அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளை, வகுப்புக்கான சிந்தனைகள் வந்தால், வகுப்பு எடுத்த பிறகு சிலவற்றை என சில நேரங்களில் குறிப்பு எழுதுவதுண்டு நோட்டுப் புத்தகத்தில். பள்ளி நாட்களிலிருந்து எழுதுவது பிடிக்கும். லினக்ஸ், மைக்ரோசாஃப்ட், சிஸ்கோ, சிவபுராணம் என பல ஆண்டுகளாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.
எழுதுவதற்காகவே விதம் விதமாக நல்ல நோட்டுகளை வாங்கி வைத்திருப்பேன். நல்ல நீளமான நோட்டுக்களும், நல்ல தடிமனாக எழுதும் கறுப்பு மை பேனாக்களும் எப்போதும் எக்ஸ்ட்ரா ஸ்டாக் உண்டு என்னிடம். மகள்கள் கல்லூரி படித்த காலங்களில், ‘அப்பா, உங்கிட்ட ஏதும் நோட் இருக்கா?’ என்று உறுதியாக நம்பி கேட்டு, நல்ல நோட்டு ஒன்றைத் தந்ததும் ‘நைஸ்! தேங்க்யூ!’ என்று மகிழ்ந்து பெற்று குதித்துச் சென்றனர். அப்படி நோட்டில் எழுதுவதின் தொடர்ச்சியே ParamanIn.com ஆக மாறியது. எழுதுவது என் இயல்பு.
ஆனால், இப்போதெல்லாம் எழுத நோட்டை எடுக்கும் போது அப்பா ஞாபகம் வருகிறது. தன் கதைப்பாட்டு கச்சேரிகளுக்கான ஸ்கிரிப்டை சிறு சிறு நோட்டுகளில் இரண்டு வண்ண மை கொண்டு எழுதிக் கொள்வார். ‘ப்ராமிட்’ எனப்படும் இந்நோட்டுகளை வெள்ளைத்தாள்கள் கொண்டு தடிமனான அட்டைக் கொண்டு துளையிட்டு நூல் மூலம் கட்டி அவரே தயார் செய்வார். ‘வாலி வதம்’ ‘வள்ளித் திருமணம்’ ‘காரைக்கால் அம்மையார்’ என்று அட்டையில் தலைப்பை எழுதி சிவப்பு மையால் அடிக்கோடிட்டு வைத்திருப்பார்.
அவருக்காக அவரே எழுதிய அப்பாவின் அந்த குறிப்பு நோட்டுகள் என்னவாயின, யாருக்குப் பயன்படும் அவை? என்பது போல பல கேள்விகள் என்னுள்ளே வருகின்றன.
சில நிமிடங்களில் மீண்டு மறுபடியும் எழுதுகிறேன்.
– பரமன் பச்சைமுத்து
11.06.2023