பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…

‘பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக் கட்டிப் பாப்பாவுக்கு தாலேலோ…’

சில பாடல்கள், அவை இடம் பெற்ற திரைப்படங்களை நாம் பார்க்க வில்லையென்றாலும், நம்மை வேறு சில நினைவுகளுக்கு கூட்டிப் போய் விடுகின்றன. அந்தப் படங்களைப் பார்த்திருந்தால் படக்காட்சிகளின் நினைவுகள்தான் வரக்கூடும், பார்க்காததாலேயே நம் வாழ்வின் நிகழ்வுகள் நினைவில் வருகின்றன என்ற வகையில் பார்க்காததே வரம்தான்.

பகலில் பொதுவெளியில் சுவாசக்கவசமாக இருக்கும் சர்ஜிக்கல் மாஸ்க், இரவுப் பயணத்தில் கொஞ்சம் மேலே நகர்த்தி மூக்கு வாயோடு கண்களையும் மூடி தூங்க உதவி செய்யும் கூடுதல் வசதி உபகரணமாய் மாறிவிடும் எனக்கு.
புதுச்சேரி லீ ராயல் பார்க்கில் அரங்கு நிறைந்த ‘வளர்ச்சிப்பாதை’ எடுத்துவிட்டு காரிலேறி சீட்பெல்ட்டணிந்து முன் சீட்டை சாய்த்து, அப்படி மாஸ்க்கை இழுத்து கண்களை மூடி தூங்க முற்படுகையில், டிரைவர் ஒலிக்கவிட்ட எஃப்எம் ரெயின்போவில் ஏசுதாஸின் குரலில் ஒலிக்கிறது…

‘பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக் கட்டிப் பாப்பாவுக்கு தாலேலோ…’

முத்துதான் இந்தப் பாடலை முதன்முதலில் சொன்னான் எனக்கு. எட்டாம் வகுப்பு விடுமுறையிலோ ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறையிலோ சோமாசிப்பாடியிலிருந்து முத்துவும் சந்துருவும் மணக்குடிக்கு வந்திருந்தார்கள்.  ஆளவந்தார், நான், முத்து, சந்துரு என ஒரு கூட்டு சேர்ந்து குளத்தில் ஐந்தாம் படியிலிருந்து குதிப்பது, நடுக்குளத்திற்கு நீந்திப்போய் அல்லிக்காயை பறித்து வந்து உடைத்து உண்பது, வயலாமூர் வடக்கு வெளி வயலில் மேயும் ஆடுகளை விரட்டிப் பிடித்து பாலை நேரடியாக கண்களில் பீச்சிக் கொள்வது என பல செயல்கள் புரிந்து கணக்கின்றி திரிவோம்.

பகலெல்லாம் என்னோடும் இரவில் உண்ண உறங்க ‘பெரியவூடு’ எனப்படும் ராஜவேலு சித்தப்பா வீட்டிற்கும் போய் விடுவார்கள் முத்துவும் சந்துருவும். கடல் பார்த்ததில்லை என்று சொன்ன சந்துருவுக்காக ராஜவேலு சித்தப்பா, நான், முத்து, சந்துரு நால்வரும் பரங்கிப்பேட்டை வரை இரண்டு சைக்கிள்களில் எதிர்காத்தில் மிதித்துப் போனதும், சிதம்பரம் லேனா திரையரங்கில் ‘குரு சிஷ்யன்’ திரைப்படம் பார்த்ததும் அப்போதுதான்.

முத்து திருவண்ணாமலை டேனிஷ் மிஷனில் இங்கிலீஷ் மீடியம் படித்தான். நான் புவனகிரி அரசு ஆண்கள் மேல்திலைப்பள்ளியில் தமிழ் மீடியம். ‘நேச்சுரலி’ ‘தட்ஸ் த பாயிண்ட்’ ‘த பாயிண்ட் ஈஸ்’ ‘அப்ஸலூட்லி’ ‘இன் த சென்ஸ்’ என சாதாரணமாக பேசுகையிலேயே ஆங்கிலம் வந்து விழ பேசும் முத்துவைப் பார்த்து வாய் விரிய வியந்து நின்றிருக்கிறேன் அவ்வயதில் பல முறை. அவன் பள்ளியின் பெயரை ‘டேனிஷ் மிஷன்’ ‘டேனிஷ் மிஷன்’ என இரண்டு முறை பெருமை பொங்க உச்சரிப்பார் ராஜவேலு சித்தப்பா.

முத்துவின் சித்தப்பா சிவசங்கரன் மாமா திருவண்ணாமலை அன்பு தியேட்டரில் படம் ஓட்டும் ஆப்பரேட்டராக இருந்ததால் முத்துவும், திருமலை மாமாவின் மகன் சந்துருவும் அந்நாட்களின் கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் பார்த்து விடுவர். புதுப்படங்களின் பாடல்கள் அவர்களுக்கு அத்துபடி.

அப்பா இலங்கையிலிருந்து வாங்கி வந்த நேஷனல் டேப்ரெக்கார்டர்தான் மணக்குடி ஊருக்கே முதல் டேப்ரெக்கார்டர். அப்பா வைத்திருந்த ஏதாவதொரு டிடிகே 60 கேசட்டை எடுத்துக்கொண்டு ஓடி புவனகிரி சக்தி மியூசிக்கல்ஸில் திரைப்படப் பாடல்களின் பட்டியலைத் தந்து மூன்று ரூபாய் தந்தால் அடுத்த நாள் நம் கேசட்டில் அவற்றை பதிந்து தருவார்கள். வீட்டிற்கு கொண்டு வந்து கேசட்டை போட்டு சத்தமாக ஒலிக்க விட்டால் ஊருக்கே கேட்கும் ஊரே கேட்கும்.

‘குரு சிஷ்யன்’ படத்து ‘ஜிங்கிடி ஜிங்கிடி எனக்கு’ ‘கண்டு பிடிச்சேன் கண்டுபிடிச்சேன்’ ‘வா வா வஞ்சி இளமானே’ பாடல்களோடு இன்னும் சில பாடல்களை எழுதிக் கொண்டிருந்த என்னிடம் முத்துதான் இந்த பாடலைச் சொல்லி பரிந்துரைத்தான். அப்படியொரு படத்தையோ பாடலையோ கேட்டிராத நான் அப்படியே எழுதிக் கொண்டேன், ‘உயிரே உயிரின் ஒளியே’ ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ’ – ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என. கூடவே ‘உயிரே உயிரே உருகாதே!’ போல சில பாடல்களையும் ‘தெற்கத்திக் கள்ளன்’ போன்ற கேட்டேயிராத படங்களின் பாடல்களை அவன் தர அதையும் எழுதிக் கொண்டு, சைக்கிள் மிதித்துப் போய் சக்தி மியூஸிக்கல்ஸில் தந்தேன். அடுத்த நாள் மதிய வேளையிலிருந்து புதிய பாடல்கள் அலறின மணக்குடியின் காற்றுவெளியில்.

ஒரு சிறுகுழந்தை மழலையில் சொல்லும் ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ… தங்கக் கட்டிப் பாப்பாவுக்கு தாலேலோ’ வரிகளில் தொடங்கும் பாடல் ஒரு சில நொடிகள் நம்மை நிறுத்தி விடும். முதல் முறை கேட்ட போது வியப்பு தந்தது. தொடர்ந்து அதே வரிகளை கே ஜே ஏசுதாஸ் பாட இளையராஜா தாலாட்டுவார். எத்தனை முறை எங்கள் ஊர் இந்தப் பாடலை கேட்டிருக்கும் என்று கணக்கும் இல்லை, நினைவும் இல்லை. எங்காவது உறங்கிக் கொண்டிருக்கும் போது, பாதியிலிருந்து இந்தப் பாடலை ஒலிக்க விட்டாலும் கூட, நொடியில் உணர்ந்து உடனே, ‘ரெண்டு தாய்க்கொரு பிள்ளை
என்று வாழ்ந்திடும் முல்லை
உன்னை யார் சுமந்தாரோ
உண்மை நீ அறிவாயோ!’ என்று ஏசுதாஸோடு சேர்ந்து பாடுமுடியும் என்ற அளவிற்கு உள்ளே பதிந்து உறைந்து போனது அந்தப் பாடல்.

நான் உறங்குவதாக நினைத்து எஃப்எம்மை சத்தமாக ஒலிக்க விடுகிறார் என் ஓட்டுநர்.

‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி பாப்பாவுக்கு தாலேலோ…
வாராமல் வந்த செல்வம்
வீடேறி வந்த தெய்வம்
தேடாமல் தேடி வந்த தாழம்பூச்சரம்’

கோடை விடுமுறை முடிந்து முத்து ஊருக்குப் போய் திருவண்ணாமலை டேனிஷ் மிஷனில் பள்ளியைத் தொடர்ந்தான். நான் புவனகிரி அரசு ஆண்கள் பள்ளியில்.

முத்து எதனால் மேல்நிலைப் பள்ளிக்கு மேல் தொடரவில்லை என்று தெரியவில்லை. கிணறு, பம்பு செட், நிறைய நிலம் என சோமாசிப்பாடியில் வாழ்ந்த குடும்பத்தில் விவசாயம் மேற்பார்வை என்று இறங்கி விட, நான் மன்னம்பந்தல் ஏவிசி் கல்லூரிக்குப் போய் விட்டேன்.

மீராவின் மஞ்சள் நீராட்டு விழாவிற்குப் போன போது என்னைப் பார்த்து, கண்கள் சிவக்க நிறைய குடித்திருந்த முத்து, ‘சிவா, சரக்கடிக்கறியா!’ என்று சிரித்தான்.  ராஜவேலு சித்தப்பாவுக்கும் மீராவிற்கும் புவனகிரியில் நடந்த கல்யாணத்திற்கு சோமாசிப்பாடியிலிருந்து காரெடுத்துக் கொண்டு நண்பர்களோடு வந்த முத்து கடைசி வரை மண்டபத்துக்கே வராமல் லாட்ஜிலேயே உறங்கி விட்டான் என்றார்கள்.

கோவையில் ஸ்டாக் எக்ஸேஞ்சில் நாவல்நெட்வேர் இஞ்சினியராக டெப்யூடேஷனில் நான் பணி புரிந்த நாட்களில் முத்துவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்று செய்தி வந்தது.

பல ஊர்கள் சில நாடுகள் என பிழைப்பிற்காக ஓடியதில் ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  முத்துவின் வாழ்வும்  முழுதாக மாறிப்போனது. முத்து யாரிடமும் பேசுவதில்லை எந்த நிகழ்விலும் கலப்பது இல்லை  என்றும் எல்லா நேரமும் குடிக்கிறான் என்றும் முத்துவின் மகளை அவனது மாமனார் வீட்டினரே படிக்க வைத்து ஆளாக்கினார் என்றும் தகவல்கள் வந்தன. ராஜவேலு சித்தப்பாவின் மனைவி மீரா சித்தி புற்று நோய் வந்து இறந்து போனார்.

மலர்ச்சி வகுப்பிற்காக திருவண்ணாமலையில் தங்கியிருந்த போது, மலர்ச்சி மாணவர் பழனியும் பேராசிரியர் ரவியும் லயன்ஸ் கிளப் கண் சிகிச்சை முகாமிற்கு நீங்கள் வரவேண்டும், அன்னதானத்தை தொடங்கி வைக்க வேண்டுமென்று எங்கோ கூட்டிப் போனார்கள். மரங்களும் திறந்த வெளி திடலும் கட்டிடமும் கொண்ட ஓரிடத்திற்குக் கூட்டிச் சென்றார்கள். அன்னதானத்தை தொடங்கி வைத்து விட்டு தூரத்தில் சுவரில் இருந்த பலகையைப் பார்த்ததும் சிறுவயது உணர்ச்சிகள் கிளம்பி வெளிவந்தன – ‘டேனிஷ் மிஷன் ஹை ஸ்கூல்’  முத்து என் மனதில் வந்து போனான்.

சில மாதங்களுக்கு முன்பு நீண்ட நாளைக்குப் பிறகு ராஜவேலு சித்தப்பாவின் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக சோமாசிப்பாடிக்கு போயிருந்தேன். வீட்டின் வெளியே படி மேடையில் பல ஊர்களிலிருந்தும் வந்திருக்கும் உறவினர்கள் அமர்ந்திருக்க, வீட்டின் முகப்பு கம்பி கிரில் கதவை சாத்திவிட்டு உள்ளே குப்பைகளை நிரப்பிக் கொண்டு நடுவில் உட்கார்ந்து என்னவோ செய்கிறான் தலை நரைத்த முத்து.

ஏன் முத்து இப்படி ஆனான்? பிஞ்சில் பழுத்த கதையாக சிறுவயதிலேயே தவறான சகவாசத்தால் எல்லாப் பழக்கங்களும் பெற்று கெட்டான். ‘ஒரு கல்யாணம் பண்ணா சரியாவான்!’ என்று அதை செய்ததில் இன்னும் பிரச்சினைகள் உருவாகின. வீட்டை அவன் துறக்க, வீடு அவனை துறக்க தனியனாக தனி உலகில் மனநிலைப் பிறழ்ந்தவனைப் போல வாழ்கிறான் முத்து.  யாராலும் முயன்றும் உதவ முடியவில்லை. முயன்றால் மூர்க்கமாகி விரட்டுகிறான்.

‘குப்பை பொறுக்கி பாட்டில் பொறுக்கி கொண்டாந்து வூட்ல கொட்டி பிரிச்சி கொண்டு போய் வித்து, அந்த காசுல குடிக்கறான்டா. குடிக்கறதுக்காக வேலை செய்யறான்!’ ராஜவேலு சித்தப்பா பக்கத்தில் உட்கார்ந்து சொன்னார்.

‘டேனிஷ் மிஷன்’ ‘டேனிஷ் மிஷன்’ மனதில் ஓட துக்கம் பொங்குகிறது.

‘டேய்… அவங்கிட்டல்லாம் போகாத, பேசாத. நிறைய பிரச்சினை ஆவும். நல்ல காரியம் நடக்குது. இவ்ளோ பேர் ஒக்காந்துருக்கமே எங்களுக்குத் தெரியாது?’ யாரோ என்னைத் தடுக்கிறார்கள். உணர்ச்சி என்னை உந்தி அந்த வீட்டின் முகப்பை நோக்கி நடத்திப் போகிறது.

‘சிவா… வேணாம் போகாதே!’ யாரோ சொல்கிறார்கள்.

அந்த வீட்டின் கிரில் கேட்டை பிடித்துக் கொண்டு உணர்ச்சி மேலிட அந்தப் பக்கம் பார்க்கிறேன். பீர் பாட்டில்களோடும் குப்பையோடும் அமர்ந்திருப்பவனை நோக்குகிறேன்.

‘முத்து… என்னைத் தெரியுதா?’

இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திக்கும், பேசும் என்னிடம் என்ன பேசுவான் இந்த முத்து!

‘ம் தெரியுதே’ என்றவாறு எழுந்தவன் என் முகத்தைப் பாக்காமலேயே அடுத்த நொடியில் ‘ஒரு அம்பது ரூவா காசு குடேன்!’ என்றான்.

கிட்டத்தட்ட கண்ணீர் விடுபவனைப் போன்ற நிலைக்குப் போன நான் பர்ஸில் நூறு ரூபாய் நோட்டு இல்லாததால் ஐநூறு ஒன்றை எடுத்தேன். முத்துவின் கண்கள் ஐநூறிலேயே இருந்தது. கம்பி இடைவெளி வழியே ஐநூறு தந்தேன். வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டு குப்பைகளுக்கு நடுவே போய் உட்கார்ந்து கொண்டான். கடைசி வரை என் முகத்தை நோக்கவே இல்லை அவன்.

ஆங்கிலமே அறியாத எங்களூரில், வெகு இயல்பாய் ஆங்கிலம் வந்து விழ முத்து பேசியது மனதில் ஓடுகிறது –  ‘நேச்சுரலி’ ‘தட்ஸ் த பாயிண்ட்’ ‘த பாயிண்ட் ஈஸ்’ ‘அப்ஸலூட்லி’ ‘இன் த சென்ஸ்’

‘குப்பை பொறுக்கி பாட்டில் பொறுக்கி கொண்டாந்து வூட்ல கொட்டி பிரிச்சி கொண்டு போய் வித்து, அந்த காசுல குடிக்கறான்டா. குடிக்கறதுக்காக வேலை செய்யறான்!’

சில மனிதர்கள் தங்கள் வாழ்வின் கம்பி கிரில் கதவை அடைத்துக் கொண்டு, தானும் வெளியே வர விரும்பாமல் உதவிக்கு வருபவர்களையும் அனுமதிக்காமல் உள்ளேயே இருந்து காலம் கழிக்கிறார்கள். 

சென்னையை நோக்கிப் பயணிக்கிறது கார். ஏசுதாஸ் குரலில் பாடல் தொடர்கிறது.

‘பொம்முகுட்டி அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக் கட்டிப் பாப்பாவுக்கு தாலேலோ…’

நான் உறங்கவே இல்லை.

– பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரை சாலை
19.03.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *