நண்பன் என்றதும்…

​ஊரின் ஒதுக்குப்புறமாய் குளத்து மூலையில் எங்கள் வீடு இருந்தது அப்போது. வீட்டு வாசலில் எப்போதும் தண்ணீர் ஓடும் ஒரு சிறு வாய்க்கால். ஒரு மரத்தை குறுக்கே போட்டு பாலமாக மாற்றி வைத்திருந்தார் அப்பா. பின்புறம் செட்டியாரின் வயல். அந்த என் அரைக்கால் சட்டை வயதின் பொழுதுகளில் பெரும்பாதி ஆளவந்தாரால் நிரப்பப்பட்டவை.
மூன்று வீடுகள் தள்ளி இருந்த ராமக்காரர் வீட்டில் தங்கி, மணக்குடி கிராமப் பள்ளியில் படித்தான் ஆளவந்தார். அவனும் எப்போதும் நெற்றியில் வெள்ளையிலும், சிவப்பிலும் நாமம் இட்டிருப்பான். ‘ஏய் நாமம்!’ என்று எவனாவது அவனை அழைத்தால், அவன் தீர்ந்தான். அவனை அடித்து விட்டுத்தான் மறுவேளை ஆளவந்தாருக்கு. கட்டிப் பிடித்து அடித்து சண்டை நடக்கும். சண்டையில் யாராவது ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே சட்டை பிய்ந்துவிடும்.  ஆளவந்தாரின் சட்டை அதிகம் பிய்ந்தது எனக்காகத்தான் இருக்கும்.  அவன் மூன்றாவது படிக்கும் போது நான் இரண்டாம் வகுப்பு படித்தேன். குளத்து மூலையிலிருந்து அரை கிலோமீட்டருக்கு மேல் நடந்து பள்ளிக்கு தனியாகப் போவதால் ‘சிவாவை (அதுதான் எனது பெயர், அங்கே!) பார்த்துக்கோ!’  என்று யாரோ சொல்லி வைக்க, எனக்கு ஒரு அடியாள் போலவே செயல்படுவான் அவன். அப்படிப் பார்த்துக் கொள்வான் என்னை. என்னைப் பார்த்து அவன் விபூதி பட்டைப் போட்டதும், அவனைப் பார்த்து நான் என் அக்காவின் சாந்துப் பொட்டெடுத்து நீண்ட நாமமிட்டதும் நடந்தது. இருவீட்டிலும் திட்டுகள் கிடைத்தன. 
பாட்டிக்குத் தெரியாமல் வீட்டின் பின்னேயிருந்த இலவமரத்துக் காய்களை உண்டி வில் வைத்து அடித்துப் பார்த்தது, கிளிகொத்திப் போட்ட கொடுக்காப்புளி பழங்களை தவிர்த்து நாமே ஏறி பறிப்போமே என்று முயற்சித்து மரத்தின் முள்களால் உடலை பல இடங்களில் கிழித்துக் கொண்டு ஒரு சில துவர்க்கும் பிஞ்சுக்காய்களை கடித்து வேட்டையாடியது போல் மகிழ்வது (உடலில் காயங்களை பார்த்துவிட்டு அன்று இரவு அம்மாவிடம் பெரிய பூசை கிடைக்கும் என்பது வேறு விஷயம்), வீட்டிற்குத் தெரியாமல் பேயைத் தேடி வடமேற்கே வயல்களின் வழியே பல கிலோ மீட்டர்கள் நடந்து போய் வயலாமூர் என்ற ஊரில் ஏறி களைத்துப் போய் திரும்பி வருவது, அல்லிக் கொடிகள் நிறைந்த பாப்பாக் குளத்தில் மூச்சைப் பிடித்து மூழ்கி அடியாழத்திற்குப் போய் அல்லிக் கொடியின் வேரில் இருக்கும் கிழங்கைப் பறித்துக் கொண்டு வெளியில் வந்து எம்ஜியார் பட துவக்கக் காட்சியில் வருவது போல் ‘வெற்றி வெற்றி!’ என்று மூச்சிறைக்க கத்துவது, இரை முழுங்கி மெதுவாய் ஊர்ந்து செல்லும் தண்ணீர்ப் பாம்பை அடித்துக் கொன்று விட்டு சூரனை வேட்டையாடிய முருகனாக பாவித்துக் கொள்வது, கிழக்கு வெளியில் உள்ள ஏதோவொரு பனைமரத்தில் ஏறி யாரும் வருவதற்குள் பனங்காய் பறிப்பது, பேய் இருக்கிறது என்று நம்பப் பட்ட மரத்தில் ஏறி நாவல்பழம் பறிப்பது (‘முருகா… முருகா… சொன்னா பேய் போயிடும்டா’ என்பது என் அவ்வயது வியாக்கியானம்) என ஆளவந்தாரோடு சேர்ந்த என் பொழுதுகள் எல்லாம் சாகசங்கள் நிறைந்தவை.  அவனோடு நான் இருந்த தருணங்கள் எல்லாம் என்னுள்ளே துணிச்சல் நிரம்பி தளும்பி வழிந்திருக்கிறது. 
மேல் நிலைப்பள்ளிக்கு வந்த போது, அவன் கீரப்பாளையத்திலும், நான் புவனகிரியிலும் சேர்க்கப்பட்டோம். பள்ளிவிடுமுறை நாட்களில்தான் சந்திப்போம். ஊரெல்லாம் கண் நோய் பரவிக் கொண்டிருந்தது. நானும் அவனும் வடக்குவெளிக்குப் போய் அங்கே மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒன்றைப் பிடித்து அதன் காம்புகளை பிதுக்கி எங்கள் கண்களில் ஆட்டுப் பாலை பீச்சிக் கொண்டோம்.
ஆளவந்தார் அதன் பிறகு படிக்கவில்லை. தனது அண்ணனின் சைக்கிள் கடையை கவனித்துக் கொண்டான். கல்லூரி விடுமுறையில் வரும்போதெல்லாம் சைக்கிள் எடுத்துக் கொண்டு போய் அவனை பார்த்து வருவேன். 
என் கல்யாணத்திற்கு வந்து ஒரு ராகவேந்திரர் சிலை ஒன்றை தந்து விட்டுப் போனான். சென்னை, பெங்களூர், வேறு தேசங்கள் என்று ஓடிய காலங்களில் ஊருக்கு வரும்போதெல்லாம் பைக்கில் போய் பார்ப்பேன் அவனை. வேதாத்திரி மகரிஷி, வள்ளலார், இயற்கை உணவு என்று இறங்கியிருந்தான். அவன் மாமாவும் அத்தையும் இறந்த போது, அவர்கள் வீடிருந்த மனையையும் அதையொட்டிய வயலையும் என்னிடம் விற்க ஆசைப்பட்டான். எப்போதாவது, திடீரென அவனிடமிருந்து ஓர் அழைப்பு வரும், பேசுவோம். 
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. ‘சிவா, ஆளவந்தார் செத்துட்டாண்டா! மெட்ராஸ்லதான் பெரிய ஆஸ்பத்ரில உயிர் போயிரிச்சி. கார்ல  வச்சு கொண்டாந்தாங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி, ஒரு வாரம் ஆயிடிச்சி!’.  மனம் சங்கடப்பட்டது. அழ வேண்டும் போல் இருந்தது. அழுகை வரவில்லை. ஆளவந்தார் எங்கேயோ இருந்துகொண்டுதான் இருக்கிறான் என்றே தோன்றியது. இன்றுவரை அவன் இறந்ததாகவே தோன்றவில்லை எனக்கு. 
ஆளவந்தார் என்னோடு இருந்த பொழுதுகள் யாவும், என்னுள்ளே துணிவை ஊற்றிய பொழுதுகள். நான்காம் வகுப்பு படிக்கும் போது ‘எம்ஜியார் காளை’ என்றழைக்கப்பட்ட பெரிய படையாச்சி வீட்டு வெள்ளை மாடு  பள்ளியின் வழியே நடந்து சென்றபோது, எதிரில் நின்று அதன் மூக்கணாங்கயிறை பிடித்தேன். ராமச்சந்திரனும், குமரேசனும் பயந்து ஓடிவிட அய்யப்பனும் முத்துவும் அசந்து நின்றார்கள்.  ஆளவந்தார் பின்னால் இருக்கிறான் என்ற நினைப்பின் துணிவிலேயே அதைச் செய்தேன். விஷயம் வகுப்பறைக்குப் போய் ரெட்டியார் வாத்தியாரும், ஐந்தாம் வகுப்பு சம்மந்தம் வாத்தியாரும் கூப்பிட்டு கண்டித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. 
ஆளவந்தாரில் தொடங்கி சரவணன்,  அர்ச்சுணன், ராஜாராமன், செந்தில், ஜோ, பரமகுரு, திருநீலகண்டன், செந்தில், முரளி, ராமு, முகுந்தன், செந்தில், ராம்ஜீ, கிருஷ்ணன், சாமுவேல், காதர் என நண்பர்களால் நிறைந்ததே என் வாழ்க்கை.  ஒன்று புரிகிறது.

பெரும்பாலான கடினமான தருணங்களை எல்லாம் ‘நண்பன் இருக்கிறான் பின்னால்’ என்ற ஒரு எண்ணம் தந்த துணிவினாலேயே எதிர்கொண்டு கடந்திருக்கிறேன். எனக்கு மட்டுமல்ல, பலரது வாழ்விற்கும் இது பொருந்தும் என்பது என் எண்ணம். 
நண்பன் என்றதுமே ‘கூட ஒருவன் நிற்கிறான்’ என்ற உணர்வு வந்து விடுகிறது. 
ஒவ்வொரு முறை சிதம்பரத்திலிருந்து புவனகிரிக்கு பயணிக்கும் போதும், வெள்ளாற்றின் பாலத்திற்கு சற்று முன்பு கீரப்பாளையம் வளைவைக் கடக்கையில் கண்கள் ஆளவந்தாரின் சைக்கிள் கடை இருந்த இடத்தை பார்க்கும். ஆளவந்தார் இறக்கவில்லை.  அவன் தந்த துணிவை என்னுள்ளேயும், அவன் தந்த ராகவேந்திரர் சிலையை என் வீட்டு ஃபிரிட்ஜ்ஜின் மீதும் இன்றும் பார்க்கலாம். 
#நண்பர்கள் தின வாழ்த்து!
பரமன் பச்சைமுத்து

ஆர் ஏ புரம்,

07.08.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *