திருவரங்க வீதியோரத்துப் படிகட்டுகளில்…

​திருமண ஒப்பந்த விழா ஒன்றிற்காக வந்து திருவரங்கத்தில் உலாத்திக் கொண்டிருக்கிறேன்.  உலாத்தவில்லை, இடதும் வலதும் குறுக்கும் நெடுக்கும் என திருவரங்கத்தை கடைந்து கொண்டிருக்கிறேன். 

எந்த இலக்குமில்லை. உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி காவிரி மண்ணில் காவிரி மணல் (மணல்தான், நீரில்லை!) பட்ட காற்றில் காலையிலேயே ஆயிற்று. 

வேட்டியை தழையவிட்டு வீதியின் ஓரத்து படியொன்றிலமர்ந்து வருவோர் போவோரை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

சேர்ந்திருந்தால் சினிமா என்பது முகுந்தனுக்கும் எனக்குமான எழுதப்படாத ஒப்பந்தம். ஒரு வேளை முகுந்தன் இங்கு இருந்திருந்தால் நேற்று இரவு ‘குற்றமே தண்டனை’யோ வேறு எதுவோ பார்க்கப் பட்டிருக்கலாம்.
திருவரங்க அதிகாலை ரம்மியம். பல ஊர்கள் பல மாநிலங்களிலிருந்து வரும் அரங்கன் அடியார்களை வரவேற்க தயாராகும் உள்ளூர் வியாபாரிகள், குளித்து முடித்து கோயிலை நோக்கி விரைந்து கொண்டேயிருக்கும் பக்தர்கள் என ஓர் ஒழுங்கில் இயங்குகிறது திருவரங்கம்.
 ‘ஏனூ… கண்ட்ட எட்டி?’, ‘கொறச்சி அறியோ… அம்மே!’, ‘யே மண்வாள மாமுன்னீ மந்திர் ஹே!’ ‘சமயபுரம் மாரியம்மன பாக்க நாலுதாரம் நான் வந்திருக்கேனுங்க!’ என்றெல்லாம் ஒலிக்கும் வெளியூர்ப் பயணிகளின்  குரல்களை தாண்டி  ஒலிக்கின்றன உள்ளூர் கிளிகளின் குரல்கள். 

வெள்ளைக் கோபுரமருகில் நிறைய கிளிகள் இருக்கின்றன. இது போதுமே நமக்கு! 
வீதியில் போகும் பெரும்பாலான கார்களின் உள்ளே  ஒலிக்கும் எந்த இசையும் வெளியே இருக்கும் நமக்கு ஒரே மாதிரி தாளத்தில் கேட்பதைப் போல, இவைகள் என்ன பேசினாலும் எவ்வளவு செப்பினாலும், அவை வெறும் ‘கீக்கீ…!’தான் நமக்கு.
பரமன் பச்சைமுத்து 

திருவரங்கம்

04.09.2016

Facebook.com/ParamanPage 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *