‘ஐ’ – Movie Review – பரமன் பச்சைமுத்து

I - Copy

I

வாழ்வின் குறிக்கோளே வடிவழகு, உடற்கட்டு காப்பதுதான் என்று வாழும் ஒருவன், புற அழகை வைத்துப் புகழ் பொருள் சேர்க்கும் ஒரு புதிய உலகத்திற்குள் வரும்போது, கனவிலும் நினையாக் காதலும் கைகூடும் வேளையில், வாழ்வாய் நினைத்த வடிவமே சிதைந்துபோனால்… என்னவாகும்? ‘உடலழகை தாண்டி உள்ளத்தழகு பார்க்கப்படுமா?’ (‘அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை, மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா!’ என்ற ‘தாழையாம் பூ முடித்து – பாகப்பிரிவினை’ படப்பாடல் சிவாஜி மாதிரி) என்பதை ஹாலிவுட் எம்ஐபி ரக ஆட்களின் உதவியோடு எல்லாம் கலந்து மூன்று மணிநேரத்திற்கு தந்துள்ளார் ஷங்கர்.

ஆனானப் பட்ட ஷங்கரும், அசகாய விக்ரமும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்ற எகிரவைக்கும் எதிர்பார்ப்புகளை ஒரு பக்கம் தள்ளி வையுங்கள். மற்றதை பார்ப்போம்.

ஆமாம், படம் சறுக்கி விட்டது. அதற்காக மற்ற நல்ல விஷயங்களை விடமுடியாதே. பிசியின் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அளவிற்கான காட்சிகளை, ‘அய்லா.. அய்லா’ பாடலை காட்சிப் படுத்திய விதத்தை, ஒவ்வொரு ஃப்ரேமிற்காகவும் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கும் விக்ரமை என நல்ல சில விஷயங்களை விட முடியாது.

விக்ரம், அடுத்த நிலைக்கு பயணித்து விட்டார்.

விக்ரமின் பாத்திரம் சொல்வதுபோல், எமி ஜாக்சன் ஆப்பிள் மாதிரி இருக்கிறார். அரை குறை ஆடையிலும் அவ்வளவு ஆபாசமாய் தெரியவில்லை. நடிப்பு பெரிதாய் சொல்லிக்கொள்ளும் படி இல்லையென்றாலும், அவரைத் தவிர இந்த ஆடைகள் வேறு யாருக்குப் பொருந்தும் என்று யோசித்துப் பார்க்க முடியவில்லை.

விக்ரம் படம் முழுக்க இருக்கிறார்.

ஷங்கர் பாடல் காட்சிகள் படமாக்கப் பட்ட விதத்தில் மட்டும் இருக்கிறார்.

சுஜாதா உடனில்லை என்பது பலவீனமாகிப் போன திரைக்கதையில் தெரிகிறது.

 

வெர்டிக்ட்: ‘ஐ’ – ‘இன்னும் சிறப்பான படங்களை ஷங்கர் தரவேண்டும், அதற்காக ஒரு முறை பார்ப்போமே!’

திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

1 Comment

  1. Poornima Neethu

    Perfect!

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *