தடுப்பூசி போட்டுட்டோம்ல்ல!

கூட்டமே இல்லையென்றும் கூற முடியா பெருங்கூட்டம் என்றும் கூற முடியா எப்போதும் 20 பேர் இருந்தார்கள் என்று சொல்லலாம். 18 பேர் சரியாக சுவாசக்கவசம் அணிந்திருந்தாலும், வாயை மறைக்க வாய்க்கட்டாக அதை அணிந்திருந்த 2 பேரும் இருக்கவே செய்தனர்.

‘ பரமன் பச்சைமுத்தூ…’

‘யெஸ்!’

‘சார் உங்களுக்கு வேக்ஸினா, ஷீல்டா?’

‘வாட்…  கோவாக்ஸினையும்  கோவிஷீல்ட்டயுந்தான் இப்படி கேக்கறீங்களா?’

‘ஆமாம் சார்!’

‘கோவாக்ஸின்தான் வேணும் எனக்கு’

‘அப்படி அங்க உட்காருங்க சார், கூப்படேறேன்’

‘அண்ணா, அங்க உக்காரலாம்ணா’ என்ற பரியோடு சேர்ந்து நகர்ந்து சோஃபாவில் அமர்ந்து காத்திருந்தேன்.

ஈகா தியேட்டரின் அருகிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி போட வந்த இடத்தில்தான் இவ்வளவும். இரு நாட்களுக்கு முன்பு தடுப்பூசி எடுத்துக் கொண்ட குத்தாலிங்கம் செய்த ஏற்பாடில் நான் வந்தேன். எனக்கு ஆதார் அட்டை நகல் கொடுத்து பணம் செலுத்த புறப்பட்ட பரியை நிறுத்தி ‘உனக்கும் சேர்த்து பதிவு செய்திடு. பணம் எடுத்துட்டு போ!’ என்றதால் இருவருக்குமான பதிவையும் செய்திருந்தான்.

‘பரமன்…’

‘எஸ்…’

‘சார், இந்த ரூமுக்குள்ள போங்க சார்’

உள்ளே நுழைந்ததும் முழுநீள வெள்ளை பிபி சூட்டும் சுவாசக்கவசமும் தடித்த சட்டம் போட்ட கண்ணாடியும் அணிந்திருந்த செவிலியர், ‘உட்காருங்க, உங்க பேரு?’ என்றார்.
சரி பார்த்ததும், தனக்கு முன்பு மேசை மேல் இருந்த, சோடா குளிர்பானங்களை குளுமையாக வைத்திருக்கும் ஜஸ் பெட்டி போன்ற ஒன்றிலிருந்து ஒரு மிகச்சிறிய பாட்டிலை எடுத்தார்.

‘இதான், அந்த கோவாக்ஸினா! ம்ம்..’  ‘டீ ஷர்ட்ட ஏத்தனுமா மேடம்? எந்த பக்கம் போடனும்?’

சிரிஞ்சில் ஏற்றிக் கொண்டே ‘லெஃப்ட்’ என்றார்.

ஸ்பிரிட் நனைத்த பஞ்சை என் தோள் பட்டையில் தேய்த்தவாறே, ‘ஊசி போட்டதுக்கும் அப்புறம், தேய்ச்சு வுடக்கூடாது, தடவி வுடக்கூடாது! வலிச்சா கைக்கு ரெஸ்ட் குடுக்கனும்!’

‘சரிங்க மேடம்’

‘டேய் பரி ஃபோட்டோ எடுரா!’

படக்கென வந்தவர் ‘மஸ்ஸில டைட் பண்ணக்கூடாது, இல்லன்னா மருந்து நின்னுடும்.ரிலாக்ஸா இருக்கனும்!’ என்று சொல்லிக் கொண்டே நைசாக குத்தி கோவாக்ஸினை உள்ளே இறக்கி விட்டார்.

‘அடுத்து நீங்களா? உங்க பேரு?’

‘பரி சட்டையக் கழட்டு, நான் எடுக்கறேன் ஃபோட்டோ!’

இருவரும் வெளியே வர, ‘இருங்க. அந்த டேபிளுக்கு போய் வெப்கேம்ல படம்  எடுத்திட்டு உங்க வேக்ஸின்சர்ட்டிஃபிகேட் வாங்கிட்டு போங்க’

‘உங்க செல்ஃபோன் நம்பர் சொல்லுங்க. ம். ஓடிபி வந்துடுச்சா? அத சொல்லுங்க! இருங்க சர்ட்டிஃபிகேட் பிரிண்ட் ஆவது. தரேன்!’

‘சார் சரியா 28ஆம் நாள் அதாவது ஏப்ரல் 17 உங்களுக்கு செகண்ட் டோஸ் ஊசி. வந்துருங்க.’

எங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிகழ்வு இனிதே நிறைவேற வெளியே வந்தோம்.
நான்
60 வயதானவர்களுக்குத்தான் தடுப்பூசி என்றே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, 47 வயதான பரமன் பச்சைமுத்துவாகிய நானும் 24 வயதான பரிக்‌ஷித்தும் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோம் இன்று என்பது ஒரு தகவல்.

அரசு மருத்துவமனையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் ‘கோவாக்ஸின்?’ ‘கோவிஷீல்டு?’ என்று கேட்டு போடுகிறார்கள்.  தனியார் மருத்துவமனையில் எல்லா வயதினருக்கும் போடுகிறார்கள். என் மனைவியும் அத்தையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள போன வேறொரு மருத்துவமனையில் கோவிஷீல்ட் ஊசியைப் போட்டார்கள். இதே மருத்துவ மனையில் இருதினங்களுக்கு முன்பு குத்தாலிங்கத்துக்கு கோவிஷீல்ட் போட்டார்கள். நான் ‘கோவேக்ஸன்தான் வேணும்!’ என்று கேட்டு போட்டுக்கொண்டேன்.

கோவிஷீல்ட் போட்டுக் கொண்ட குத்தாலிங்கம், என் மனைவி, என் அத்தை ஆகியோருக்கு கை வலி வந்தது, ஒரு நாள் உடல் வலியும் காய்ச்சலும் வந்தன என்பதையும், கோவேக்ஸின் போட்டுக்கொண்ட மலர்ச்சி மாணவர்கள் சிலருக்கு லேசான கைவலி தவிர வேறு ஏதும் வரவில்லை என்பதும் தனிப்பட்ட விதத்தில் நான் கவனித்து அறிந்தது.

கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவ மனைகளில் ரூ 250க்கும் போடுகிறார்கள்.  ஆதார் அட்டை நகலை எடுத்துக் கொண்டு போகவும். அதை வைத்தே பெயர் பதிவு செய்கிறார்கள்.
கோவிஷீல்ட் / கோவேக்ஸின் – எந்த தடுப்பூசி வேண்டுமென முடிவு செய்யுங்கள், அது அந்த மருத்துவமனையில் இருக்கிறதா என கேட்டு தெரிந்து கொண்டு தொடருங்கள்.

போங்க…போங்க… போய் ஊசிய போடுங்க. ஊசிய போட்டாலும் இப்ப மாஸ்க்க போடுங்க, ஏப்ரல் 6 ஓட்ட போடுங்க!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
20.03.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *