்யனின் மகன்கள் திருதராஷ்டிரனையும், பாண்டுவையும் விதுரனையும் இவ்வளவு நெருக்கமாக இவ்வளவு விவரமாக வேறெவரும் கண் முன்னே நடமாட விட்டிருப்பார்களா என்பது சந்தேகமே.

பேரரசி சத்யவதியும், அரசிகள் அம்பிகையும் அம்பாலிகையும் ஒரு கணத்தில் முடிவெடுத்து அனைத்தையும் துறந்து  அந்திமத்தில் காடு புகுவது புதிய செய்தி.

பிரபஞ்ச ஆழ் அமைதியும் சக்தி அசைவும் நடராஜராகவும் சக்தியாகவும் மாறுவதையும், சிவனும் பார்வதியும் தாயம் உருட்டி விளையாடுவதில் விழும் பகடைகள் நான்கு யுகங்களாக விழுகின்றன என்றும் நூலின் தொடக்கத்தில் விவரித்திருப்பது அருமை. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வரையப்பட்டுள்ள படங்கள் அருமை.

‘வெண் முரசு’ நாவல் வரிசையில் முதல் பாகமான  ‘முதற்கனல்’ நாவலுக்கு அடுத்து இரண்டாம் பாகமாக  ‘மழைப்பாடல்’ தந்திருக்கும் ஜெயமோகன் ஒரு மிகச் சிறந்த கதைசொல்லி.

‘மழைப்பாடல்’ – நல்லனுபவம்.

நூல் : மழைப்பாடல்
நூலாசிரியர்: ஜெயமோகன்
வெளியிட்டோர்: கிழக்கு பதிப்பகம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
06.01.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *