The book of Mirdad

‘ …..தனது அந்திமக் காலத்தில் நோவா தன் மகனை அழைத்து, ‘மகனே… இனி வரும் மனிதர்கள் ஆதிப் பெருவெள்ளத்தையும், அதன் ஆழத்தையும்,நூற்றியைம்பது நாட்கள் அதில் நாம் தத்தித் தவித்து வெற்றி கண்டதையும் மறந்து விடுவார்கள் என்று பயம் வருகிறது. இந்தப் பகுதியின் உயர்ந்த சிகரத்தில் ஒரு பலிபீடம் கட்டு. அதன் எதிரிலேயே கப்பல் வடிவில் ஒரு மடாலயம் கட்டு. அதில் எப்போதும் ஒன்பது பேர் மட்டுமே வாழ வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. ஒரு வேளை ஒருவர் இறந்து விட்டால், அவ்விடம் நோக்கி ஒருவரை கடவுள் அனுப்பி வைப்பார்’ என்றார்.

‘அப்பா, அது என்ன ஒன்பது என்ற எண்ணிக்கை?’

‘ஆதி வெள்ளத்தின் போது நம் பேழைக் கப்பலில் இருந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது மகனே’

‘நீங்கள், நான், சகோதரர்கள், மனைவிமார்கள் என கணக்கிட்டாலும் எட்டுதானே வருகிறது!’

‘மகனே நம் கப்பலில் ஒன்பது பேர் இருந்தோம். அந்த ஒன்பதாவது நபர் என் கண்ணுக்கு மட்டுமே தெரிந்தார். அவரே எனக்கு கட்டளையிட்டு வழிகாட்டினார்’

நோவா இறந்து போனதும் அவரை அந்த உயரமான பால் மலையின் உச்சி சிகரத்தில் பலி பீடத்தின் அடியிலேயே அடக்கம் செய்தான் சாம்.  அந்த மடாலயம் தொடர்ந்தது. ஒன்பது பேர் இருந்தனர்.  

பல ஆண்டுகள் கழித்து நன்கொடைகளை ஏற்றுக் கொண்டனர். நிலங்களை வாங்கினர். செல்வம் செழித்தது. ஒருவர் இறந்து போய் விட, எட்டுப் பேர் ஆனார்கள் அவர்கள். கடவுள் ஒருவரை அனுப்புவார் என்று காத்திருந்தார்கள்.

நெடுநாளைக்குப் பிறகு மலைக்கு ஏறி வந்த ஒருவர் அடைக்கலம் கேட்டார். அடிபட்டும் காயம்பட்டும் வத்தலும் தொத்தலுமாக இருந்த அவரது தோற்றத்தைக் கண்டு அவரை ஏற்க மறுத்தார் மூத்த துறவி. ஆனால் அவரோ நகர்வதாக இல்லை. விடாப்பிடியாக இருந்தார், அடைக்கலம் கேட்டு அங்கேயே நின்றார்.

மூத்த துறவி அவரை வேலைக்காரராக வைத்துக்கொள்ள நிபந்தனை வைத்து மடாலயத்தில் ஏற்றுக் கொண்டார். மடாலயத்தில் ஒன்பது பேர் இருந்தனர். எல்லா திசையிலிருந்தும் செல்வங்கள் வந்தன மடாலயத்தை நோக்கி. அப்போது….     …..’

இப்படித் தொடங்குகிறது இந்த நூல்.  2015ல், ‘பரமன் இதைப் படியுங்கள்!’ என்று பொள்ளாச்சி சாந்தலிங்கமும், அதே மாதிரி ஒரு குறிப்போடு கோவை பொன்னுஸ்வாமியும் ஆளுக்கொரு நூலாக அனுப்பி வைக்க, ஒரே நூலின் இரண்டு பிரதிகள் என்னிடம் வந்து சேர்ந்த போதும், எதனாலோ அதைப் படிக்க படித்தாலும் உள்வாங்க முடியவில்லை அன்று.

ஓஷோவே சிலாகித்த பரிந்துரைத்த அந்த நூலை இன்று எடுத்திருக்கிறேன். நேரம் வாய்த்துவிட்டது போல!

நூல் : ‘மிர்தாதின் புத்தகம்’ ( The Book of Mirdad )

நன்றிகள்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
30.01.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *