அம்மாவின் தவம்…

wpid-images.jpg

image

சிலர் சிலவற்றை செய்யும் போது, வெறுமனே அதை பார்க்கும் நம்மையும் அது தொற்றிக் கொள்கிறது. உணர்ந்திருக்கிறீர்களா? சிலர் பிரார்த்தனை செய்யும் பாங்கு,  வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு உள்ளே வந்து ஒரு இறையுணர்வை ஏற்படுத்திவிடும். ஒரு அழகான குறத்தி அதை செய்துவிட்டாள் இன்று எனக்கு.

தேசிய நெடுஞ்சாலையில் ஓரத்து விடுதியில் தேநீர் அருந்த இறங்கிய போது அவளைப் பார்த்தேன். விடுதிக்கு வெளியே வெறுந்தரையில் வரிசையில் அமர்ந்து பிச்சையெடுப்பவள் அவள். சேலை தலைப்பால் முக்காடிட்டிருந்ததால் முடியின் நிறம் கூட தெரியவில்லை. அவள் முகமும் அதற்கு மிக அருகில், எதிரில் நிற்கும் அவள் குழந்தையின் முகம் மட்டும் தெளிவாய் தெரிந்தன.  மூக்கோடு மூக்கை உரசியும் விலக்கியும் அன்பில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் பாம் வெடித்தால் கூட தெரியாது என்னும் அளவில் சுற்றியுள்ள வேறு எதைப் பற்றியும் பிரக்ஞையின்றி கண்களால் ஒருவரை ஒருவர் பருகிக் கொண்டிருந்தார்கள். அம்மாக்களைப் பொறுத்தவரையில் தங்களின் பிள்ளைகள்தான் உலகின் மிக அழகானவர்கள். அவர்கள் பிள்ளைகளை கண்களின் வழியே பார்ப்பதில்லை போல, இதயத்தின் வழியே பார்ப்பார்கள் போல.  உலகை மறந்து ஒரு தனி உலகில் இருந்தார்கள் அவர்கள்.

தன் பிள்ளையைப் பார்த்து மகிழ்ச்சியில் முகமெல்லாம் ஒரு மலர்ச்சி அவளுக்கு. அன்பு வந்தவுடன் அழுக்கு முகம் பிரகாசமாய் ஆகிவிடுகிறது. பிரபஞ்ச அழகியாய் தெரிந்தாள் அவள். சாமுவேல் மேத்யூ பக்கத்திலிருந்து படமெடுத்திருந்தால் தரணியின் தலைசிறந்த படமாய் ஆகியிருக்கும் அது.
கண நேரங்களில் கண்ட இந்த நிகழ்வு கலையாத ஓவியமாய் உறைந்துவிட்டது உள்ளே.  தேநீர் அருந்திவிட்டு திரும்பி வரும்போது அந்தத் தாயை காணோம்.

அவளிடம் கண்ட அந்த தாயன்பு அம்மா நினைவை கொண்டு வந்துவிட்டது.

குடமெடுத்துக் கொண்டு தண்ணீர் எடுக்கப்போன வால்மீகி நாயகி, குரங்கு ஒன்று குட்டியை கொஞ்சுவதைப் பார்த்து, உணர்வு வந்து குடத்தைப் போட்டுவிட்டு குழந்தையை நோக்கி ஓடினாளாமே! அப்படியொரு உணர்வு.

அம்மா…!
அருகிலிருக்கும் போது அருமை தெரியாமல், அருகிலில்லாத போது ஆழமாய் புரியும் பல விஷயங்களில் முதன்மையான விஷயம், அம்மா.  உங்கள் அம்மாவை கவனித்திருக்கிறீர்களா? உங்கள் அம்மா, எனது அம்மா, ஏன் எல்லா அம்மாக்களும் ஒன்றுதான்.  அம்மாவுக்கு எப்போதும் வேலைதான்.
கல்யாணம், கச்சேரி, பண்டிகை என்றால் விடியற்காலை மூன்றறைக்கே அலாரம் எதுவுமின்றி எழுவார்கள். நாள் முழுக்க நிற்காமல் பரபரவென்று இயங்குவார்கள். கால் வலிக்கிறதா, கை வலிக்கிறதா என்று நின்று பார்க்க தனக்கு நேரமில்லாமல் மற்ற எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்வார்கள். இரவு வெகு நேரம் ஆகியும் உழைத்துக் கொண்டேயிருப்பவர்கள், ஒரு வழியாக பாதி இரவிற்கு படுக்க வருவார்கள். படுக்கையிலிருந்து திடீரென எழுந்து,  பிள்ளையை நினைத்துக் கொண்டு கேட்காமலேயே சுடுதண்ணீர் வைக்க சமையலறையில் நிற்பார்கள்.   குடும்பத்தோடு எல்லோரும் எங்கோ போய் அடித்துப் போட்டதைப் போல் தூங்க வேண்டும் என்று அசதியோடு அர்த்த ராத்திரியில் வீட்டுக்கு வருவார்கள். ஆண்கள் எல்லாம் படுக்கைக்குக் போனாலும், அதே அளவு அசதி கொண்ட அம்மா மட்டும் வேலை செய்வார்கள், தன் குடும்பத்திற்காக.

பெரிய பண்டிகை, கல்யாணம், கச்சேரி என்று இழுத்துப் போட்டுக்கொண்டு  எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு எல்லாரும் உறங்கிய பின் உறங்கப் போகும் அம்மா, அதற்குப் பிறகு செய்வதைக் கவனித்திருக்கிறீர்களா?
‘இன்னைக்கு முழுக்க எவ்ளோ வேல செய்ஞ்சோம்! கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம் விடு!’ என்பதே இல்லை அம்மாக்களின் அகராதியில்.  எவ்வளவு நேரம் கழித்துப் படுக்கைக்குப் போனாலும், இன்று இமயமலையளவு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்தாலும், நாளை காலை ஒன்றுமே நடவாதது போல் எப்போதும் போல் புதிதாய் ஆரம்பிப்பாள் அம்மா.

எப்படி முடிகிறது அவர்களுக்கிது! ‘பால் நினைந்தூட்டும் தாயினும்’ என்று இதனால்தான் பதிகம் பாடினார்களோ!

அம்மாவை பொறுத்தவரை இதெல்லாம் தனது வேலை என சில விஷயங்களை தானாக ஏற்றுக் கொள்கிறார்கள். பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த விஷயங்களில் செய்ய வேண்டியது ஏதாவது என்று வந்து விட்டால் அவர்கள் ‘ஓய்வ’ ‘உடல்’ ‘உல்லாசம்’ என்று எதையும் பார்ப்பதில்லை.  தனக்கான பொறுப்புகள் என்று ஏற்றுக் கொண்ட விஷயங்கள் வரும்போது, மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தன்னையே தருகிறார்கள். உண்மையில், ஒரு தவம் போல செயல் புரிகிறார்கள்.

ஒரு பெண்ணாக இருக்கும் போது, ஒரு மாதிரியாக இருப்பவள், அம்மாவாக இருக்கும் போது தன்னை புறந்தள்ளி வேறு மாதிரி உயர்கிறாள்!  அம்மாக்கள் ஓர் அதிசயம், ஓர் அற்புதம், அரிய படைப்பு.

எவ்வளவு பெரிய நிகழ்வுகள் நடந்தாலும், அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அடுத்த நாள் பணிகளை தொடரும் அம்மாவின் மீது பெரிய மரியாதை வருகிறது.

(‘மலர்ச்சி தினம்’ ‘மலர்ச்சி விருதுகள்’ ‘மனப்பலகை’ நூல் வெளியீடு, இவையெல்லாவற்றையும் நிகழ்த்த ஒரு வார உழைப்பு, ஓராண்டாய் செய்த செயல்களின் பட்டியல், அதே நாள் மாலை முழுமலர்ச்சி பேட்ச்….என்று எதையும் யோசிக்க முடியவில்லை இப்போது, அம்மாக்களை நினைத்துப் பார்த்தபிறகு! ‘இதுதான் நம்ம வேலைன்னு ஆயிட்டது, அடுத்த நாள தொடரு!’ என்று புதுச்சேரி நோக்கி தெளிவாய் பயணிக்க முடிகிறது)

நன்றி அம்மா!

பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
23.01.2016
image

1 Comment

  1. Veeraragavan

    அருமை !

    அப்படிப்பட்ட உய்ர்ந்த அம்மாவை “சித்தர்களின் குரல்” ஒரு பதிவு இப்படி எழுதி இருந்தது

    https://www.facebook.com/1615171208699125/photos/a.1615182205364692.1073741828.1615171208699125/1709418949274350/?type=3&theater

    அதற்கு நான் ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேன்
    முடிந்தால் வசிக்கவும் !

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *